சில ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு கலிபோர்னியாவில் பொருளாதார நிலை சரியத் தொடங்கிய பொழுது, போதகர் பாப் ஜான்சன், அந்தக்கால கட்டத்திலிருந்த நெருக்கடியான சூழ்நிலைகளை மட்டும் பார்க்காமல் அவற்றின் ஊடாக இருந்த நல்ல வாய்ப்புகளையும் கண்டார். ஆகவே, அவர் அந்த நகரத்தின் மாநகரத் தந்தையைச் (mayor) சந்தித்து, “எங்களுடைய திருச்சபை உங்களுக்கு எந்த விதங்களில் உதவிசெய்ய இயலும்?” என்று கேட்டார். மாநகரத்தந்தை மிகவும் ஆச்சரியப்பட்டார். ஏனெனில், பொதுவாக மக்கள் அவரிடம் உதவிகேட்டுத்தான் வருவார்கள். இப்பொழுது ஒரு போதகர் அவருடைய திருச்சபை மக்கள் அனைவரோடும் கூட உதவிசெய்ய முன்வந்துள்ளார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மாநகரத்தந்தையும், போதகரும் இணைந்து அந்த நாட்களில் மிகவும் தேவையாக இருந்த காரியங்களை குறித்துப்பேசி அவற்றை எவ்வாறு சந்திக்கலாம் என்று திட்டமிட்டார்கள். அவர்களது ஊரில் மட்டும் 20,000 மூத்த குடிமக்களை அதற்க்கு முந்தின ஆண்டில் ஒரு பார்வையாளர்கூட சென்று பார்க்காத சூழ்நிலை இருந்தது. நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு, அவர்களை வளர்க்கத்தக்க குடும்பங்கள் தேவைப்பட்டன. மேலும் அநேக குழந்தைகள் படிப்பில் முன்னேற அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க ஆட்கள் தேவைப்பட்டது.

இந்தத் தேவைகளில் சிலவற்றை அதிக பணம் செலவழிக்காமல் சந்திக்க இயலும். ஆனால் அவை அனைத்திலும் ஈடுபடும் மக்கள் ஆர்வமுடையவர்களாகவும், அவர்களது நேரத்தை செலவழிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதைத்தான் திருச்சபை மக்கள் செய்யவேண்டியதிருந்தது.

எதிர்காலத்தைப்பற்றி இயேசு அவருடைய சீஷர்களிடம் கூறினபொழுது, அவரை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,… ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத். 25:34) என்று கூறுவேன் என்றார். அவர்களுக்கு அவர் அளிக்கும் மேற்கூறப்பட்ட வெகுமதிகளைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று இயேசு கூறினார். அப்பொழுது அவர் “சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத். 25:40) என்று அவர்களிடம் கூறுவார்.

நாம் நமது நேரத்தை, அன்பை, தேவன் நமக்கு அருளியுள்ள பொருட்களை தாராளமாக கொடுக்கும்பொழுது, தேவனுடைய ராஜ்யத்தின் காரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன.