ஏன் மன்னிக்க வேண்டும்?

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்  – லூக்கா 23:34

என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தபொழுது மன்னிக்க வேண்டியதின் அவசியத்தை நான் அறிந்திருந்தும் அவளை என்னால் மன்னிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் அவளுடைய வார்த்தைகள் என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் ஊடுருவிச்சென்று என்னை வேதனையினாலும் கோபத்தினாலும் நிலைகுலையச் செய்தது. பின்பு இதைக்குறித்து நாங்கள் பேசினபொழுது, அவளை நான் மன்னித்து விட்டதாகக் கூறினேன். ஆனாலும் அதன்பிறகும், வெகுகாலம் அவளைக் காணும்பொழுதெல்லாம் வலியின் சுவடுகள் என்னுள் வெளிப்படுவதை உணர்ந்தேன். அவள்மீது இன்னும் மனக்கசப்பும் கோபமும் இருப்பதை அறிந்து கொண்டேன். இருப்பினும் ஒரு நாள் தேவன் என்னுடைய ஜெபத்திற்கு பதிலளித்து, நான் பற்றிக்கொண்டிருந்த மனக்கசப்பையும் கோபத்தையும் முற்றிலும் விட்டுவிட எனக்கு பெலனளித்தார். இறுதியாக நான் விடுதலை பெற்றேன்.

தான் சிலுவையில் மரிக்கும் தருவாயில் தொங்கிக்கொண்டிருந்த பொழுதும் மன்னிப்பை அளித்ததின் மூலம் கிறிஸ்துவ விசுவாசத்தின் நாடித் துடிப்பே மன்னிப்பதில் தான் உள்ளது என்பதை நமது இரட்சகர் விவரிக்கிறார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் இயேசு நேசித்ததினால், அவர்களை மன்னிக்குமாறு பரமபிதாவிடம் வேண்டுதல் செய்கிறார். மனக்கசப்பையும் கோபத்தையும் பற்றிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக தனக்கு தீங்கிழைத்தவர்களுக்கு கிருபையையும் அன்பையும் ஈந்தளித்தார்.

இப்பொழுதும் கூட தேவன் முன்பு நம்மை நாமே நிதானித்து பார்த்து, நம்மை காயப்படுத்தி னவர்களை நாம் இன்னும் மன்னியாமல் இருப்போமானால், இயேசுவின் மாதிரியைப் பின் பற்றி அவர்களுக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்த நல்ல தருணம் இதுவே. நாம் மன்னிப்பதற்கு அதிக காலமாக சிரமப்படுக்கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் மூலம் பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்யும் பொழுது, நாம், மன்னியாமை என்னும் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்படுகிறோம்.

சிலுவையிலும்கூட தன்னைக் காயப்படுத்தினவர்களை இயேசு மன்னித்தார்.