நாங்கள் வசிக்கும் நகரத்திற்கு எனது சிநேகிதன் ஒருவன் வருவதாக இருந்தது. நகரில் அவன் செய்ய வேண்டிய வேலைகள் மிக அதிகம் இருந்தது. முக்கியமான கூட்டங்களில் அவன் பங்கெடுத்தபின், எப்படியோ நேரத்தை கண்டுபிடித்து, எனது குடும்பத்தோடு அரை மணி நேரம் செலவழிக்கவும், எங்களோடு கூட இரவு உணவு உட்கொள்ளவும் வந்தான். அவனது வரவு எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் எனது சாப்பாட்டுத்தட்டைப் பார்த்து “அவனுடைய நேரத்தில் சில துணுக்குகளைத்தானே பெற்றோம்” என்று எண்ணினேன்.

பின்பு எத்தனை நேரங்களில் தேவன் எனது நேரத்தின் துணுக்குகளை மட்டும் பெறுகிறார் என்று நினைவு கூர்ந்தேன். சில சமயங்களில் நான் உறங்கச் செல்லும் முன்பு கடைசி நிமிடங்களை மட்டும் அவருக்குக் கொடுக்கிறேன்.

தானியேல் மிக அதிக வேலைப் பளு உள்ளவன். அக்காலத்தில் பாபிலோன் அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியை வகித்து வந்தான். அவனுக்கு மிக அதிக அளவு வேலைப்பளு இருந்திருக்குமென்று எண்ணுகிறேன் ஆயினும் தேவனோடு நேரத்தை செலவிடும் பழக்கத்தை உண்டு பண்ணிக்கொண்டான். ஒரு நாளில் மூன்று முறை ஜெபித்து தேவனை துதித்து அவருக்கு நன்றி கூறப் பழகிக்கொண்டான். இந்தப் பழக்கம் அவன் துன்புறுத்தப்பட்ட பொழுது, மனம் தளர்ந்து போகாதபடி ஆழமான விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ள உதவியது. (தானியேல் 6)

தேவனோடு நாம் உறவு கொள்ள அவர் விரும்புகிறார். நமது நாளைத் துவங்குமுன் அந்நாள்முழுவதும் அவர் நம்மை வழிநடத்த காலை நேரத்தில் அவரை அழைக்கலாம். நாம் அவரைத் துதித்து அந்த நாள் முழுவதும் நமக்கு உதவி செய்யும்படி விண்ணப்பிக்கலாம். வேறு சில சமயங்களில் அவரோடு தனிப்பட்ட நேரத்தை செலவழிப்பதை விசேஷமான செயலாகக் கருதி அவருடைய உண்மைத்துவத்தை பிரதிபலிக்கலாம். தேவனோடும் அவரது வார்த்தைகளோடும் நாம் நேரம் செலவழிக்கும் பொழுது, அவருடைய உறவில் நாம் வளர்ந்து, மேலும், மேலும் அவரைப் போல மாறக் கற்றுக் கொள்ளுகிறோம். தேவனோடு செலவழிக்கும் நேரம் முக்கியமாகும்பொழுது, அவரோடு கூடிய நெருக்கமான உறவில் அதிகம், அதிகமாக மகிழ்ச்சி அடைகிறோம்.