சமீபத்தில், சில ஆடைகளை சரிசெய்ய துணிதைக்கும் ஒரு பெண்ணின் கடைக்குச் சென்றேன். நான் அக்கடையில் நுழையும் பொழுது அதன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பதாகைகளை பார்த்தவுடன் நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அந்தப் பதாகைகள் ஒன்றில் “நாங்கள் உங்கள் ஆடைகளை சரிசெய்வோம், ஆனால் உங்கள் இருதயத்தை கடவுளால் மட்டும் தான் சரிசெய்ய இயலும்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகில் உயிர்த்தெழுந்த இயேசு, அழுதுகொண்டிருந்த மகதலேனா மரியாளுக்கு காட்சிக் கொடுத்தது சித்தரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பதாகையில் “ஜெபம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்கிறோம்” என்று குறிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கடைக்கு சொந்தக்காரப் பெண் அந்தக் கடையை 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் கூறினாள். “இங்கு பல்வேறு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள விசுவாச வார்த்தைகளால் தேவன் எப்படியாகக் கிரியை செய்துள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறோம். சிறிது நாட்களுக்கு முன்பாக, இதே இடத்தில் ஒருவர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளார். தேவன் கிரியை செய்வதை பார்க்கும்பொழுது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினாள். நானும் ஒரு கிறிஸ்தவன் என்று அவளிடம் கூறி, அவள் பணி செய்யும் இடத்தில் இப்படியாக கிறிஸ்துவை அறிவித்து வருவதைக் குறித்து பாராட்டினேன்.
நாம் அனைவருமே நாம் பணிசெய்யும் இடங்களில் அந்த தையல்கார பெண்மணியைப்போல தைரியமாக செயல்பட இயலாது. ஆனால் பிறர் எதிர்பாராத முறையில் அவர்களிடம் அன்பு, பொறுமை, இரக்கம் காண்பிப்பதன் மூலம் புதிய செயல்முறைத் திட்டங்களை நாம் கண்டறியலாம். அந்த தையல் கடையை விட்டுவந்ததிலிருந்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத். 5:14) என்று இயேசு கூறினதை வாழ்ந்து காண்பிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
பிறருடைய வாழ்க்கையில் தேவனுடைய அன்பு பாய்ந்து ஓடுவதற்காக, நம்முடைய இருதயங்களில் தேவனுடைய அன்பு ஊற்றப்பட்டிருக்கிறது.