திருச்சபையின் வாலிபருக்கான திரைப்படம் காண்பிப்பதற்காக அநேக நாட்களாக ஜெபத்துடன் காத்திருந்தோம். காண்பிப்பதற்கான இரவும் வந்தது. கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் அந்த நாளுக்கான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சூட்டடுப்பில் பிஸ்ஸாக்கள் (ரொட்டி போன்ற ஒருவகை உணவு) சூடாகிக் கொண்டிருந்தன. நியூயார்க்கில் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஓர் இளைஞர் குழுவினர் ஒரு இளம் போதகர் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்ட விதத்தை விளக்கும் அந்தத் திரைப்படம், மேலும் அநேக வாலிபப்பிள்ளைகள் திருச்சபையின் வாலிபக்குழுவில் சேர்வதற்கு காரணமாக இருக்குமென்று, அந்தத் திருச்சபையின் வாலிபர்களின் போதகர் ஸ்டீவ் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால், அந்த மாலைப்பொழுதில் மிக முக்கியமான கால்பந்தாட்டப் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படப்போவதை அவர் அறியவில்லை. ஆகவே அவர் எதிர்பார்த்தை விட குறைவாகவே வாலிபர்கள் அன்று வந்தார்கள். மனதிற்குள்ளாக பெருமூச்சுவிட்டு, அறையிலிருந்த விளக்குகளை ஒளி மங்கச்செய்து ஸ்டீவ் திரைப்படத்தைப்போட ஆயத்தமானபொழுது, திடீரென தோலினால் செய்யப்பட்டிருந்த மேலுறை (leather jacket) அணிந்த 5 பேர் கொண்ட வாலிபர்கள் குழு மோட்டார் பைக்கில் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். ஸ்டீவின் முகம் பயத்தினால் வெளிறியது.

டீ டாக் (T Dog) என்று அழைக்கப்பட்ட அந்த குழுவின் தலைவன், ஸ்டீவைப் பார்த்து அவன் தலையை துலுக்கி, “இந்தத் திரைப்படம் அனைவருக்கும் இலவசம்தானே?” என்று கூறினான். “திருச்சபையின் வாலிபர் குழுவிற்கு மட்டும்தான்” என்று ஸ்டீவ் கூறப்போன சமயத்தில் டீ டாக் (T Dog) என்ற அந்தத் தலைவன் கீழே குனிந்து இயேசு என்ன செய்வார்? என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த WWJD (What would Jesus Do) ஒரு கைப்பட்டையை எடுத்து, “இது உங்களுடையது தானே நண்பா?” என்று கேட்டான். மிகவும் சங்கடமான உணர்வுடன், ஆமாம் என்று ஸ்டீவ் கூறினார். பின் அங்கு வந்த புதிய விருந்தாளிகள் இருக்கையில் அமரும் வரை காத்திருந்தார்.

ஸ்டீவின் நிலையில் நீங்கள் எப்பொழுதாவது இருந்ததுண்டா? இயேசுவைப்பற்றிய நற்செய்தியை பிறருக்கு அறிவிக்க நீங்கள் ஆவலாக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்மனதில் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியவர்கள் “இவர்கள்தான்” என்ற பட்டியலை வைத்திருக்கலாம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, அவர் பழகின மக்களைப்பற்றி யூத மதத்தலைவர்கள் அவரைக் குற்றப்படுத்தினார்கள். ஆனால் பிறரால் வேண்டாம் என்று தள்ளப்பட்ட மக்களை இயேசு அன்புடன் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அவர்களுக்கு அவர் அதிகமாக தேவைப்படுகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார் (லூக். 5:31–32).