எனது மகன் நர்சரி வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தான். முதல் நாள் அவன் அழுதுகொண்டே “எனக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பமில்லை” என்று அறிவித்தான். “சரீரப்பிரகாரமாக நானும் உன் அப்பாவும் பள்ளிக்கூடத்தில் உன்னுடன் கூட இருக்க மாட்டோம். ஆனால் உனக்காக ஜெபித்துக் கொண்டே இருப்போம். அத்தோடு கூட இயேசு எப்பொழுதும் உன்னோடு கூட இருக்கிறார்”. என்று நானும் என் கணவரும் அவனுடன் பேசினோம்.
“ஆனால் இயேசுவை என்னால் பார்க்க இயலவில்லையே!” என்று அவன் வாதிட்டான். எனது கணவர் அவணை அனைத்துக்கொண்டு “அவர் உனக்குள்ளாக வாழ்கிறார். அவர் உன்னைத்தனியாக விடமாட்டார்” என்று கூறினார். எனது மகன் அவனது இருதயத்தைத் தொட்டுக்கொண்டு “ஆம், இயேசு எனக்குள் இருக்கிறார்” என்று கூறினான்.
பிரிவினால் வரக்கூடிய மனக்கலக்கத்திற்கு சிறு பிள்ளைகள் மட்டும் ஆளாவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நாம் நேசிக்கும் மக்களிடமிருந்து பிரிவு, தூர இடத்தில் வசிப்பதால் ஏற்படும் பிரிவு, அல்லது மரணத்தினால் ஏற்படும் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளால் துக்கப்படுகிறோம். ஆயினும் மற்றவர்களால் நாம் கைவிடப்பட்டுவிட்டோமோ என்று நாம் எண்ணும் பொழுது, தேவன் நம்மைக் கைவிட்டு விட வில்லை என்பதை நாம் நினைவு கூர வேண்டும். தேவன் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பதாக வாக்குப் பண்ணியுள்ளார். தேவன், சத்திய ஆவியை தேற்றரவாளனாகவும் நமக்கு உதவி செய்பவராகவும் என்றென்றும் நம்முடன் வசிக்க அனுப்பியுள்ளார். (யோவான் 14: 15-18) நாம் அவருக்குப் பிரியமான பிள்ளைகள்.
எனது மகன் எங்களை நம்புவதற்கு கற்றுக்கொண்டு வருகிறான், அவனைப்போலவே நானும் கற்றுக்கொண்டு வருகிறேன். என் மகனைப் போலவே என்னாலும் ஆவியானவரை கண்களால் காண இயலவில்லை. ஆனால் தேவனுடைய வார்த்தைகளை நான் வாசித்து தியானிக்கும்பொழுது, அவர் என்னை ஊக்கப்படுத்தி வழிநடத்தும் வல்லமையை நான் உணருகிறேன். நம்மோடும் நமக்குள்ளும் இருக்க தேவன் அருளியுள்ள கிறிஸ்துவின் ஆச்சரியமான பரிசுத்த ஆவிக்காக தேவனுக்கு நன்றி கூறுவோம்.