நான் சேகரித்து வைத்திருந்த பிரம்புகள், தடிகள், கைத்தடிகள் பற்றி அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கட்டுரை எழுதினேன். அவற்றை நான் பயன்படுத்த வேண்டிய காலம் வரும் என்று எனக்குள் நானே சிந்தித்தேன். அந்த நாளும் வந்தது. முதுகில் ஏற்பட்ட பிரச்சனையுடன் கூட நரம்புத்தளர்ச்சியும் சேர்ந்து, மூன்று சக்கரங்களையுடைய நடக்க பயன்படும் உபகரணத்தை (Walker) பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. என்னால் நீண்ட தூர நடைப்பயிற்சி செய்ய இயலாது; மீன் பிடிக்க இயலாது; எனக்கு மகிழ்ச்சியை அளித்த அநேக செயல்களை என்னால் செய்ய இயலாது.
என்னுடைய செயல்பாடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் உட்பட்டு இருந்தாலும், அவை அனைத்தும் தேவன் எனக்கு அருளிய வரங்கள் என்றும், அந்த வரங்களோடு நான் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்பதையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தேவன் எனக்கு அளித்துள்ளது இந்த வரம்தான், மற்றப்படி வேறு வரம் அல்ல. நமது செயல்களை எல்லைக்கு உட்படுத்தும் இந்தக் காரியங்கள் – நமது உணர்வுகள் சார்ந்ததாகவோ, சரீரப்பிரகாரமானதாகவோ அல்லது அறிவாற்றல் சார்ந்ததாகவோ இருக்கலாம். இது நம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. பவுல் அவரது பலவீனத்தில் தேவனுடைய வல்லமை அவர்மேல் தங்கத்தக்கதாக அவருடைய பலவீனங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவேன் என்று தைரியமாகக் கூறினார் (2 கொரி. 12:9).
நம்முடைய குறைகளை இந்தக் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பது, நமது செயல்பாடுகளை நம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுத்த உதவுகிறது. நமது குறைபாடுகளை எண்ணி குறைவுபட்டு, சுயபரிதாபமடைவதற்கு மாறாக, அவைகளின்று அவருடைய சித்தத்தை நம்மில் நிறைவேற்ற நம்மை அவரிடம் ஒப்புக்கொடுப்போம்.
உங்களைக் குறித்தோ, என்னைக் குறித்தோ தேவன் என்ன சித்தம் கொண்டுள்ளார் என்று தெரியாது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படக்கூடாது. காரியங்களை இருக்கிற வண்ணமாகவே ஏற்றுக்கொண்டு அதில் திருப்தியாக இருந்து, அன்பில், ஞானத்தில், தேவன் அருளும் காரியங்கள் அனைத்திலும் இந்த நிமிடம் மிகச் சிறந்ததாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதே இன்று நாம் செய்ய வேண்டிய காரியமாகும்.
தேவன் உங்களை எங்கு வைத்திருக்கிறாரோ, அங்கு நீங்கள் செழித்து வளர போதுமென்ற மனமே உங்களுக்கு உதவுகிறது.