இஸ்ரவேல் மக்கள் இரண்டு ஆண்டுகள் சீனாய் மலையின் அருகில் பாளையமிறங்கி தங்கியிருந்தபின், தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்திற்குள் நுழைய இருந்தார்கள். அப்பொழுது 12 வேவுகாரர்களை அனுப்பி அந்தத் தேசத்தின் தன்மையையும், அங்கு வாழும் ஜனங்களின் தன்மையையும் பற்றி அறிந்து வரும்படி தேவன் அவர்களிடம் கூறினார். அந்த வேவுகாரர்கள் அங்கு வாழ்ந்த கானானியரின் பெலத்தையும், அவர்களுடைய பட்டணங்களின் அளவையும் பார்த்து, “அவர்களை எதிர்க்க நம்மால் கூடாது” என்று 10 பேர் கூறினார்கள், அவர்களில் 2 பேர் “அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்கள்.
இவ்வாறு வேறுபட்டு கூறினதற்கு காரணம் என்ன?
அந்த 10 பேர் அங்கு வாழ்ந்த இராட்சதர்களை தங்களோடே ஒப்பிட்ட பொழுது அந்த இராட்சதர்கள் மிகவும் பலசாலிகளாக காணப்பட்டார்கள். காலேப்பும், யோசுவாவும் அந்த இராட்சதர்களை தேவனோடு ஒப்பிட்டதினால் அந்த இராட்சதர்கள் அளவில் சிறியவர்களாகி விட்டார்கள். “கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை” என்று அவர்கள் கூறினார்கள் (எண். 14:9).
நுழைய இயலாத அரண்களை உடைய பட்டணங்கள், வெற்றி பெற இயலாத இராட்சதர்கள் போன்ற கஷ்டங்களில் அவிசுவாசம் அவற்றை மேற்கொள்ளவிடாது. அவிசுவாசமானது அந்த கஷ்டங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு மனித பெலத்தினால் அவற்றை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்க வைக்கிறது.
விசுவாசமோ சூழ்நிலையின் ஆபத்துக்கள், கஷ்டங்கள் இவற்றை எந்த அளவிலும் குறைத்து மதிப்பிடாமல், அவற்றைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்காமல், நமது கண்களால் பார்க்க இயலாத தேவனுடைய பிரசன்னத்தையும் வல்லமையையும் நோக்கிப் பார்க்கிறது.
உங்களுக்கு எதிராக உள்ள “இராட்சதர் யார்?” உங்களால் விட்டுவிட இயலாத கெட்ட பழக்கமா? உங்களால் எதிர்த்துப் போராட இயலாத சோதனையா? கடினமான திருமண வாழ்க்கையா? போதை மருந்திற்கு அடிமையான மகனா அல்லது மகளா?
நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கஷ்டங்களோடு நமது பெலனை ஒப்பிட்டால் நாம் கஷ்டங்களால் எப்பொழுதும் மேற்கொள்ளப்படுவோம். விசுவாசம் நமக்கு எதிராக உள்ள பொறுப்புகளின் வலிமையை நோக்காதபடி எப்பொழுதும் நம்மோடு கூட இருக்கும் தேவனுடைய வல்லமையையே நோக்கிப் பார்க்கிறது.