என்னுடைய கைப்பேசியைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போதே, தெருவில் நடந்து செல்கின்ற எவரையும் சரியாகக்கணித்து விடுவேன். எப்படி இவர்கள் தங்களை மோதவருகின்ற வாகனத்தைக் குறித்துத் தெரியாமலிருக்க முடியும்? நான் என்னையே கேட்டுக் கொள்வேன். அவர்கள் தங்கள் பாதுகாப்பைக் குறித்து கவனம் கொள்வதில்லையா? ஒருநாள், ஓர் நடைப்பாதையின் நுழைவாயிலைக் கடக்கும் போது நான் ஒரு குறுஞ் செய்தியில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது எனது இடப்புறமாக வந்த ஒரு வாகனத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஆனால், அந்த ஓட்டுநர் என்னைக் கவனித்து, சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு என் நன்றி. நான் என்னை நியாயப்படுத்தி, பிறரை குற்றப்படுத்தி பேசியது எனக்கே வந்துவிட்டது. நான் பிறரை நியாயந்தீர்த்தேன். அதே தவறை நான் செய்து அதே தீர்ப்புக்குள்ளானேன்.

என்னுடைய இந்த மாய்மாலமான எண்ணத்தைக் குறித்துத்தான் இயேசுவும் மலைப்பிரசங்கத்தில், “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்” (மத். 7:5) என்றார். என் கண்ணில் ஒரு பெரிய கட்டை போன்ற ஒரு குருட்டு பகுதியிருக்கின்றது. அதன் வழியே நான் பிறரை என்னுடைய குறைவான நியாயத்தீர்ப்பின் மூலம் குற்றப்படுத்துகிறேன்.

“நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” (7:2) எனவும் இயேசு கூறுகின்றார். நான் ஒரு காரின் முன்புறம் நடந்து சென்ற போது, விரைவாக நிறுத்திய அந்த ஓட்டுனரின் முகத்திலிருந்த வெறுப்படைந்த பார்வையை நினைத்துப் பார்த்தேன். தங்கள் அலைபேசியில் மூழ்சியிருக்கும் பிறர் மீது நான் செலுத்தும் வெறுப்படைந்த பார்வையை அது நினைவுபடுத்தியது.

நாம் ஒருவருமே நேர்மையானவர்களல்ல. ஆனால், நாம் சில வேளைகளில் அதை மறந்து, பிறரைத் தீர்ப்பிட அவசரப்படுகின்றோம். நம் அனைவருக்கும் தேவனுடைய கிருபை வேண்டும்.