எனது சிறு பிள்ளைப்பிராயத்தில் உலகை மிகவும் அச்சுறுத்தக் கூடிய வியாதி “போலியோ” என்ற இளம் பிள்ளைவாதமாகும்.” ஏனெனில் அதனால் அதிகமான அளவு சிறுபிள்ளைகள் தான் பாதிக்கப்பட்டார்கள். 1950களின் மத்தியில் போலியோவிற்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 20,000 பேர் போலியோவினால் பாதிக்கப்பட்டதோடு, ஏறக்குறைய 1000 பேர் அதனால் ஒவ்வொரு ஆண்டும் மரித்தார்கள்.

ஆதிக்காலத்தில் திமிர்வாதம் என்பது குணமாக்க இயலாத நிரந்தரமான நம்பிக்கையற்ற நிலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கூட்ட மக்கள் திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட அவர்களது சிநேகிதனை இயேசுவால் குணப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். இயேசு கப்பர்நகூமிலிருந்த ஒரு வீட்டில் உபதேசித்துக் கெண்டிருந்த பொழுது, நான்கு மனிதர்கள் திமிர்வாதம் பிடித்த ஒரு மனிதனை அவரிடம் கொண்டு வந்தார்கள். கூட்டத்தினிமித்தம் அவனை இயேசுவண்டை கொண்டு செல்ல இயலாததால் “அவர் இருந்த வீட்டின் மேற் கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.” (மாற்கு 2:4)

“இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி; மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்று கூறினார் (வச 5,11) அந்த நான்கு மனிதர்களின் விசுவாசத்தை இயேசு கண்டு அந்த திமிர்வாதக்காரனின் பாவங்களை மன்னித்ததோடு, குணமாக்க இயலாத அவனது வியாதியையும் குணப்படுத்தியது எவ்வளவு சிறந்தகாரியம்.

நமக்கு அறிமுகமான யாரோ ஒருவர் சரீரப்பிரகாரமான கஷ்டங்களையோ அல்லது ஆவிக்கேற்ற பிரகாரமான பிரச்சனைகளையோ அனுபவித்து வந்தால் அவர்களோடு இணைந்து ஜெபித்து, அவர்களது பிரச்சனைகளையும், தேவைகளையும் சந்திக்கக்கூடிய ஒரே ஒருவரான இயேசுவண்டை அழைத்து வரவேண்டும்.