1950களில் வளர்ந்த நான் சனிக்கிழமைகளில் உள்ளுர் திரைப்பட அரங்கில் மதியக் காட்சிகளை அடிக்கடிப் பார்த்து வந்தேன். கேலிப்படங்களோடு, சாகசச் செயல்களில் ஈடுபடும் கதாநாயகி அல்லது கதாநாயகன் பற்றிய திரைப்படத் தொடர்ச்சி காண்பிக்கப்படும். அத்தொடர்கதை எளிதில் முடிவடையாது ஒவ்வொரு வாரமும் “தொடரும்” என்ற வார்த்தைகளோடு முடியும்.
பவுல் அப்போஸ்தலன் உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் சூழ்நிலைக்கு புதியவரல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துச் சென்றபொழுது, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அடிபட்டார், கல்லெறியுண்டார், கப்பல் சேதங்களை சந்தித்தார். என்றோ ஒருநாள் அவர் மரிக்கப்போவதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அதுதான் முடிவு என்று அவர் கருதவில்லை. கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளுக்கு “அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்கிற வார்த்தை நிறைவேறும்” (1 கொரி 15:54) என்று பவுல் எழுதினார். நமது இரட்சகராகிய இயேசு நமது பாவங்களைப் போக்க சிலுவையில் அவரது ஜீவனைக் கொடுத்தார் என்பதை விசுவாசிப்பதின் மூலம், நமது பாவங்களுக்கு மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்ள இயலும் என்பதை பிறருக்கு அறிவிப்பதே பவுலுடைய வாழ்க்கையில் பேரார்வமாக இருந்தது.
திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் மரணத்தின்று எப்பொழுதும் தப்பித்துக் கொள்வதுபோல நமது வாழ்க்கை இல்லை. மரணத்தின் மூலமாகவோ அல்லது கிறிஸ்துவின் வருகையின் மூலமாகவோ இவ்வுலக வாழ்க்கை என்றோ ஒருநாள் முடிவுக்கு வரும். ஆனால் தேவனுடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும் உங்களது, எனது வாழ்க்கையின் கதை தொடரப்போகிறது.