கடந்த இரண்டு வருடங்களில், என் குடும்பத்திலிருந்த இரண்டு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களுக்குத் துணையாக நான் இருந்தபொழுது ஒரு நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எப்பொழுதும் மருத்துவரிடமிருந்து ஒரு தெளிவான பதிலையே நான் எதிர்பார்த்தேன். ஆனால், அது அரிதாகத்தான் கிடைத்தது. ஒரு தெளிவான பதிலைக் கூறுவதற்குப் பதில் அநேகந்தரம் நம்மை காத்திருக்கும்படி கூறிவிடுகிறார்கள்.
அடுத்த மருத்துவ சோதனையில் என்ன நிகழுமோ என்று எண்ணத்துடன் ஒரு நிச்சயமற்ற நிலையின் பாரத்தை சுமப்பது மிகக் கடினமானது. மரணம் நம்மை பிரிப்பதற்கு முன் நம்மிடம் இருப்பது சில வாரங்களா, மாதங்களா அல்லது வருடங்களா? வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். வியாதியின் அறிகுறி அதை வெறுமனே வெளிக்கொண்டு வருகிறது. மனதிற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மரணத்தைப் பற்றிய எண்ணங்களை புற்றுநோய் போன்ற வியாதிகள் முன்னே கொண்டுவந்து நிலையற்ற வாழ்வை பற்றி சிந்திக்க தூண்டுகிறது.
நம்முடைய நிலையற்ற வாழ்வை எண்ணிப் பார்த்ததும், நான் மோசே ஜெபித்ததுபோல் ஜெபிக்கத் துவங்கினேன். நம் வாழ்க்கை காலையிலே முளைத்துப்பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போகும் புல்லுக்கு ஒப்பான போதிலும் (வச. 5-6), தேவனே நம் நித்திய அடைக்கலமாக இருக்கிறார் (வச. 1) என்று சங்கீதம் 90 சொல்கிறதை அறிந்து, நம்முடைய நாட்களை எண்ணும் அறிவில் வளரும்படியாகவும், ஞான இருதயமுள்ளவர்களாகும்படியும் மோசேயை போல் நாமும் ஜெபிக்கலாம். அப்படிச் செய்யும் பொழுது புல் போன்று குறுகியகால வாழ்க்கை இருந்தாலும், நம்முடைய கைகளின் கிரியைகளை அவரே உறுதிப்படுத்துவார் (வச. 17).
கடைசியாக, நம்முடைய நம்பிக்கை மருத்துவரின் ஆய்வறிக்கையில் இல்லை, “தலைமுறை தலைமுறையாக” நமக்கு அடைக்கலமாக இருக்கின்ற தேவன் மீதே இருக்கின்றது.
தேவன் மேல் நம்பிக்கை வைக்கும்பொழுது நம்முடைய நிலையற்ற வாழ்வின் நிஜத்தினை எதிர்கொள்வது இலகுவாகிறது.