ஒரு வேலை ஸ்தலத்தில் நான் நடத்திய பயிற்சி வகுப்பு முடிந்தபின் ஒரு நடுத்தர வயது நபர் என்னிடம் வந்து, “கிட்டத்தட்ட என் வாழ்நாள் முழுவதும் நான் கிறிஸ்தவனாக இருந்துள்ளேன், ஆனால் என்னைக்குறித்து எப்பொழுதும் எனக்கு ஏமாற்றமே உண்டு. அப்படி செய்திருக்ககூடாது என்று நினைக்கும் காரியங்களையே நான் திரும்பத் திரும்ப செய்கிறேன், மேலும் நான் செய்ய வேண்டிய காரியங்களை அறிந்திருந்தும் செய்யாதிருக்கிறேன். தேவன் என்னைக்குறித்து சோர்ந்து போய்விடவில்லையா?” என்று கேட்டார். என் அருகில் இருந்த இரண்டு நபர்களும் கூட நான் சொல்லப்போகும் பதிலை கேட்க ஆவலாய் இருந்தார்கள்.

அப்போஸ்தலனாகிய பவுலும் கூட எதிர்கொண்ட எல்லோருக்கும் பொதுவான போராட்டமே இது. “நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்” (ரோமர் 7: 15) என அவர் கூறியுள்ளார். ஆனால் நற்செயதி என்னவெனில்: இந்த ஏமாற்றங்கள், தோல்விகள் என்னும் வளையில் சிக்கி என்றென்றும் தவிக்கத்தேவையில்லை. ரோமர் 8ஆம் அதிகாரத்தில் பவுல் கூறியதை வேறு விதத்தில் கூறவேண்டுமானால், நியாயப்பிரமாணத்தின் மீதுள்ள நமது கவனத்தை இயேசுவின் மேல் திருப்புவதே இப்போராட்டத்தின் நாம் வெற்றிக்கான உதவும் திறவுகோல். நம்முடைய பெலத்தைக் கொண்டு நம்முடைய பாவசுபாவத்தை நம்மால் மேற்கொள்ள முடியாது. “சட்டத்திட்டங்களை கடைபிடிக்க இன்னும் அதிகமாய் முயற்சி செய்” என்பது அதற்கு பதிலாகாது. மாறாக, நமக்கு இரக்கம் பாராட்டுகிறவரிடத்தில் நமது கவனத்தைத்திருப்பி, பண்படுத்துகிற ஆவியானவரோடு ஒத்துழைக்க வேண்டும்.

நாம் நியாப்பிரமாணத்தின் மேல் நோக்கமுள்ளவராய் இருந்தால், தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள நாம் தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே நம் நினைவில் இருக்கும். ஆனால் நாம் இயேசுவின் மீது நமது கண்களைப் பதிய வைக்கும் பொழுது, அவரைப் போல மாறத் தொடங்கிவிடுவோம்.