வாசிக்க: பிலிப்பியர் 2:1-13
அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வ. 12-13)
நானும் எனது குடும்பமும் ஒரு புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தபோது, எங்களின் புதிய தேவாலயத்தில் சீடத்துவ குழுவின் இயக்குனராக நான் பணியமர்த்தப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமைகளும் புதன் கிழமைகளும் ஆலயம் நிரம்பி இருப்பதால், இந்நாட்களில் நான் விரைவாக இரவு உணவை சமைக்க வேண்டும் அல்லது என் கணவர் மற்றும் இளம் மகள்களைத் தங்களைத் தாங்களே பராமரிக்கும்படி விட்டுவிட வேண்டும். அதனால்தான் என் மைக்ரோவேவ் அடுப்பிற்காக நன்றி சொல்கிறேன். நேரம் குறைவாக இருக்கையில், சில சமயம் வேகவைத்த உருளைக்கிழங்கு போன்ற எளிய உணவு சமைப்பேன். ஒரு வழக்கமான அடுப்பில் அவற்றைச் சமைக்க எடுக்கும் ஒரு மணிநேரத்திற்குப் பதிலாக, ஏழு முதல் எட்டு நிமிடங்களில் அவற்றை நாங்கள் சமைக்கிறோம். உடனடியாக உண்டாகும் மனத்திருப்தி போல.
பணிச்சுமை மிகுந்த நாட்களில் மைக்ரோவேவ் அடுப்பின் பயனை நான் மெச்சிக்கொண்டாலும், ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது உடனடி நிகழ்வு அல்ல என்பதும் எனக்கு தெரியும். இயேசுவும் தான் பாவமற்றவராய் இருந்தாலும் கூட, “ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய்” (லூக்கா 2:52) விருத்தியடைய குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொண்டார். மற்ற யூத குழந்தைகளை போல அவரும் வேதவாக்கியங்களை மனதில் பதிக்க அவற்றை மனனம் செய்தார், தியானித்தார், அவற்றை கற்று தேறுகையில் தன் வாழ்க்கையின் மூலமாக தனது பிதாவாகிய தேவனை கனப்படுத்தினார் (சங்கீதம் 119:11). அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு (எபிரேயர் 5:8) வேதனையின் மத்தியிலும் தேவனுக்கு கீழ்ப்படிதல் எவ்வாறிருக்கும் என்பதையும் அனுபவித்தார். நம்மை போலவே, இயேசுவும் வளர்ந்து முதிர்ச்சி அடைந்தார்.
கிறிஸ்துவை போலாகுதல் என்பதில், நாம் இயேசுவை பிரதிபலிக்கும்படி அதிமதிகமாய் விசுவாசத்தில் வளருவதும் அடங்கும் (பார்க்க ரோமர் 8:29). ஒவ்வொரு முறையும் அவருடைய வல்லமையால் நாம் தேவனுக்கு கீழ்ப்படிகையிலும், நம்முடைய சுயத்தையும் பிறருடைய விருப்பத்தையும் தவிர்த்து தேவனுடைய சித்தத்தைத் தேர்ந்தெடுகையிலும், நமது இரட்சிப்பின் கனியை வெளிக்காட்ட கடினமாக பிரயாசப்படுகிறோம். நாம் அவ்வாறு செயல்படுகையில், “தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:12-13) என்று உறுதிகொள்ளலாம். எண்ணற்ற சிறிய படிகளில் நாம் தேவனுக்கு கீழ்ப்படிவதால், அவருடைய குமாரனை போலவே தோற்றமளிக்கும் வாழ்க்கையை நோக்கிச் செல்வோம்.
—மார்லினா கிரேவ்ஸ்
மேலும் வாசிக்க
ரோமர் 12:1-2 ஐப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், மேலும் உங்கள் சரீரத்தை தேவனுக்கு ஜீவனுள்ள பலியாக கொடுப்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கவனியுங்கள்.
சிந்திக்க
நீங்கள் கிறிஸ்துவின் சாயலில் வளர தேவன் உங்களுக்கு எவ்வாறு ஆற்றலை அளித்துள்ளார்? அவரைப் போலாகும்படி வளர்வதற்கு நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்வது ஏன் முக்கியம்?
,,,,,