சீனாவில், யூனான் மாகாணத்தில் ஒரு கிராமப்புறத்தில் ஷோயிங் வசித்து வருகிறாள். உடல் நலக்குறைவினால் அவளது கணவனுக்கு வயல் வெளியில் வேலை செய்ய இயலவில்லை. இதனால் அவர்களுடைய குடும்பம் மிகுந்த வறுமையில் வாடியது. இவ்வாறு அவர்கள் குடும்பம் கஷ்டப்படுவதற்கு தேவன் மேல் ஷோயிங் வைத்திருக்கும் விசுவாசம்தான் காரணமென்று, அவளது கணவனின் தாயார் குறை கூறினார்கள். ஆகவே, ஷோயிங்கை அவள் கடினமாக நடத்தினதோடு, அவர்களது முன்னோர்களின் பாரம்பரிய மதத்திற்கு திரும்பும்படி வற்புறுத்தினார்கள்.

ஆனால் ஷோயிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்து அவளது கணவன், அவனது தாயாரைப் பார்த்து “அம்மா, ஷோயிங் மட்டும் தேவனை விசுவாசிப்பது போதாது. நாமும் கூட தேவன் மீது விசுவாசம் வைக்க வேண்டும்” என்று கூறினான். அவனது மனைவியிடம் ஏற்பட்ட கவனிக்கத்தக்க மாற்றங்களைக் கண்டதால், அவனும் இயேசுவின் நற்செய்தியைப்பற்றி சிந்திக்கலானான்.

நம்முடைய வார்த்தைகளை கவனிக்கும் முன்பு மக்கள் நமது நடக்கைகளை கவனிப்பார்கள். நல்ல நடக்கையுடன் கூட நமது வாழ்க்கையில் கிறிஸ்து ஏற்படுத்தும் மாற்றங்களை வெளிக்காண்பிக்கும் வார்த்தைகளே சிறந்த சாட்சியாகும்.

வெறுப்புணர்ச்சி மிகுந்த இவ்வுலகிற்கு இப்படித்தான் இயேசுவை அறிமுகப்படுத்தமுடியும் என்று பேதுரு ஆலோசனை கூறுகிறார். “நன்மையைப் பின்பற்றி” (1 பேதுரு 3:13) கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து வாழ, நல்மனச்சாட்சியோடு இருக்க, மேலும் நாம் ஏன் அப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோமென்று, பிறருக்கு விளக்க (1 பேதுரு 3:15), நாம் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்று அவரது வாசகர்களுக்கு பேதுரு அறைகூவல் விடுகிறார். நாம் இப்படிச்செய்தால் நமது விசுவாசத்தின் நிமித்தமாக பிறர் நம்மை நிந்தித்தாலோ, கடினமாக நடத்தினாலோ நாம் பயப்படத் தேவை இல்லை.

நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் இருக்கும் இடத்தில் இயேசுவுக்காக ஒளி வீசுவோம். நம்மோடு மனம் ஒத்துவராதவர்களைக் கூட சந்தித்து, இயேசுவைப் பற்றிச் சொல்ல தேவையான கிருபையை தேவன் நமக்கு அருளுவார்.