ஜலதோஷத்தாலும், ஒவ்வாமையினாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு சத்தங்கள் எதையும் தெளிவாகக் கேட்க முடியாமல், நீருக்குள் மூழ்கி இருந்ததுபோல உணர்ந்தேன். அநேக வாரங்களுக்கு சத்தத்தை தெளிவாக கேட்க இயலாமல் கஷ்டப்பட்டேன். அவ்வாறு நான் கஷ்டப்பட்ட பொழுதுதான் சாதாரண நாட்களில் தெளிவாகக் கேட்ககூடிய தன்மையை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்ததை உணர்ந்தேன்.
சிறுவனான சாமுவேல் ஆலயத்தில் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, அவனது பெயரைச் சொல்லி கூப்பிட்ட சத்தம் கேட்டபொழுது, அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்தான் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக வந்து நின்றான். மூன்றாவது முறைதான், தேவன் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி உணர்ந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாக இருந்தது (வச. 1). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும் பழக்கமில்லாதிருந்தார்கள். ஆனால், தேவனுடைய சத்தத்திற்கு எவ்வாறு மாறுத்தரம் கூறவேண்டுமென்று ஏலி சாமுவேலுக்குப் போதித்தான் (வச. 9).
சாமுவேலின் காலத்தில் இருந்ததை விட இந்தக் காலங்களில் தேவன் அதிகமாக பேசுகிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1–2) என்று எபிரெயருக்கு எழுதின நிரூபம் கூறுகிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்து நமக்கு கற்பித்தவைகளில் வாழ, நம்மை வழிநடத்துகிற, பரிசுத்தாவியானவர் பெந்தெகொஸ்தே நாளன்று அருளப்பட்டதைப்பற்றி வாசிக்கின்றோம். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய ஜலதோஷத்தின் பொழுது நான் தண்ணீருக்கு அடியில் உள்ளவளைப் போல, எதையும் தெளிவாக கேட்க முடியாமல் இருந்தேனோ, அது போலவே நாம் இருக்கிறோம். கர்த்தருடைய வழிநடத்துதல் இதுதான் என்று நாம் எண்ணும் காரியங்களை வேதாகமத்தின் உதவியின் மூலமாகவும், மூத்த விசுவாசிகளின் மூலமாகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக இருப்பதால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நமக்கு ஜீவனை கொடுப்பதைப்பற்றி நம்மோடு கூடப்பேச தேவன் அதிகம் விரும்புகிறார்.
கர்த்தர் அவருடைய பிள்ளைகளிடம் பேசுகிறார். நாம் அவருடைய சத்தத்தை உற்றுக்கேட்க வேண்டும்.