பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த எனது சிநேகிதியிடம், ஓய்வுபெற்ற பின் அவளது வாழ்க்கையில், அவள் பயப்படும் காரியம் என்ன என்று நான் கேட்டபொழுது, “நான் ஓய்வு பெற்றபின், கையில் பணம் தீர்ந்து போகாமல் இருக்கவேண்டும் என்பது குறித்து கவனமாக இருப்பேன்” என்று கூறினாள். அடுத்த நாள் நான் எனது நிதி ஆலோசகரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, பணம் தீர்ந்து போகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தார். நமது எதிர்கால வாழ்க்கைக்கு போதுமான நிதி இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பான சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புகிறோம்.
பாதுகாப்பான உலக வாழ்க்கைக்காக எந்தவிதப் பொருளாதாரத் திட்டமும் உறுதி அளிக்காது. ஆனால், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு பின்னால் உள்ள வாழ்க்கைக்கும் நித்திய நித்தியமாய் நமக்கு உறுதி அளிக்கும் திட்டம் ஒன்று உள்ளது. “அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:4) என்று அப்போஸ்தலர் பேதுரு அதை விளக்குகிறார்.
நம்முடைய பாவங்களை மன்னிக்க இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, தேவனுடைய வல்லமையினால் நித்திய சுதந்திரம் நமக்குக் கிடைக்கிறது. அந்த சுதந்திரத்தினால் நாம் நித்திய காலமாய் வாழ்வோம். நமது தேவைகள் சந்திக்கப்படாத நிலைமை நமக்கு ஒருக்காலும் ஏற்படாது.
ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை நம்மால் தீட்டுவதற்கு முடிந்தால், அது நல்லது தான். ஆனால், ஒருக்காலும் தீர்ந்து போகாத நித்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது அதைவிட மிக முக்கியமானதாகும். அது இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.
பரலோகத்தைப்பற்றிய வாக்குத்தத்தமே நமது நித்திய நம்பிக்கை.