எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

அன்பான கீழ்ப்படிதல்

எங்கள் திருமணத்தின்போது, எங்கள் போதகர் என்னிடம், “உன் கணவரை நேசிக்கவும், மதிக்கவும், கீழ்ப்படிவதாகவும் உறுதியளிக்கிறீர்களா? நீங்கள் இறக்கும் வரை இணைந்திருப்பீர்களா?” என்று கேட்டார். என் கணவரைப் பார்த்து, “கீழ்ப்படிதலா?”  என்று நான் கிசுகிசுத்தேன். நாங்கள் எங்கள் உறவை அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பினோம். நான் உறுதியயெடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் அல்ல. நான் கீழ்படிதல் என்ற வார்த்தையை புரிந்துகொண்டு, மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தபோது, அந்த நிகழ்வை என்னுடைய மாமனார் தன்னுடைய கேமராவில் படம்பிடித்தார். 

பல ஆண்டுகளாக, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எனது எதிர்ப்பும், கணவன்-மனைவி இடையே உள்ள நம்பமுடியாத சிக்கலான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். கீழ்ப்படிதல் என்றால் “அடிபணிக்கப்பட்ட” அல்லது “கட்டாயமான சமர்ப்பணம்” என்று நான் புரிந்திருந்தேன். இந்த புரிதலை வேதாகமம் ஆதரிக்கவில்லை. மாறாக, வேதாகமத்தில் உள்ள கீழ்ப்படிதல் என்ற வார்த்தை, நாம் தேவனை நேசிக்கக்கூடிய பல வழிகளை வெளிப்படுத்துகிறது. நானும் என் கணவரும் முப்பது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடிய போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் இன்னும் இயேசுவையும், ஒருவரையொருவரையும் அதிகமாய் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு சொன்னதின் மூலம், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிவது அவருடன் தொடர்ந்து அன்பான மற்றும் நெருக்கமான உறவின் விளைவாக இருக்கும் என்று அவர் நமக்குக் காண்பித்துள்ளார் (வச. 16-21).

இயேசுவின் அன்பு தன்னலமற்றது, நிபந்தனையற்றது; ஒருபோதும் வலுக்கட்டாயமானதோ அல்லது தவறானதோ அல்ல. நம்முடைய எல்லா உறவுகளிலும் நாம் அவரைப் பின்பற்றி கனப்படுத்தும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதை ஞானமான, அன்பான நம்பிக்கை மற்றும் ஆராதனையின் விளைவாகக் காண பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக. 

 

தேவனை நேசிக்காமல் இருக்கமுடியாது

தற்போது வளர்ச்சிப்பெற்றுள்ள என்து மகன் சேவியர், மழலையர் பள்ளியில் இருந்தபோது, அவன் கைகளை அகல விரித்து, “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொன்னான். நானும் என் நீண்ட கைகளை விரித்து, “நானும் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிலுக்கு சொன்னேன். அவன் தன் கைகளை தன் இடுப்புப் பகுதியில் வைத்தவாறு, “நான் தான் உன்னை முதலில் நேசித்தேன்” என்றான். நான் தலையை அசைத்து ஆமோதித்தேன். “தேவன் முதலில் உன்னை என் கருவில் வைத்தபோதே நான் உன்னை நேசித்தேன்” என்றேன். சேவியரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “நீங்கள் வெற்றி பெற்றீர்கள்” என்றான். “இயேசு நம் இருவரையும் முதலில் நேசித்ததால், நாம் இருவருமே வெற்றிபெறுகிறோம்” என்று நான் சொன்னேன்.

சேவியர் தனது முதல் குழந்தையின் பிறப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கும்போது, அவன் தனது மகனை பிற்காலத்தில் நினைவுகூரும்போதெல்லாம் அவன்மீது அன்புசெலுத்தியதில் மகிழ்ச்சியடையவேண்டும் என்று நான் வேண்டுதல்செய்கிறேன். ஆனால் நான் ஒரு பாட்டியாகத் தயாராகும்போது, சேவியரும் அவருடைய மனைவியும் ஓர் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று என்னிடம் சொன்ன தருணத்திலிருந்து நான் என் பேரனை எவ்வளவு நேசித்தேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.

இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பு, அவரையும் மற்றவர்களையும் நேசிக்கும் திறனை நமக்குத் தருகிறது என்று அப்போஸ்தலர் யோவான் உறுதிப்படுத்துகிறார் (1 யோவான் 4:19). அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை அறிவது, அவருடனான நமது தனிப்பட்ட உறவை ஆழப்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது (வச. 15-17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை நாம் உணர்ந்துகொள்ளும்போது (வச. 19), நாம் அவருக்கான அன்பில் வளரலாம். மேலும் பிற உறவுகளில் அன்பை வெளிப்படுத்தலாம் (வச. 20). அன்பு செய்வதற்கு இயேசு நமக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அன்பு செலுத்தும்படியும் கட்டளையிடுகிறார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (வச. 21). யார் அதிகம் நேசிக்கிறவர்கள் என்று வரும்போதெல்லாம், தேவனே எப்போதும் வெற்றிபெறுகிறார். நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நேசிப்பதில் தேவனை ஜெயிக்கமுடியாது.

 

தேவனே, உமக்கு செவிகொடுக்கிறேன்

தாயாரின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கிரஹாமின் முதல் செவிப்புலன் கருவியை மருத்துவர்கள் அவரது காதில் பொருத்தியபோது, அசௌரியத்தால் நெருக்கப்பட்டான். மருத்துவர் அந்த சாதனத்தை இயக்கிய சில நிமிடங்களில், கிரஹாம் அழுகையை நிறுத்தினான். அவன் கண்கள் விரிந்தன. அவன் புன்னகைத்தான். தனது தாயின் குரல் அவனை ஆறுதல்படுத்துவதையும், ஊக்கப்படுத்துவதையும், அவன் பெயரை அழைப்பதையும் அவனால் கேட்க முடிந்தது.

குழந்தை கிரஹாம் தனது தாய் பேசும் சத்தத்தைக் கேட்டான். ஆனால் அவருடைய குரலை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றும் அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு அவனுக்கு உதவி தேவைப்பட்டது. இதேபோன்ற கற்றல் செயல்முறைக்கு இயேசு ஜனங்களை அழைக்கிறார். நாம் கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன், அவர் நன்றாக அறிந்த மற்றும் தனிப்பட்ட முறையில் வழிநடத்துதலை பெறும் ஆடுகளாக மாறுகிறோம் (யோவான் 10:3). நாம் அவருடைய சத்தத்தைக் கேட்பதையும், செவிசாய்ப்பதையும் பயிற்சி செய்யும்போது, நாம் அவரை நம்புவதற்கும் கீழ்ப்படிவதற்கும் பிரயாசப்படுகிறோம் (வச. 4).

பழைய ஏற்பாட்டில், தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார். புதிய ஏற்பாட்டில், மாம்சத்தில் உதித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்வின் மூலம் ஜனங்களோடு நேரடியாக இடைபட்டார். இன்று நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தி அவற்றை நேர்த்தியாய் புரிந்துகொள்ளச் செய்யும் தெய்வீக வார்த்தைகளை வேதத்தில் இடம்பெறச்செய்திருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்கு நாம் பாத்திரவான்களாக்கப்பட்டுள்ளோம். வேதத்தின் மூலமாகவும் அவருடைய ஜனத்தின் மூலமாகவும் இயேசு நம்மிடத்தில் பேசுகிற வேளையில், ஜெபத்தின் மூலம் நாம் அவருடன் தொடர்புகொள்ள முடியும். வேதத்தின் வார்த்தைகளுடன் எப்போதும் ஒத்துப்போகும் தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் காணும்போது, “தேவனே, நான் உம் சத்தத்தைக் கேட்கிறேன்” என்று நன்றியுடன் துதி செலுத்தக்கூடும். 

இராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம்

ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து, அவரவரின் புத்தகங்களைப் பற்றி பரப்புவதற்கு உதவிய கிறிஸ்தவ குழந்தைகள் புத்தக ஆசிரியர்களின் குழுவில் நான் சேர்ந்தபோது, ​​சிலர் "போட்டியாளர்களுடன் பணியாற்றும் இவர்கள் முட்டாள்கள்" என்றார்கள். ஆனால் எங்கள் குழு இராஜ்ஜிய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்திற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது, போட்டிக்கு அல்ல. நாங்கள் ஒரே குறிக்கோளைப் பகிர்ந்துகொண்டோம்; நற்செய்தியைப் பரப்புவது. நாங்கள் ஒரே ராஜாவாகிய இயேசுவைச் சேவித்தோம். ஒன்றாக, கிறிஸ்துவுக்கான சாட்சியுடன் அதிகமான மக்களைச் சென்றடைகிறோம்.

தலைமைத்துவ அனுபவமுள்ள எழுபது மூப்பர்களை தேர்ந்தெடுக்கும்படி தேவன் மோசேயிடம் கேட்டபோது, "நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்" (எண்ணாகமம் 11:17) என்றார். பின்னர், யோசுவா இரண்டு மூப்பர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டு, மோசேயிடம் அவர்களை நிறுத்தச் சொன்னார். மோசே அதற்கு, "நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே" என்றான் (வ. 29).

போட்டி அல்லது ஒப்பீடுகளில் நாம் கவனம் செலுத்தும் எந்த நேரத்திலும் அது மற்றவர்களுடன் வேலை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது, பரிசுத்த ஆவியானவர் அந்தச் சோதனையைத் தவிர்க்க நமக்கு பெலன் அளிக்க முடியும். நம்மில் இராஜ்ய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்தை வளர்க்கும்படி நாம் தேவனிடம் கேட்கும்போது, ​​அவர் உலகம் முழுவதும் நற்செய்தியைப் பரப்புகிறார், மேலும் நாம் சேர்ந்து அவருக்குச் சேவை செய்யும்போது நம் சுமைகளையும் குறைக்க முடியும்.

தேவனே அவற்றை படைத்தார்

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி கடற்கரை மீன் கண்காட்சியில் நாங்கள் நுழைந்தபோது எனது மூன்று வயது மகன் சேவியர் என் கையை அழுத்தினான். உயரத்திலிருந்து தொங்கவிடப்பட்ட கூம்பு திமிங்கலத்தின் முழு அளவிலான எலும்புக்கூட்டை காண்பித்து, "எவ்வளவு பெரியது!" என்றான். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கும்போது அவனது ஆச்சரியமான மகிழ்ச்சி பெருகியது. உணவளிக்கும் நேரத்தில் நீர்நாய்களால் தண்ணீர் தெறித்துச் சிதறியதை பார்த்து சிரித்தோம். நீல நீரில் நடனமாடும் தங்க பழுப்பு நிற ஜெல்லிமீன்களால் மயங்கி, ஒரு பெரிய கண்ணாடி மீன்வளச் சாளரத்தின் முன் அமைதியாக நின்றோம். "தேவன் சமுத்திரத்தின் ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தார், உன்னையும் என்னையும் படைத்தது போலவே" என்றேன். "ஆஹா" என சேவியர் கிசுகிசுத்தான்.

சங்கீதம் 104 இல், சங்கீதக்காரன் தேவனின் அபரிமிதமான படைப்பை வியந்து, "கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்" (வ. 24) பாடினான். "பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு" (வ. 25) என்று அறிவித்தான். அவர் படைத்த அனைத்திற்கும் தேவனின் தாராளமான மற்றும் திருப்திகரமான போஷிப்புகளை அவன் பறைசாற்றினான் (வ. 27-28). ஒவ்வொன்றின் ஆயுசுநாட்களையும் தேவன் தீர்மானித்துள்ளார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார் (வ. 29-30).

"நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்" (வ. 33) என்று நாமும் சங்கீதக்காரனோடு இனைந்து அா்ப்பனிப்போடு அறிக்கையிடுவோம். பெரியது முதல் சிறியது வரை ஒவ்வொரு உயிரினமும் நாம் தேவனை புகழ்வதற்கு வழிவகுக்கும், ஏனென்றால் அவை அனைத்தையும் அவரே படைத்தார்.

தேவனின் அன்பு கரங்களில்

மற்றுமொரு வியாதிக்குப்பின், எனக்கு புரியாத என் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிகம் பயந்தேன். ஒருநாள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரையில்,  "பூமியின் சுழற்சி வேகம்" அதிகரித்துள்ளதால் , பூமி "தடுமாறுகிறது" மற்றும் "வேகமாக சுழல்கிறது" என்பதாக விஞ்ஞானிகள் எழுதியிருந்ததை வாசித்தேன். "உலக கடிகார நேரத்திலிருந்து ஒரு விநாடியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். ஒரு விநாடி இழப்பு பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், பூமியின் சுழற்சி மாறக்கூடும் என்பது எனக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சிறிய உறுதியற்ற தன்மை கூட என் விசுவாசத்தைத் தடுமாறச் செய்யும். இருப்பினும், தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை அறிவது, நாம் அறியாதவை எவ்வளவு பயமுறுத்துகிறதாயினும் அல்லது நம் சூழ்நிலைகள் எவ்வளவு நிலையற்றதாயினும், தேவனை நம்ப எனக்கு உதவுகிறது.

சங்கீதம் 90-ல் மோசே சொன்னார், "பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்." (வ. 2). எல்லா படைப்பின் மீதும் தேவனின் எல்லையற்ற வல்லமை, கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவராக, காலம் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று மோசே அறிவித்தார் (வ.3-6).

தேவனையும் அவர் உருவாக்கிய அற்புதமான உலகத்தையும் அறிய நாம் முயலும்போது; அவர், காலத்தையும் அனைத்து படைப்பையும் தொடர்ந்து  நேர்த்தியாக ஆளுவதைக்  கண்டுகொள்ளலாம். நமது வாழ்விலும்கூட புரியாத மற்றும் புதிதாக அறிந்த ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், தேவனை நம்பலாம். அவருடைய அனைத்துப் படைப்புகளும் அவரின் அன்பான கரங்களில் பாதுகாப்பாக உள்ளன.

தேவனின் பேரன்பின் சுழற்சி

என் முப்பது வயதில், இயேசுவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்தபின் புதிய விசுவாசியான என் உள்ளத்தில் அதிக கேள்விகள் இருந்தன. நான் வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கியபோது, கேள்விகள் இன்னும் அதிகமாயிற்று. "தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் எப்படிக் கீழ்ப்படிய கூடும்? நான் இன்று காலைதான் என் கணவரை மனமுடையச் செய்துவிட்டேனே!" என்று ஒரு நண்பரிடம் கேட்டேன்.

"வேதாகமத்தை தொடர்ந்து வாசி, இயேசு உன்னை நேசிப்பது போல நீயும் பிறரை நேசிக்க உதவுமாறு பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடு" என்றாள் தோழி.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேவனுடைய பிள்ளையாக வாழ்ந்த பிறகு, அந்த எளிய ஆனால் ஆழமான சத்தியம் அவருடைய பேரன்பின் சுழற்சியின் மூன்று படிகளை கடைப்பிடிக்க இன்னும் எனக்கு உதவுகிறது: முதலாவதாக, அப்போஸ்தலன் பவுல், இயேசுவை பின்பற்றுவோர் வாழ்வில் அன்பே மையமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான கடனை" கடைப்பிடிப்பதின் மூலம், ஆண்டவருக்கு கீழ்ப்படிவார்கள். "பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்." (ரோமர் 13:8). இறுதியாக, "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது;"(வ.10) என்பதால் இதைச் கடைப்பிடிப்பதின் மூலம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.

 

கிறிஸ்து சிலுவையில் நமக்காகப் பலியாகக் கொடுக்கப்பட்டதால் தேவனுடைய பேரன்பை நாம்  அனுபவித்திருப்பதால், நாம் நன்றியுள்ள இருதயத்தோடு இவ்வன்பைப் பிரதிபலிக்க முடியும். இயேசுவுக்கான நமது நன்றியுணர்வு, நமது வார்த்தைகள், செயல்கள் மற்றும் மனப்பான்மைகளால் மற்றவர்களை நேசிக்க வழிவகுக்கிறது. அன்பாகவே இருக்கும் உண்மையான தேவனிடமிருந்தே அந்த மெய்யான அன்பு பாய்ந்தோடுகிறது, (1 யோவான் 4:16,19).

அன்பு தேவனே, உம் பேரன்பின் சுழற்சியினால் இயங்கிட எங்களுக்கு உதவும்!

வாஞ்சையுள்ள இரட்சகர்

வீட்டிற்கு தாமதமாய் வந்த நிக்கோலஸ் வரும் வழியில் வீடு ஒன்றில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு, எரிந்துகொண்டிருந்த அந்த வீட்டை நோக்கி ஓடி, அங்கிருந்த நான்கு பிள்ளைகளை விபத்திலிருந்து காப்பாற்றினார். இன்னும் ஒரு குழந்தை உள்ளேயே இருக்கிறது என்பதை நிக்கோலஸ_க்கு அங்கிருந்து பராமரிப்பாளர் அறிவித்த மாத்திரத்தில், நிக்கோலஸ் சற்றும் தாமதிக்காமல் பற்றியெரிந்துகொண்டிருந்த அந்த வீட்டினுள் பாய்ந்தார். ஆறு வயது சிறுமியுடன் இரண்டாவது மாடியில் சிக்கிய நிக்கோலஸ், ஜன்னலை உடைத்தார். அவசரக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்தவேளையில், சிறுமியை கையில் வைத்துக் கொண்டு அவர் பாதுகாப்பாக குதித்தார். மற்றவர்களின் மீதான அவருடைய அந்த அக்கறையினிமித்தம் அங்கிருந்த அனைத்து குழந்தைகளையும் அவர் காப்பாற்றினார். 

மற்றவர்கள் மீதான அக்கறையினிமித்தம் நிக்கோலஸ், தன்னுடைய உயிரை துச்சமாய் மதித்து தியாக மனப்பான்மையோடு செயல்பட்டார். இந்த சக்திவாய்ந்த அன்பின் செயல், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க தம்முடைய உயிரைக் கொடுத்த மற்றொரு வாஞ்சையுள்ள மீட்பர் காட்டிய தியாக அன்பை நமக்கு பிரதிபலிக்கிறது. அவர் இயேசு. “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6). பவுல் அப்போஸ்தலர் சொல்லும்போது, மாம்சத்தில் வந்த முழுமையான தேவனாகிய கிறிஸ்து, நம்மால் விலைக்கிரயம் செலுத்த முடியாது என்பதை அறிந்து தன்னுடைய ஜீவனை நமக்காய் முழுமனதோடு கொடுத்திருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வச. 8). 

நம்முடைய வாஞ்சையுள்ள இரட்சகராகிய இயேசுவுக்கு நாம் நன்றியும் நம்பிக்கையும் அளிக்கும்போது, நம்முடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் மற்றவர்களை தியாகமாக நேசிக்க அவர் நமக்கு அதிகாரமளிக்க முடியும்.

தென்பட்ட நம்பிக்கை

கடல்சார் ஆய்வாளர் சில்வியா ஏர்லே, பவளப்பாறைகள் சீரழிவதை நேரில் கண்டுள்ளார். அவர் “மிஷன் ப்ளு” என்னும் நிறுவனத்தை உலகளாவிய “நம்பிக்கை புள்ளிகளின்" வளர்ச்சிக்காக நிறுவினார். உலகெங்கிலும் உள்ள இந்த சிறப்பு இடங்கள் “கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.” இது பூமியில் நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த பகுதிகளுக்கு அதிக கவனிப்பு கொடுப்பதின் மூலம், விஞ்ஞானிகள் நீருக்கடியில் உள்ள சமூகங்களின் உறவுகளை மீட்டெடுப்பதையும், ஆபத்தான உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கின்றனர்.

சங்கீதம் 33 இல், தேவன் அனைத்தையும் உண்டாக்கி, அவைகள் உறுதியாய் நிற்கக்கூடியவைகள் என்பதை கண்டார் என்று சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார் (வச. 6-9). தேவன் தலைமுறைகள் மற்றும் தேசங்களின் மீது ஆளுகைசெய்கிறார் (வச. 11-19). அவர் மட்டுமே உறவுகளை மீட்டெடுக்கிறார், உயிர்களைக் காப்பாற்றுகிறார், மற்றும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறார். இருப்பினும், தேவன் உண்டாக்கிய உலகத்தின் மீதும் அதின் மக்கள் மீதும் அக்கறை கொள்வதற்கு அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். 

மேகங்கள் நிறைந்த, சாம்பல் நிற வானத்தின் குறுக்கே தெறிக்கும் வானவில்லை காணும்போதோ, கடலின் அலைகள் கரையில் மோதும்போதும், நாம் அவரை நம்பியிருக்கிறபடியால் அவருடைய மாறாத அன்பை பறைசாற்றலாம் (வச. 22).

உலகத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, நம்மால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது என்று நம்மை நம்பத் தூண்டும் மனச்சோர்வுக்கும் பயத்திற்கும் ஒருவேளை நாம் ஆளாகக்கூடும். இருப்பினும், தேவனுடைய பராமரிப்புக் குழுவின் உறுப்பினர்களாக நாம் நம் பங்கைச் செய்யும்போது, அவரை சிருஷ்டிகராகக் கனப்படுத்தவும், மற்றவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கும்போது அவரை அவர்கள் கண்டுபிடிக்க நாம் உதவலாம்.