மன்னிக்கும் கலை
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் – லூக்கா 15:20
ஒரு மதியநேரம், தகப்பனும் இரண்டு மகன்களும்: மன்னிக்கும் கலை எனும் தலைப்பில் அமைந்த கலைக்கண்காட்சி ஒன்றில் இரண்டு மணிநேரம் செலவிட்டேன். இயேசு சொன்ன கெட்ட குமாரன் (லூக். 15:11-31) உவமையே அதன் கருபொருள். மற்ற சித்திரங்களை காட்டிலும் என்னை எட்வர்டு ரியோஜாஸ் அவர்களின், “கெட்ட குமாரன்” கலைவண்ணம் அதிகமாய் கவர்ந்தது. முன்னொரு நாளில் வீட்டைவிட்டு வெளியேறிய குமாரன், கிழிந்த அழுக்குபடிந்த உடைகளுடன் தலையை தொங்கவிட்டு வீடுதிரும்பும் காட்சி.. மரித்தோரின் தேசம் அவனுக்கு பின்னால் இருக்க, அவனுடைய தகப்பன் ஏற்கனவே அவனை நோக்கி ஓடிவரும் அந்த பாதையில் மகன் அடியெடுத்து வைக்கிறான். அந்த சித்திரத்தின் கீழ், இயேசு சொன்ன வார்த்தைகள் “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி…” (வச. 20).
தேவனுடைய மாறாத அன்பு என்னுடைய வாழ்கையை எப்படி மாற்றியது என்பதை சிந்தித்தேன். நான் அவரைவிட்டு விலகினாலும், அவர் என்னைக் கைவிடவில்லை. என் வருகையை எதிர்நோக்கினார், கூர்ந்து கவனித்தார், அதற்காக காத்திருந்தார். அவருடைய அன்பிற்கு நான் தகுதியற்றவன் என்றாலும், அந்த அன்பு ஒருபோதும் மாறாதது. அன்பைக் குறித்த கரிசனை நமக்கு இல்லாமல்போனாலும், அந்த அன்பு நம்மைவிட்டு நீங்காதது.
எப்படி இந்த உவமையில் வழிதவறின மகன் திரும்பிவந்தபோது தகப்பன் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாரோ, அதுபோல நாம் குற்றவாளிகள் என்றாலும், நம்முடைய பரமதந்தை நம்மையும் வரவேற்கக் காத்திருக்கிறார். “என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்” (வச. 23-24).
இன்றும் அவரிடம் திரும்புவோரின் நிமித்தம் கர்த்தர் களிகூருகிறார்-உண்மையில் அது ஒரு கொண்டாடதக்க நிகழ்வு!
தகுதியற்ற நம்மேல் வைக்கும் தேவ அன்பு மாறுவதேயில்லை.