“வோல் ஸ்ரீட்” சஞ்சிகையின் ஒரு அறிக்கையின்படி, அமெரிக்காவில் மனஅழுத்தத்தைப் பின்தள்ளி மனக்கவலை அல்லது மனப்பதற்றமானது முன்னணி வகிக்கும் மனநல பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இன்று மனக்கவலையை எதிர்த்துப் போராடும் மருந்துகளே மருத்துவ உலகில் அதிகம் விற்பனையாகும் மருந்து தயாரிப்புகளாக காணப்படுகின்றன. பொருளாதார ஏற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இவைகளுடன், ஒரு மாத்திரையால் ஒருபோதும் போதுமான அளவு நிவாரணம் பெறமுடியாத வகையில், மனக்கவலையும் அச்சமும் நமது மனித நிலையின் ஒரு பகுதியாகவே உள்ளன.

55-ம் சங்கீதத்தை தாவீது இயற்றியபோது, இன்று நாம் எதிர்கொள்ளும் அதே வகையான சூழ்நிலைகளால் அவருடைய மனமும் குழப்பமடைந்திருந்தது: நகரத்தெருக்களில் நடந்த வன்முறை, கோபம், துஷ்பிரயோகம் ஆகியவற்றால் அவர் திகிலுடன் பின்வாங்கினார் (வச.9-11). ஒரு நெருங்கிய நண்பரால் காட்டிக்கொடுக்கப்பட்ட வேதனையை அவர் அனுபவித்தார் (வச.12-14). அவர் அங்கிருந்து வெளியேறி அமைதியான இடத்திற்கு தப்பித்துச் செல்வதற்கு விரும்பினார் (வச.4-8).

தாவீதின் மனப்பதற்றத்தின் வலி நம்முடையதைப் பிரதிபலிக்கிறதாக இருப்பதால், அவருடைய நிவாரணத்துக்கான மருந்துச்சீட்டு நமக்கானதாகவும் இருக்கமுடியும். அவர், “நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.… கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” (வச.16, 22) என்கிறார்.

மனப்பதற்றம் என்பது, நாம் சுமக்க அழைக்கப்படாத ஒரு சுமையாகும். மாறாக, கிறிஸ்து நம்மை அக்கறையோடு பராமரிப்பதால், அவர்மீது நமது கவலைகளை அல்லது பதற்றங்களை வைக்கவேண்டியவர்களாக இருக்கிறோம் (1பேதுரு 5:7; பிலிப்பியர் 4:6-7-ஐயும் பார்க்கவும்).

இன்று உங்கள் இருதயம் சுமையாக இருந்தால், நீங்கள் அவரிடம் கொடுக்கும் ஒவ்வொரு சுமையையும் சுமப்பதற்கு கர்த்தர் ஆயத்தமாயிருக்கிறார்.