C.S. லூயிஸ் எழுதியுள்ள “கிரானிக்கில்ஸ் ஆப் நார்னியா” என்ற தொடரில் ரீப்பிசீப் என்ற பேசக்கூடிய சிறிய நெஞ்சுறுதி மிக்க எலியை எனக்கு மிகவும் பிடிக்கும். கிறிஸ்துவுக்கு அடையாளமான வலிமைமிக்க அஸ்லான் என்ற சிங்கத்தோடு சேர்வதற்கு கிழக்கு எல்லையை அடைய ரீப்பிசீப் தீர்மானித்தது. “என்னால் இயலும்பொழுது டான் டிரீடரில் கிழக்கே நோக்கிப் பயணிக்கிறேன். டான் டிரீடரின் மூலம் என் பயணத்தைத் தொடர இயலாமல் போய்விட்டால் எனது சிறிய படகின்மூலம் கிழக்கே செல்லுவேன். அதுவும் நீரில் மூழ்கிவிட்டால் எனது நான்கு பாதங்களாலும் துடுப்பு வலித்து கிழக்கே செல்லுவேன். என்னால் நீந்த முடியாத நிலையில் அஸ்லானின் தேசத்தை அடையாவிட்டால், சூரியன் உதயமாகும் கிழக்குத் திசையில் எனது மூக்கு இருக்கும் வண்ணமாக நீரில் மூழ்கிவிடுவேன்” என்று ரீப்பிசீப் அதனுடைய உறுதியான முடிவை அறிவித்தது.
இதே எண்ணத்தை பவுல் “இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி 3:14) என்று வேறுவிதமாக குறிப்பிட்டுள்ளார். இயேசுவைப்போல் இருக்க வேண்டுமென்பதே அவரது இலக்கு. வேறு எதைக்குறித்தும் அவருக்கு கவலை இல்லை. இன்னமும் அதிகமாக ஊழியம் செய்ய வேண்டுமென்றும், இயேசு, அவரை எதற்காக அழைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாமல், அவர் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் தீர்மானமாக கூறியுள்ளார்.
நம்மில் ஒருவரும் நாம் இருக்க வேண்டிய பிரகாரமாக இல்லை. ஆனால் அப்போஸ்தலனைப்போல நாமும், நாம் அடைய வேண்டிய இலக்கினை அடைய நாம் ஜெபத்துடன் தொடர்ந்து முன்னேற வேண்டும். நாமும் பவுலைப்போல “நான் இன்னமும் இலக்கை அடையவில்லை” என்று எப்பொழுதும் கூறுகிறோம். நமது பெலவீனங்கள், தோல்விகள், களைப்பு இவற்றோடுகூட நாமும் தொடர்ந்து ஓடவேண்டும் (வச.12). ஆனால், அனைத்தும் தேவனைச் சார்ந்ததாகும். தேவன் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
தேவன் உங்களோடு இருக்கிறார், தொடர்ந்து துடுப்பு வலியுங்கள்!