ஒரு திருச்சபையிலிருந்த ஒரு குழுவினர் அவர்களது கூடுகையில் செய்தி அளிப்பதற்காக ஒரு செய்தியாளரை அழைத்தார்கள். “ தேவனைப்பற்றி பேசுங்கள் ஆனால் இயேசுவை விட்டு விடுங்கள்” என்று அந்தக் குழுவின் தலைவர் செய்தியாளரிடம் கூறினார்.
மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த மனிதர் “ஏன்” என்று கேட்டார். “எங்களது குழுவிலுள்ள சில முக்கிய அங்கத்தினர்கள் இயேசு என்றால் சங்கடப்படுகிறார்கள். ஆகவே கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துங்கள், அப்பொழுது நாங்கள் நன்றாக உணருவோம்” என்று அந்தத்தலைவர் விளக்கினர்.
அவர்கள் கூறின கட்டளைகளை ஏற்றுக்கொள்வது செய்தியாளருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆகவே “இயேசு இல்லாமல் என்னிடம் செய்தி ஏதும் இல்லை” என்று அவர் கூறிவிட்டார்.
ஆதித்திருச்சபையில் இயேசுவைப் பின்பற்றினவர்களிடமும் இதே போல் கேட்கப்பட்டது. அந்தந்த ஊரிலிருந்த மதத்தலைவர்கள் ஒன்று கூடிப் பேசி, இயேசுவின் சீஷர்களிடம் இயேசுவைப் பற்றி பேசக் கூடாது என்று எச்சரித்தார்கள். (அப் 4:17) ஆனால் சீஷர்கள் இயேசுவை பற்றி தெளிவாக அறிந்திருந்தபடியினால் “ நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக் கூடாதே” என்று அவர்கள் கூறினார்கள்.
தேவன் மீது நம்பிக்கை வைத்து அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்காதது எதிர்மறையான காரியமாகும். “ நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று யோவான் 10:30ல் இயேசு அவருக்கும், பிதாவுக்கும் இடையே உள்ள உறவைப்பற்றி தெளிவாக விளக்கி அவரது தெய்வீகத் தன்மையை நிலைநிறுத்துகிறார். அதனால் “ தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1) என்று அவரால் கூற முடிந்தது. இயேசு தேவனுடைய ரூபமும், தேவனுக்குச் சமமாயிருந்ததை பவுல் அறிந்திருந்தார். (பிலிப் 2:6)
“அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப் 4:12) ஆகவே இயேசு என்ற நாமத்தைக் குறித்து நாம் வெட்கமடையத் தேவை இல்லை.