எனது மகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்தபின், அவள் மீண்டும் சுய நினைவு அடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அறையில் அவளோடு கூட அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கண்களை மெதுவாகத் திறந்த பொழுது, அவளது உடல் நலம் இல்லாததை உணர்ந்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக, அவளது கரத்தை மெதுவாக தட்டிக்கொடுத்தேன். ஆனால் அவள் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள். பின்பு ஒரு செவிலியரின் உதவியுடன் அவளை படுக்கையிலிருந்து மெதுவாக என் மடிக்கு மாற்றினேன். நாளடைவில் அவள் முழுமையாக சுகம் பெற்றுவிடுவாள் என்று அவளுக்கு நினைப்பூட்டினேன்.

தேவன் ஏசாயாவின் மூலம் “ ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” (ஏசாயா 66:13) என்று இஸ்ரவேல் மக்களுக்கு அறிவித்தார். அவர்களுக்கு சமாதானத்தை அருளுவேன் என்று வாக்குத்தத்தம் பண்ணினதோடு, ஒரு தாய் தன் குழந்தையை அன்போடு சுமந்து செல்வது போல சுமப்பேன் என்று தேவன் கூறினார். “கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்கி” (வச. 5) தேவனை கனப்படுத்தும் மக்களுக்குத்தான் இந்த அன்பின் செய்தி உரித்தானது.

தேவன் அவருடைய மக்களை ஆறுதல் படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளவர் என்பது கொரிந்தியருக்கு பவுல் எழுதிய கடிதத்தில் மறுபடியும் வெளிப்படுத்தப்பட்டது. கர்த்தர் “எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரி 1:4) என்று பவுல் கூறியுள்ளார். நாம் கஷ்டங்களில் இருக்கும்பொழுது தேவன் நம்மீது அன்புடனும் இரக்கத்துடனும் செயல்படுகிறார்.

ஒரு நாள் அனைத்துக் கஷ்டங்களும் முடிவுறும். நமது கண்ணீர், நமது கண்களிலிருந்து என்றென்றும் துடைக்கப்படும் தேவனின் கரங்களில் பாதுகாப்புடன் இருப்போம். (வெளி 21:4) நாம் துன்பப்படும் பொழுது நம்மைத் தாங்கி வழி நடத்த அந்நாள்வரைக்கும் தேவனின் அன்பின் மேல் சார்ந்திருப்போம்.