எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

தேவனுடைய காப்பியம்

“லைஃப்” என்ற பத்திரிகையின் ஜூலை 12, 1968 அட்டைப் படத்தில் பயாஃப்ராவிலிருந்து (நைஜீரியாவில் உள்நாட்டுப் போரின் போது) பட்டினி கிடக்கும் குழந்தைகளின் கொடூரமான புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதைக் கண்டு மனஉளைச்சலுக்கு ஆளான ஒரு சிறுவன் அந்த பத்திரிக்கையைக் கொண்டுபோய், சபைப் போதகரிடம் காண்பித்து, “தேவனுக்கு இது தெரியுமா?” என்று கேட்டானாம். “இதை உன்னால் புரிந்துகொள்ளமுடியாது என்பது எனக்குத் தெரியும், ஆனால் இதை தேவன் அறிந்திருக்கிறார்” என்று பதிலளித்தாராம். அப்படிப்பட்ட கடவுள் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் வெளியேறினானாம்.

இந்த கேள்விகள் குழந்தைகளை மட்டுமல்ல, நம் அனைவருக்கும் எழுகிறது. தேவனுடைய ஆச்சரியமான வெளிப்பாட்டின் அறிவுடன், பியாஃப்ரா போன்ற இடங்களில் கூட, தேவன் தொடர்ந்து எழுதும் இதிகாசக் கதையைப் பற்றி அந்தச் சிறுவன் கேட்டிருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

இயேசு தங்களை எப்படியாவது காப்பாற்றிவிடுவார் என்று எண்ணி உபத்திரவத்தில் இருந்தவர்களுக்கு இயேசு இந்த கதையைச் சொல்லுகிறார். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” என்று சொல்லுகிறார். ஆனால் இந்த தீமைகள் முடிவல்ல என்று இயேசு அவர்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். ஏனென்றால் அவர் ஏற்கனவே உலகத்தை ஜெயித்துவிட்டார் (16:33). தேவனுடைய கடைசி அத்தியாயத்தில், அனைத்து அநீதிகளும் நியாயந்தீர்க்கப்பட்டு, உபத்திரவங்கள் அனைத்தும் மாற்றப்படும்.

ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும், தேவன் அனைத்து தீமைகளையும் அழித்து எல்லாவற்றையும் சரிசெய்கிறதை நாம் பார்க்கமுடியும். நம்மை அதிகமாய் நேசிக்கிற தேவனை நமக்கு பிரதிபலித்துக் காண்பிக்கிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (வச. 33) என்று இயேசு சீஷர்களுக்குச் சொல்லுகிறார். நாம் அவருடைய சமாதானத்திலும் பிரசன்னத்திலும் இன்று இளைப்பாறுதலடைவோம்.

இயேசு நம் சகோதரர்

ப்ரிட்ஜர் வாக்கருக்கு ஆறு வயது இருக்கும்போது ஒரு வெறிநாய் அவரது தங்கையை கடிக்கும் நோக்கத்துடன் சீறிப்பாய்ந்தது. பிரிட்ஜர் அவளுக்கு முன்னால் குதித்து, நாயின் கொடூரமான தாக்குதலிலிருந்து அவளைக் காப்பாற்றினார். அதினிமித்தம் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிட்ஜரின் முகத்தில் தொண்ணூறு தையல்கள் போடப்பட்டது. ஆனால் பிரிட்ஜரிடம் அவருடைய துணிச்சலைக் குறித்து கேட்டபோது “யாராவது இறக்க நேரிட்டால், அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சொன்னாராம். அதிர்ஷ்டவசமாக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிரிட்ஜரின் முகம் குணமடைய உதவியுள்ளனர். அவர் தன்னுடைய தங்கையை கட்டிப்பிடித்தவாறு எடுத்த சமீபத்திய புகைப்படமானது அவருடைய உறுதியான சகோதர அன்பை இன்னும் வெளிப்படுத்துகிறது.

நம்முடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் நம்மை பராமரித்துக்கொள்வது இயல்பு. உண்மையான சகோதரர்கள் நாம் பிரச்சனையில் இருக்கும்போது நமக்கு தோள்கொடுப்பார்கள்; நாம் பயப்படும்போதோ அல்லது தனிமையில் இருக்கும்போதோ நமக்கு துணைநிற்பார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் பூரணமானவர்கள் அல்ல, சிலவேளைகளில் அவர்களும் நம்மை காயப்படுத்த நேரிடலாம். நமக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் நம்மோடு எப்போதும் இருக்கும் இயேசு. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் சொல்லுவதுபோல, கிறிஸ்து தன்னை தாழ்த்தி “மாம்சத்தையும் இரத்தத்தையும்” உடையவராகி (வச. 14) மாம்ச குடும்பத்தின் அங்கத்தினராய் மாறி, “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு  ஒப்பாகவேண்டியதாயிருந்தது” (வச. 17). அதினால் இயேசு நம்முடைய மெய்யான சகோதரராய் மாறினார். நம்மையும் சகோதரர் மற்றும்  சகோதரி என்று அழைக்கிறார் (வச. 11).  

இயேசுவை நாம் இரட்சகர், சிநேகிதர், ராஜா என்று அழைக்கிறோம். அவை அனைத்தும் உண்மையே. இயேசு நம்முடைய சகோதரனாய், மனுஷனுக்குரிய பயங்கள், சோதனைகள், சோர்வுகள், துக்கங்கள் என்று அனைத்தின் பாதை வழியாகவே கடந்துசென்றார். நம்முடைய சகோதரர் எப்போதும் நம் பட்சத்தில் நிற்கிறார்.

பலமுள்ளவைகளும் பலவீனமானவைகளும்

ஐயோவா பல்கலைக்கழகத்தின் கல்லுரிகளுக்கிடையில் நடைபெறும் கால்பந்தாட்டத்தில் மனதைக் கவரும் பாரம்பரியம் அரங்கேறுகிறது. ஸ்டெட் ஃபேமிலி என்னும் சிறுவர் மருத்துவமனை ஒன்று இந்த ஐயோவாவின் கின்னிக் ஸ்டேடியத்திற்கு அடுத்ததாக உள்ளது. அந்த மருத்துவமனையில் மேல்தளத்திலிருந்து இந்த ஸ்டேடியத்தின் விளையாட்டை பார்வையிடும்வகையில், உயரமான கண்ணாடி ஜன்னல்கள் இருக்கின்றது. விளையாட்டு நடைபெறும் நாட்களில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரும் அந்த மேல்தளத்தில் வந்து அமர்ந்துகொண்டு விளையாட்டைக் கண்டு மகிழ்வர். முதல் காலாண்டின் முடிவில், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை பார்வையிடுவர். அந்தச் சில நிமிடங்களில் குழந்தைகளின் கண்கள் ஆச்சரியத்தில் ஒளிரும். டி.வியில் மட்டுமே பார்க்கமுடிந்த இதுபோன்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை நேரில் பார்ப்பதும் அவர்கள் தங்கள் மீது அக்கறை காட்டுவதை பார்ப்பதும் அரிதான ஒன்று.  

அதிகாரத்திலுள்ளவர்கள் (நாமெல்லாருக்கும் ஏதோ ஒருவிதத்தில் அதிகாரம் இருக்கிறது), பலவீனமானவர்களைக் கவனித்துக்கொள்ளவும், கஷ்டப்படுகிறவர்களைக் கவனிக்கவும், சரீர பெலவீனம் கொண்டவர்களை பராமரிக்கவும் வேண்டும் என்று வேதம் அறிவுறுத்துகிறது. இருந்தாலும் அப்படிப்பட்ட தேவையிலுள்ளவர்களை நாம் அவ்வப்போது புறக்கணிக்கிறோம் (எசேக்கியேல் 34:6). எசேக்கியேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் தலைவர்களை அவர்களின் சுயநல சிந்தைக்காகவும், தேவையிலுள்ளவர்களை அலட்சியப்படுத்தியதற்காகவும் கண்டிக்கிறார். “மேய்ப்பருக்கு ஐயோ!... நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும்... அவைகளை ஆண்டீர்கள்” என்று எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அவர்களை எச்சரிக்கிறார்.   

நமது தனிப்பட்ட ஆர்வங்கள், தலைமைத்துவ சித்தாந்தங்கள் அல்லது பொருளாதாரக் கொள்கைகள், துன்பத்தில் இருப்பவர்களுக்கு அக்கறைக் காட்டுவதற்கு நமக்கு எந்த அளவிற்கு தடையாயிருக்கிறது? பலமுள்ளவர்கள் பலவீனர்களை நோக்கிப் பார்க்கிற ஒரு பாதையை தேவன் நமக்குக் காண்பிக்கிறார் (வச. 11-12).

ஜெபமும், மாற்றமும்

1982 ஆம் ஆண்டில், போதகர் கிறிஸ்டியன் ஃபூரர் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் திங்கட்கிழமை ஜெபக்கூட்டங்களைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக உலகளாவிய வன்முறை, அடக்குமுறை மற்றும் கிழக்கு ஜெர்மன் ஆட்சியின் நடுவிலும் தேவனிடம் சமாதானம் வேண்டி ஒரு சிலர் கூடி ஜெபித்தனர். கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தேவாலயங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த போதிலும், சபை வாசலுக்கு வெளியே வெகுஜனக் கூட்டம் வரும் வரை, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  
  
அக்டோபர் 9, 1989 அன்று, எழுபதாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த கலவரத்திற்கும் பதிலடி கொடுக்க ஆறாயிரம் கிழக்கு ஜெர்மன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அமைதியாக இருந்தது, ஆனால் வரலாற்றாசிரியர்கள் இந்நாளை ஒரு வரலாற்றுச் சிறப்பாகவே கருதுகின்றனர். ஒரு மாதம் கழித்து, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது. பெரிய மாற்றம் ஜெபக்கூட்டத்துடன் தொடங்கியது. நாம் தேவனிடம் திரும்பி, அவருடைய ஞானத்தையும், பலத்தையும் நம்பத் தொடங்கும் போது, விஷயங்கள் பெரும்பாலும் மாறவும், மாற்றி அமைக்கப்படவும் தொடங்குகின்றன. இஸ்ரவேலைப் போலவே, "[நம்] துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது," நம்முடைய மிக மோசமான இக்கட்டான நிலைகளை, ஆழமாக மாற்றியமைக்கவும், நம்முடைய மிகவும் வேதனையான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கூடிய தேவனை நாம் கண்டு கொள்வோம் (சங்கீதம் 107:28).  
  
தேவன் "கொந்தளிப்பை அமர்த்துகிறார்", "அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும்" மாற்றுகிறார் (வச. 29,35). நாம் யாரிடம் ஜெபிக்கிறமோ, அவரே நமக்கு விரக்தியிலிருந்து நம்பிக்கையையும், அலங்கோலத்திலிருந்து அழகையும் கொண்டு வருகிறவர். 
  
ஆனால் தேவன்தான் (அவரது காலத்தில், நம்முடையது அல்ல) மாற்றத்தை ஏற்படுத்துகிறவர். அவர் செய்யும் மறுரூபமாக்கும் பணியில் நாம் எவ்வாறு பங்கு கொள்கிறோம் என்பதே ஜெபம். 

தேவனின் மறக்காத நினைவுகள்

ஒரு நபர் 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான பிட்காயின் என்னும் ஒருவகையான ஆன்லைன் பணத்தை வைத்திருந்தார். ஆனால் அவரால் அதில் ஒரு சதவீதத்தை செலவழிக்க முடியவில்லை. அவருடைய அந்த தொகையை சேமித்துவைக்கும் கருவியின் பாஸ்வேர்டை மறந்துவிட்டார். அதில் சரியான பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்யும் பத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டால், அந்த கருவி தானாகவே அழிந்துவிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவருடைய அதிர்ஷ்டம் அவருடைய கைக்கு எட்டாத ஒன்றாய் மாறிவிட்டது. ஒரு தசாப்தமாக, அவன் அந்த பாஸ்வேர்டை நினைவுகூர முயற்சித்து, மிகவும் வேதனையடைந்தார். அவர் எட்டு முறை பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்து எட்டு முறையும் தோல்வியடைந்தார். 2021ஆம் ஆண்டில், தன்னிடத்திலிருக்கும் அனைத்தும் மறைந்துபோவதற்கு தனக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது என்று புலம்பினார்.  
மறதி, நம்முடைய இயல்பான குணாதிசயம். சிலவேளைகளில் சிறிய காரியங்களை மறக்கிறோம் (சாவியை தொலைப்பது போல), சிலவேளைகளில் பெரிய காரியங்களை மறந்துவிடுகிறோம் (பாஸ்வேர்ட் தெரியாமல் பெரிய பணத்தொகையை இழப்பது). ஆனால் தேவன் நம்மைப் போலில்லை. அவருக்கு பிரியமான காரியங்களையோ அல்லது மக்களையோ அவர் மறப்பதேயில்லை. கடினமான போராட்டங்களுக்கு மத்தியில் தேவன் நம்மை மறந்துவிட்டாரோ என்று இஸ்ரவேலர்கள் அஞ்சினர்: “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” (ஏசாயா 49:14). தேவன் நம்மை எப்போதும் நினைவில் வைத்திருக்கக்கூடியவர் என்று ஏசாயா தன் ஜனத்தை எச்சரிக்கிறான். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” என்று தீர்க்கதரிசி கேட்கிறான். ஒரு தாய் தன் பாலகனை மறக்கமாட்டாள். அவளே, மறந்தாலும் தேவன் நம்மை மறப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (வச. 15).  
“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் நம்முடைய பெயர்களை அவருடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார். அவர் நேசிக்கிறவர்களை அவர் என்றுமே மறப்பதில்லை என்பதை நாம் நினைவில்கொள்வோம்.

ஆவியாலே ஆகும்

ஜெர்கன் மோல்ட்மேன் என்ற தொண்ணூற்று நான்கு வயதான ஜெர்மானிய இறையியலாளர் எழுதிய பரிசுத்த ஆவி பற்றிய புத்தகத்தின் விவாதத்தின் போது, பேட்டியெடுப்பவர் அவரிடம், “நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை செயல்படுத்துகிறீர்கள்? மாத்திரை சாப்பிட்டால் செயல்படுமா? மருந்து நிறுவனங்கள் ஆவியானவரை உற்பத்திசெய்கின்றனவா?” என்று கேலியாகக் கேட்டார். மோல்ட்மேனின் புருவம் உயர்ந்தது. தலையை மெல்லமாக அசைத்து, “நான் என்ன செய்யமுடியும்? எதுவும் செய்யாதீர்கள். ஆவியில் காத்திருங்கள், ஆவியானவர் வருவார்” என்று பதிலளித்தாராம்.  
நமது ஆற்றலும் நிபுணத்துவமும்தான் காரியங்களைச் செய்ய வைக்கும் என்ற நம்முடைய தவறான நம்பிக்கையை மோல்ட்மேன் சுட்டிக்காட்டினார். தேவன் காரியங்களைச் செய்கிறார் என்பதை செயல்கள் வெளிப்படுத்துகின்றன. திருச்சபையின் துவக்கநாட்களில், மனித யுக்திகளினாலோ அல்லது திறமையான தலைவர்களோ அது சாத்தியமாகவில்லை. மாறாக, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,” அறையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஆவியானவர் நிரப்பினார் (2:2). அடுத்து, ஒரு புதிய சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டுவதின் மூலம் அனைத்து இன மேன்மைகளையும் ஆவியானவர் ஒன்றுமில்லாமல் சிதைத்தார். தேவன் தங்களுக்குள் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு சீஷர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை, “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்(டனர்)” (வச. 4).  
திருச்சபையோ அல்லது பகிர்ந்து செய்யப்படும் எந்த ஊழியமோ நம்முடைய திறமையினால் சாத்தியமாகக்கூடியது அல்ல. ஆவியானவரால் என்ன செய்யமுடியுமோ அதை மாத்திரமே நாம் முழுமையாய் சார்ந்துகொள்கிறோம். இது நம்மை துணிகரமாகவும் இளைப்பாறவும் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளை அநுசரிக்கிற இன்று, ஆவியானவருக்குக் காத்திருந்து செயல்படுவோம்.  

நான் யார்?

1859ஆம் ஆண்டில், ஜோஷ்வா ஆப்ரஹாம் நார்டன் தன்னை அமெரிக்காவின் பேரரசனாக அறிவித்தார். நார்டன், சான் பிரான்சிஸ்கோ ஷிப்பிங்கில் தனது அங்கீகாரத்தை ஏற்படுத்தி தோற்றுபோயிருந்தார். ஆனால் அமெரிக்காவின் பேரரசராக தன்னுடைய புதிய அங்கீகாரத்தை ஸ்தாபிக்க விரும்பினார். சான் பிரான்சிஸ்கோ மாலை செய்தித்தாளில், “பேரரசர்” நார்டனின் அறிவிப்புகள் என்று பிரசுரமாகியிருந்தது. மக்கள் அதைப் பார்த்ததும் சிரித்துவிட்டனர். நார்டன் சமூகத்தின் தீமைகளை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். தனது சொந்த நாணயத்தை அச்சிட்டார். மேலும் பிரிட்டிஷ் பேரரசின் ராணி விக்டோரியாவுக்கு கடிதம் எழுதி, அவர் தன்னை திருமணம் செய்துகொண்டு அதின் மூலம் தங்கள் ராஜ்யங்களை ஒன்றிணைக்குமாறு கேட்டுக் கொண்டார். உள்ளுர் தையல்காரர்களால் வடிவமைக்கப்பட்ட அரச இராணுவ சீருடைகளை அவர் அணிந்திருந்தார். “நார்டன் ஒவ்வொரு அங்குலத்திலும் ராஜாவாகவே இருக்கிறார்” என்று ஒரு பார்வையாளர் வர்ணித்தார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படி இருந்ததில்லை. நாம் யாராக இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு நாம் மாறுவதில்லை.  
நம்மில் பலர் பல ஆண்டுகளாக தங்களை யார் என்றும் தங்களின் மதிப்பு என்னவென்றும் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய அங்கீகாரத்தையோ பெயரையோ வைத்து நம்மால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. தேவன் மாத்திரமே நம்மை யார் என்று அடையாளப்படுத்தமுடியும். ஆச்சரியவிதமாய் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் அவர் நம்மை குமாரனாகவும் குமாரத்தியாகவும் அழைப்பு விடுத்து, அவருடைய இரட்சிப்பை அருளினார். “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் சொல்லுகிறார். இந்த அங்கீகாரமானது நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. நாம், “இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (வச. 13).  
தேவன் நமக்கு பெயரையும் கிறிஸ்துவில் அங்கீகாரத்தையும் கொடுக்கிறார். அவர் நம்மை யார் என்று நமக்கு அறிவிப்பதினால் நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்திவிடுவோம்.  

இயேசுவுடன் வீட்டில் தங்கியிருத்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, விலங்குகள் பராமரிக்கும் இடத்திலிருந்து ஜூனோ என்ற வயது வந்த கருப்பு பூனையை வீட்டிற்கு கொண்டு வந்தோம். எங்கள் வீட்டிலிருக்கும் எலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நான் அதை கொண்டுவந்தேன். ஆனால் எங்கள் வீட்டிலிருப்பவர்கள், செல்லப்பிராணியை விரும்பினர். எங்கள் வீடு தான் ஜூனோவின் வீடு என்றும், தன் உணவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இங்கே தான் திரும்பிவரவேண்டும் என்றும் அது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அதற்கு கற்றுக்கொடுப்பதற்கு முதல் வாரத்தில் நாங்கள் அதிக பிராயாசம் ஏறெடுத்தோம். அதன் பிறகு ஜூனோ எங்கு சுற்றித் திரிந்தாலும், அது வீட்டிற்கு சரியாய் வந்து சேரும்.  
நம்முடைய மெய்யான வீட்டை அறியாதபட்சத்தில், நாம் நன்மை, அன்பு, மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி அலைந்துகொண்டேயிருப்போம். மெய்யான வாழ்க்கையை நாம் அடையவேண்டுமாகில், “என்னில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:4) என்று இயேசு சொல்லுகிறார். வேதாகம நிபுணரான ஃபிரடெரிக் டேல் ப்ரூனர், நிலைத்திருத்தல் என்னும் வார்த்தையானது குடும்பம் மற்றும் வீடு பற்றிய எண்ணத்தைத் தூண்டுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். எனவே புரூனர் இயேசுவின் வார்த்தைகளை “என்னோடு வீட்டில் தங்கியிருங்கள்” என்று மொழிபெயர்க்கிறார்.  
வீட்டைக் குறித்த அந்த சிந்தையை தூண்டுவதற்கு இயேசு, திராட்டைச் செடியில் நிலைத்திருக்கும் கிளைகளை உதாரணமாய் பயன்படுத்துகிறார். கிளைகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதின் வீடாகிய செடியில் நிலைத்திருக்கவேண்டும்.  
நம்முடைய பிரச்சனைகளை சரிசெய்வதற்கு அல்லது சில புதிய “ஞானத்தை” அல்லது மகிழ்ச்சியான எதிர்காலத்தை வழங்குவதற்கு வெற்று வாக்குறுதிகளுடன் பல குரல்கள் நம்மை அழைக்கின்றன. ஆனால் நாம் உண்மையாக வாழ வேண்டுமானால், நாம் இயேசுவில் நிலைத்திருக்க வேண்டும். நாம் வீட்டில் இருக்க வேண்டும்

தேவன் நம்மை அறிவார்

சமீபத்தில் மைக்கெல் ஏஞ்சலோவின் சிற்பகலைப் புகைப்படத்தை நோக்கிய போது, அதிலுள்ள மோசேயின் வலது கையில் தசைகள் வீங்கி இருப்பதைக் கண்டேன். அந்தத் தசை முன்னங்கையில் உள்ள ஒரு மெல்லிய தசையாகையால் அதை ஒருவர் உற்று நோக்கினால் இன்றி அதை கண்டறிய முடியாது. புரிந்துகொள்ளக் கடினமான குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளும் கலைஞராகிய மைக்கேல் ஏஞ்சலோ, மனிதர்களை உற்று நோக்கித் தனது சிற்பக் கலைகளைச் செதுக்குவார். அக்கலையுணர்வு அவருக்கே உரியதாகும். மைக்கேல் ஏஞ்சலோ கிரானைட்டுகளில் மனிதனின் உள்ளான ஆத்துமாவை வெளிப்படுத்துவதற்கு எடுத்த முயற்சி, முழுமையாக வெற்றி பெறவில்லை.                                    

தேவன் ஒருவராலேயே மனிதனின் ஆழ்ந்த மனதின் உண்மைத்தன்மையை அறிய முடியும். எவ்வளவுதான் நாம் மனிதர்களை உற்று நோக்கினாலும், கவனித்தாலும், அவையெல்லாம் நிழலேயாகும். ஆனால் தேவன் நிழலுக்கு அப்பாற்பட்டதைப் பார்க்கிறார். அதைத்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா "நீர் என்னை அறிந்திருக்கிறீர்", "என்னைக் காண்கிறீர்" எனக் குறிப்பிடுகிறார் (வ.12: 3). தேவனுடைய ஞானம் என்பது தத்துவம் சார்ந்தது அல்லது அறிவு சார்ந்ததோ அல்ல.‌ அவர் நம்மை தூரத்தில் இருந்து கவனிப்பவர் அல்ல, அவர் நமது மனதின் உண்மையான நிலையைக் காண்கிறவராய் இருக்கிறார். நம்மாலேயே புரிந்து கொள்ளமுடியாத ஆழங்களையும் தேவன் அறிகிறவராயிருக்கிறார்.   

நம்முடைய போராட்டங்கள் எதுவாயிருந்தாலும், நம்முடைய இதயங்களில் என்ன நடந்தாலும், தேவன் அதைக் காண்கிறார், அதை உண்மையிலேயே அறிந்திருக்கிறார்.           

-வின் கோலியர்