வாசிக்க: கொலோசெயர் 2:6-9

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. (வ. 9)

பல ஆண்டுகளாக எனக்கு ஸ்காட்லாந்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒருவேளை நான் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் பேரிலோ அல்லது அதில் காட்டப்பட்ட அந்நாட்டின் உயர்மலைகளின் பேரிலோ அந்த தாக்கம் உண்டாகியிருக்கலாம். அல்லது எங்கள் குடும்ப சரித்திரத்தை ஆராய்கையில் அதில் இருந்த ஸ்காட்டிஷ் குலத்தைப் பற்றி என் அப்பா ஒருமுறை பேசியதால் கூட இருக்கலாம். நான் அந்த இடத்தைப் பற்றி அடிக்கடி யோசித்து, மக்களைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் எண்ணற்ற எண்ணங்களைக் கொண்டிருந்தேன். இருப்பினும், உணர்வுகளும் யதார்த்தமும் எப்போதும் வேறுபட்டவை. அந்தச் செழிப்பான மண்ணில் கால் பதித்து, அந்த மொழியின் ஒலியைக் கேட்டு, ஸ்காட்டிஷ் உணவைச் சாப்பிட்டு, அந்த இடம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எதையும் உண்மையாக அறிய, நாம் யதார்த்தத்தை அனுபவிக்க வேண்டும்; வெறுமனே அதைப் படிக்கவோ சிந்திக்கவோ மட்டும் அல்ல.

இதேபோல், தேவனைப்பற்றிய யதார்த்தத்தை நாம் அறிய விரும்பினால், நாம் இயேசு கிறிஸ்துவை சந்திக்க வேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. தேவன் என்பது பழமையான கதைகள் மற்றும் நொறுக்க கூடிய கட்டளைகளுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு தெளிவற்ற, புத்திக்கெட்டாத கருத்தோ அல்ல. இயேசுவின் உருவில் மாம்சமாகவும் இரத்தமாகவும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டவர் அவர். தேவன் ஒரு சிதைந்த மதக் கோட்பாடும் அல்ல, ஏனெனில், “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோசெயர் 2:9). தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய வேண்டுமானால், நாம் இயேசுவையே பார்க்க வேண்டும். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்.

எனவே நாம் வேதத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கிறோம், தேவனின் சத்தம் எப்படி இருக்கும் என்பதை நாம் கேட்கிறோம். நாம் இயேசுவின் செயல்களைப் பார்க்கிறோம், தேவன் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கிறோம். இயேசுவில், நாம் தேவனின் உள்ளம், தேவனின் நம்பிக்கைகள், தேவனின் தோரணை ஆகியவற்றைப் காண்கிறோம். இயேசுவில், துக்கத்திலோ அல்லது துயரயத்திலோ இருப்பவர்களுக்காக தேவன் எப்படி அழுகிறார் என்பதை நாம் காண்கிறோம் (யோவான் 11:33-35). இயேசுவில், தேவன் எவ்வாறு கண்டனம் செய்ய மறுக்கிறார், மாறாக வரவேற்கிறார் (8:1-11) என்பதை நாம் காண்கிறோம். பலசாலிகள் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பேராசையைப் பின்தொடரும்போது தேவன் எவ்வாறு கோபப்படுகிறார் என்பதை இயேசுவில் காண்கிறோம் (மத்தேயு 21:12-17).

“நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும்…. அதிலே பெருகுவீர்களாக” (கொலோசெயர் 2:6-7). அவர் தேவனின் உள்ளத்தை உங்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்துகிறார்.

-வின் கோலியர்

மேலும் வாசிக்க

யோவான் 8:1-11ஐப் படித்து, அது தேவனுடைய உள்ளத்தை பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள். உங்களை ஆச்சரியப்படுத்துவது எது? உங்களை ஆறுதல் படுத்துவது எது? உங்களுக்கு அறைகூவல் விடுப்பது எது?

சிந்திக்க

தேவனை பற்றிய உங்கள் கருத்திற்கும், இயேசுவைப் பற்றிய உங்கள் புரிதலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எந்த வழிகளில் நீங்கள் உணர்ந்தீர்கள்? இயேசுவின் வாழ்க்கையும் அவருடைய தன்மையும், தேவனை பற்றிய உங்கள் பார்வையை எவ்வாறு மாற்றியமைக்கிறது?

,,,,,

banner image