நான் படித்து வந்த உயர்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் இலத்தீன் மொழியைக் கற்றுக் கொள்வது அவசியமாக இருந்தது. அவ்வாறு கஷ்டப்பட்டு இலத்தீன் மொழியை படித்ததை இப்பொழுது நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைப் படித்து வந்தபொழுது, அது மிகவும் சலிப்பூட்டுவதாக இருந்தது. மறுபடியும், மறுபடியும் சொல்லி பயிற்றுவிப்பதில் எனது ஆசிரியர் நம்பிக்கை உடையவராக இருந்தார். “மறுபடியும், மறுபடியும் சொல்லுவதே கற்றுக் கொள்வதற்கான மூல ஆதாரம்” என்று எனது ஆசிரியர், ஒரு நாளில் பலமுறை கூறுவார்;. மறுபடியும், மறுபடியும் கூறுதல் மிக அவசியமானது என்று கூறுவதை நாங்கள் எங்களுக்குள்ளாக மெதுவாக “மறுபடியும், மறுபடியும் சொல்லுவது அபத்தமானது” என்று கூறிக்கொள்வோம்.
வாழ்க்கையின் பெரும்பகுதி அப்படியேதான் உள்ளது என்று நான் இப்பொழுது உணருகிறேன். மறுபடியும், மறுபடியும் செய்தல் என்பது சலிப்பூட்டுகிற, எழுச்சியூட்டாத, ஆர்வத்தைத் தூண்டாத செயல்களை மறுபடியும், மறுபடியும் செய்வதாகும். “மறுபடியும், மறுபடியும் செய்தல் என்பது, ரொட்டியைப் போல மிகச் சாதாரணமானதும் மிக முக்கியமானதுமாகும்” என்று டேனிஷ் தத்துவஞானி சோரன் கியர்காட் கூறியுள்ளார். அத்தோடு கூட “ஆசீர்வாதத்துடன் கூடிய ரொட்டிதான் திருப்தியளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
மிகவும் சாதாரணமானதாகவும், எளிமையானதாகவும், மிகவும் அற்பமாக இருந்தாலும் ஒவ்வொரு கடமையையும் ஆசீர்வதிக்கும்படி தேவனிடம் விண்ணப்பித்து அதை அவருடைய சித்தத்தின்படி செய்வதே முக்கியமானது. இப்படிச் செய்வதால் வாழ்க்கையில் சலிப்பூட்டுகிற செயல்களை கண்களுக்குப் புலப்படாத நித்தியமான விளைவுகளால் நிரப்பப்பட்ட பரிசுத்த பணியாக மாற்றலாம்.
“கைகளை உயர்த்தி ஜெபிப்பது தேவனுக்கு மகிமை செலுத்துவதாகும். ஆனால் வைக்கோல் தள்ளும் கம்பியினால் வைக்கோல் தள்ளும் ஒரு மனிதனும், நீர் நிறைந்த வாளியைச் சுமக்கும் ஒரு பெண்ணும் கூட தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறார்கள்” என்று ஜெரார்ட் மேன்லி ஹாப்கின்ஸ் என்ற கவிஞர் கூறியுள்ளார். மேலும் அவர் “தேவன் மகாப்பெரியவர். ஆகவே உலகிலுள்ள அனைத்தும், தேவனுக்கு மகிமையைச் செலுத்த வேண்டுமென்று எண்ணினால் அதுவே சிறந்தது”. என்றும் கூறுகிறார்.
நாம் செய்வதனைத்தையும் கிறிஸ்துவுக்கென்று செய்தால் மிகச் சாதாரண வேலைகள் கூட நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும். அதைக் கண்டு நாமே ஆச்சரியப்படுவோம்.