ஜார்ஜியாவில், சாவன்னாவில் உள்ள வலிமை மிக்க எட்டாவது விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்கு நானும், என் மனைவியும் சென்றபொழுது, அங்கு ஜெர்மன் தேசத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகளின் பாசறைகளை மறுபடியும் உருவாக்கி இருந்ததைப் பார்த்தோம். அதில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த போர்க்கைதிகளின் துயரங்களை நானும், என் மனைவியும் பார்த்தபொழுது, மிகவும் அதிகமாக தொடப்பட்டோம். மார்லினின் தகப்பனார், ஜிம் வலிமைமிக்க எட்டாவது விமானப்படையில் சேவை செய்திருந்தார். இந்த “வலிமையான எட்டு” என்ற அந்த விமானப்படை, இரண்டாம் உலகப்போரின் போது அநேகமுறை ஐரோப்பாவில் பறந்து சென்றுள்ளது. அந்தப்போரில், அந்த எட்டாம் விமானப்படையைச் சேர்ந்த 47000க்கும்மேற்பட்ட வீரர்கள் காயப்பட்டார்கள். 26000க்கும் மேற்பட்ட வீரர்கள் மரித்துவிட்டார்கள். ஜிம்மும் சுடப்பட்டு போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். காட்சிப் படுத்தப்பட்டவைகளின் ஊடாக நாங்கள் நடந்து சென்றபொழுது, ஜிம்மும், அவருடன் இருந்த மற்றக்கைதிகளும் விடுதலையாக்கப்பட்ட அந்த நாளில், அவர்கள் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியை, ஜிம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தோம்.

ஒடுக்கப்பட்டவர்கள், சிறைப்பட்டவர்களின் விடுதலையைக் குறித்து தேவன் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்று சங்கீதம் 146 அறிவிக்கின்றது. “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” என்று அவரைப்பற்றி சங்கீதக்காரன் விளக்குகிறான் (வச. 7). துதித்துப் போற்றுவதற்கு இவையே காரணமாக உள்ளது. ஆனால், விடுதலைகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த விடுதலை, நாம் நமது குற்ற உணர்விலிருந்தும், வெட்கத்திலிருந்தும் பெறும் விடுதலையேயாகும். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு கூறியது ஆச்சரியமில்லை.

கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நாம் நமது பாவச்சிறையிலிருந்து விடுபட்டு, மன்னிப்பினால் மட்டுமே கிடைக்கக்கூடிய, தேவன் அருளும் மகிழ்ச்சி, அன்பு, விடுதலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுகிறோம்.