டேவிட் உட் என்ற NBAயின் முன்னாள் விளையாட்டு வீரர், டாக்ரஸ் டி பாஸ்கோனியா சார்பில் விளையாடிய பொழுது ஸ்பானியா நாட்டு கூடைப்பந்து விளையாட்டில் இறுதிக் கோப்பைக்கான போட்டியில் அவரோடு கூட நான் இருந்தேன். ஒரு போட்டிக்கு முன் அவர் “என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சங்கீதம் 144:1 ஐ வாசித்தார். பின்பு என்னிடம் திரும்பி “பார் தேவன் இந்த வசனத்தை எனக்காகவே எழுதியுள்ளார். துள்ளி வரும் பந்துகளைப் பிடிக்கவும் பந்தை சரியான முறைகளில் போடவும், தேவன் என் விரல்களைப் பயிற்றுவிக்கிறார்” என்று கூறினார். கூடைப் பந்து விளையாட தேவனால் அழைக்கப்பட்டதாக டேவிட் உணர்ந்தார். அத்தோடு கூட நாம் இருக்கும் வண்ணமாகவே தேவன் நம்மை ஏற்றுக் கொண்டு நம்மை எதற்காக அழைத்தாரோ அதைச் செய்ய அவர் நமக்கு உதவுகிறார் என்பதையும் கற்றுக் கொண்டதாக டேவிட் கூறினார்.
தேவனுக்கென்று கொடுப்பதற்கு நம்மிடம் ஏதும் இல்லை என்று எண்ணி, நாம் தேவனுக்கு பயனற்றவர்கள் என்று நம்மை நாமே எளிதில் புறக்கணித்து விடலாம். மோசேக்கு தேவன் காட்சியளித்து இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் பணியைக் கொடுத்தபொழுது, (யாத் 3:16-17) மோசே அப்பெரிய பணிக்கு அவன் தகுதியற்றவன் என்று உணர்ந்தான். “நான் வாக்கு வல்லவன் அல்ல நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்” (4:10) என்று அவன் தேவனிடம் கூறினான். ஒருவேளை மோசேக்கு பேசுவதில் சற்று குறை இருந்திருக்கலாம் அல்லது பயந்திருக்கலாம். ஆனால் தேவன் அவனது குறைவை அவரது நிறைவினால் சரிசெய்தார். “நீயோ, நான் உன் வாயோடே இருந்து நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்” (வச.12). என்று தேவன் கூறினார்.
தேவனுடைய திட்டங்களை நாம் பின்பற்ற வேண்டுமென்பதே அவருடைய விருப்பமாகும். மற்றகாரியங்களை அவர் பார்த்துக் கொள்வார். தேவனுடைய வல்லமையான கரங்களில் இருக்கிற நீங்கள் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம்.