எனது சகோதரனின் மருமகன் ஒரு சமூக வலைத்தளத்தில் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினார். “மெல்லிய சத்தத்தில் செய்ய வேண்டாமென்று எனக்குள்ளாக வார்த்தைகள் கேட்கப்படாமல் இருந்திருந்தால், நான் இன்னும் அதிகமாக இணயதளத்தில் சொல்லி இருப்பேன். கிறிஸ்தவ விசுவாசிகளாக நீங்கள் அந்த மெல்லிய சத்தம் பரிசுத்த ஆவியானவருடையது என்று எண்ணுவீர்கள். அப்படி இல்லை. அது என் மனைவி ஹெய்டியின் சத்தமே”

சிரிப்புடன் கூட ஒரு தெளிவான எண்ணமும் வருகிறது. உண்மையான தன்மையை அறியக்கூடிய ஒரு சிநேகிதனின் எச்சரிப்புகள், தேவனின் ஞானத்தைப் பிரதிபலிக்கலாம். “ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்” என்று பிரசங்கி ஒன்பதாம் அதிகாரம் 17ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

நாம், நமது பார்வைக்கு ஞானவான்களாகவோ, பெருமையானவர்களாகவோ இருக்க கூடாதென்று வேதாகமம் எச்சரிக்கிறது. (நீதி 3:7; ஏசாயா 5:21; ரோமர் 12:16) வேறு வார்த்தைகளில் கூறப்போனால் எல்லாக் காரியங்களுக்கும் நமக்கு விடை தெரியுமென்று நாமாக எண்ணிக்கொள்ளக் கூடாது. “உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக் கொள்”. என்று நீதிமொழிகள் 19:20 கூறுகிறது. சிநேகிதர், வாழ்க்கைத் துணை, போதகர் அல்லது உடன் பணிசெய்பவர் இவர்களில் யாரையாவது பயன்படுத்தி தேவன் அவரது ஞானத்தை நமக்கு கற்றுத் தருவார்.

“புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்” என்று நீதிமொழிகள் 14:33 அறிவிக்கிறது. ஒருவருக்கொருவர் கூறுவதைக் கவனித்து அதன் மூலம் எப்படியாக கற்றுக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதே ஆவியானவர் தரும் ஞானத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வழியாகும்.