ஒவ்வொரு முறையும் ஒரு ரோஜாச் செடி அல்லது ஒரு பூங்கொத்தின் அருகில் செல்லும் பொழுதெல்லாம் ஒரு பூவை இழுத்து அதன் இனிய வாசனையை முகர்ந்துப் பார்ப்பதை என்னால் தவிர்க்க இயலாது. அப்பூக்களின் இனிய வாசனை என் இருதயத்தில் இனிய உணர்வுகளைத் தூண்டும்.

அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு கொரிந்து பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, பவுல் அப்போஸ்தலன் கடிதம் எழுதினபொழுது, நாம் கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களானதால் “எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”
(2 கொரி 2:14) என்று எழுதியுள்ளார். அவருடைய பெலத்தினால் நமது தன்னலத்திற்குப் பதிலாக அவருடைய அன்பு. இரக்கம் இவற்றைப் பெற்று, அவரது இரட்சிப்பின் நன்மைகளை அறிவிக்கலாம். நாம் இப்படிச் செய்யும்பொழுது உண்மையிலேயே தேவனுக்கு நற்கந்தமாக இருக்கிறோம்.

இரண்டாவதாக கிறிஸ்துவர்களை “கிறிஸ்துவினிடமிருந்து வந்த கடிதம்” என்று பவுல் விவரிக்கிறார். (3:3) நமது வாழ்க்கையில் கடிதம் சாதாரண மையினால் எழுதப்படாமல் தேவனுடைய ஆவியினால் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அவரது வார்த்தைகளை நமது இருதயங்களில் எழுதுவதின்மூலம் நம்மைப் பிறர் வாசிக்கும் அவருடைய கடிதங்களாக மாற்றுகிறார்.

மேற்கூறப்பட்டபடி கிறிஸ்துவின் நற்கந்தமாகவும், கிறிஸ்துவின் கடிதமாகவும் நாம் இருப்பதால் கிறிஸ்துவின் அழகு நம்மூலமாக வெளிப்படுத்தப்பட்டு பிறரை தேவனண்டை வழிநடத்த பயனுள்ளவையாக உள்ளன. எபேசியர் 5:2ல் பவுல் எழுதியதுபோல “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாகவும். பலியாகவும் ஒப்புக் கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தவராகவுள்ளார்”.