சமீபத்தில் என் மருமகன், என் பேத்தி மேகியிடம் நாம் தேவனோடு பேசலாமென்றும், அவர் அவருடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார் என்றும் விளக்கிக் கொண்டிருந்தார். எனது மருமகன் ஈவிங், சில சமயங்களில் தேவன் வேதவசனங்கள் மூலம் நம்முடன் பேசுவார் என்று சொன்னபொழுது, அவள் எந்தவித தயக்கமுமின்றி: “அவர் என்னிடம் ஒருக்காலும் எதுவும் சொன்னதில்லை. கடவுள் என்னோடு பேசினதை நான் ஒருக்காலும் கேட்டதுமில்லை” என்று மறுமொழி கூறினாள்.

“உன் வீட்டை விற்றுவிட்டு தூரமான தேசத்திற்குச் சென்று அங்குள்ள அனாதைகளை கவனி” என்று நாம் செவியால் கேட்கக்கூடியபடி ஒரு சத்தத்தைக் கேட்டால்தான் தேவன் நம்மோடுகூட உரையாடுகிறார் என்று மேகியைப்போல நாமும் எண்ணலாம். ஆனால் தேவன் “பேசுவதை” கேட்கிறோம் என்று கூறுவது பொதுவாக வேறுவிதமான அர்த்தத்தை உடையது.

வேதத்தை வாசிப்பதின் மூலம் தேவனுடைய சத்தத்தைக் “கேட்கிறோம்”. தேவன் “அவருடைய குமாரன் மூலமாக பேசினாரென்று” வேதாகமம் இயேசுவைப் பற்றிக் கூறுகிறது. தேவனுடைய குமாரனாகிய “இயேசு தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாகவும் இருக்கிறார்” (எபி. 1:3). நாம் இயேசுவில் எவ்வாறு இரட்சிப்பை பெற்றுக்கொள்வது என்றும், அவருக்குப் பிடித்தமான வழிகளில் எவ்வாறு வாழ்வதென்றும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது (2 தீமோ. 3:14–17). வேத வசனங்களோடு கூட நமக்கு பரிசுத்தாவியானவரும் உண்டு. “தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்” என்று 1 கொரிந்தியர் 2:12 கூறுகிறது.

நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டதா? தேவனோடு பேசுங்கள், வேத வசனங்கள் மூலமாக இயேசுவானவரை வெளிப்படுத்தும் பரிசுத்தாவியானவருக்குச் செவிகொடுங்கள். தேவன் உங்களுக்கு கூறவேண்டிய அதிசயமான காரியங்களுக்கு ஒத்திசைந்து செல்லுங்கள்.