எந்த ஞானம்?
2018, ஈஸ்டர் தினத்திற்கு சற்று முன்பு, தீவிரவாதி ஒருவன் மார்க்கெட் ஒன்றில் நுழைந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொன்று, ஒரு பெண்ணை பிணையக் கைதியாய் கொண்டுசென்றான். அந்த பெண்ணைக் காப்பாற்றும் காவலர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கு பதிலாக தன்னை பிடித்துக்கொண்டு அந்த பெண்ணை விடுவிக்குமாறு ஒரு காவல் அதிகாரி துணிச்சலாய் முன்வந்தார்.
அந்த வழக்கத்திற்கு மாறான துணிச்சல் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. பிரபலமான நபர்கள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களையே நீங்கள் கலாச்சார அடையாளமாய் பார்ப்பதுண்டு. அவற்றை ஊடகங்களிலும் அவ்வப்போது பதிவிட்டு, மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுண்டு. “நீங்கள் கனவுகண்ட வாழ்க்கையை வாழ்வதே மிக சுவாரஸ்யமான வாழ்க்கை” என்பது அப்படிப்பட்ட ஒரு பிரபல தத்துவம். “உன்னை முதலில் நீ நேசி, மற்றதெல்லாம் தானாய் உன்னிடத்தில் சேரும்” என்பதும் இன்னொரு தத்துவம். “உனக்காய் என்ன செய்யவேண்டுமோ, அதை செய்” என்பது மூன்றாவது தத்துவம். இந்த தத்துவங்களையெல்லாம் அந்த காவல் அதிகாரி கடைபிடித்திருந்திருப்பாராகில், முதலில் ஓடி ஒளிந்து தன்னுடைய உயிரை காப்பாற்ற முயற்சித்திருப்பார்.
இந்த உலகத்தில் இரண்டு வகையான ஞானம் இருப்பதாக அப்போஸ்தலர் யாக்கோபு குறிப்பிடுகிறார்: ஒன்று, பூமிக்குரிய ஞானம், மற்றது பரலோக ஞானம். முதலாவது ஞானம், சுயநலத்தினாலும் ஓழுங்கீனங்களினாலும் அடையாளப்படுத்தப்படுகிறது (யாக்கோபு 3:14-16); இரண்டாவது ஞானம், தாழ்மை, கீழ்ப்படிதல், சமாதானம் செய்தல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது (வச. 13, 17-18). பூமிக்குரிய ஞானமானது சுயத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் பரலோக ஞானமானது, மற்றவர்களை முன்னிலைப்படுத்தி, தாழ்மையான கிரியைகளை நடப்பிக்க தூண்டுகிறது (வச. 13).
காவல் அதிகாரி சொன்ன நிபந்தனையை அந்த தீவிரவாதி ஏற்றுக்கொண்டான். பிணையக்கைதியாயிருந்த பெண் விடுவிக்கப்பட்டாள். ஆனால் அந்த காவல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று, யாரோ ஒருவருக்காய் தவறுசெய்யாத ஒரு மனிதன் உயிர்கொடுத்த சம்பவத்தை உலகம் சாட்சியிட்டது.
பரலோகத்தின் ஞானமானது சுயத்தின் மீது தேவனை வைப்பதால், தாழ்மையான கிரியைகளை செய்ய நம்மை தூண்டுகிறது (நீதிமொழிகள் 9:10). நீங்கள் எந்த ஞானத்தை இன்று பின்பற்றுகிறீர்கள்?
கிறிஸ்துவுக்குள் வேற்றுமையில் ஒற்றுமை
வணிக ஆய்வாளர் ஃபிரான்சிஸ் எவன்ஸ் ஒருமுறை, 125 காப்பீட்டு விற்பனையாளர்களை ஆய்வு செய்து, அவர்களை வெற்றிகரமாக்கியது என்ன என்பதைக் கண்டறிந்தார். அவர்களின் திறமை காரணமாய் அமையவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. மாறாக, வாடிக்கையாளர்கள் அரசியல், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் தங்களோடு சரிநிகராய் இருப்பவர்களிடமே காப்பீடு எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிஞர்கள் இதை ஹோமோபிலி என்றழைக்கின்றனர். அதாவது, நம்மைப்போல் இருப்பவர்களை விரும்பும் போக்கு என்று அர்த்தம்.
நம்மைப் போன்ற சிந்தை கொண்டவர்களை விரும்பும்போக்கானது, திருமணம் மற்றும் சிநேகிதர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற செய்கைகளிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் அதுபோன்ற சிந்தை ஆபத்தானது. நம்மைப் போன்ற சிந்தை மற்றும் எண்ணம் கொண்டவர்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது, சமுதாயமானது இனம், அரசியல், பொருளாதாரம் என்று பல பிரிவுகளாய் பிரியக்கூடிய அபாயம் நேரிடுகிறது.
முதலாம் நூற்றாண்டில், யூதர்கள் யூதர்களோடும், கிரேக்கர்கள் கிரேக்கர்களோடுமே பழக்கம் வைத்திருந்தனர். பணக்காரனும் ஏழையும் சேருவதேயில்லை. ரோமர் 16:1-16இல் ரோமத் திருச்சபையில், ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் (யூதர்கள்), எப்பனெத் (கிரேக்கன்), பெபேயாள் (அநேகருக்கு உதவிசெய்தவள் என்பதினால் ஐசுவரியவாட்டியாய் இருந்திருக்கக்கூடும்), மற்றும் பிலொலோகு (பொதுவாக அடிமைகளுக்கு கொடுக்கப்படும் பெயர்) என்று பல பெயர்களை பவுல் பட்டியலிடுகிறார். இந்த வித்தியாசமான மக்களை ஒன்றிணைத்தது எது? “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை” (கலாத்தியர் 3:28) என்னும் இயேசுவே அவர்களை ஒன்றிணைக்கிறார்.
நம்மைப் போன்ற சுபாவம் கொண்டவர்களோடு வாழ்வதும், திருச்சபைக்கு செல்வதும் இயல்பானது. ஆனால் இயேசு அதைக் கடந்துசெல்வதற்கு நம்மை உந்துகிறார். பல பிரிவுகளினாலே பிளவுபட்டிருக்கும் உலகத்தில், வித்தியாசமான மனிதர்களை ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாய் கூட்டிச் சேர்க்கிறார்.
கீழ்த்தள மக்கள்
எனது நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவின் மெர்சி என்ற மருத்துவமனைக் கப்பலில் பணிபுரிகிறார். இம்மருத்துவமனை வளரும் நாடுகளுக்கு இலவச சுகாதார சேவையை எடுத்துச் செல்கிறது. அங்கே பணிபுரிபவர்கள் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையெனில், அவர்களின் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் போய்விடும்.
அவ்வப்போது கப்பலில் ஏறும் தொலைக்காட்சிக் குழுவினர், அங்கே அற்புதமாக பணி புரியும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளைப் படமெடுப்பர். சில நேரங்களில், அவர்கள் அங்கே உள்ள மற்ற குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்ய, தளத்தின் கீழே செல்வார்கள். அங்கே மிக் என்பவர் செய்யும் வேலை பொதுவாக கவனிக்கப்படாமல் இருந்தது.
மிக், ஒரு பொறியாளர், கப்பலின் கழிவுநீர் ஆலையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட பொறுப்பை, முதலில் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் லிட்டர் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நச்சுப் பொருளை நிர்வகிப்பது கடினமான பணியாகும். மிக் அதன் குழாய்கள் மற்றும் பம்புகளை பராமரிக்காவிட்டால், ஆப்பிரிக்காவின் மெர்சி மருத்துவமனையின் உயிர் கொடுக்கும் செயல்பாடுகள் நின்றுவிடும்.
கிறிஸ்தவ ஊழியத்தின் "மேல் தளத்தில்" இருப்பவர்களைப் பாராட்டுவது எளிது, அதே சமயம் கீழே உள்ள தாழ்வான இடங்களில் இருப்பவர்களைக் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். கொரிந்தியர்கள், அசாதாரணமான வரங்களைக் கொண்டவர்களை பிறரைக்காட்டிலும் உயர்த்தியபோது, கிறிஸ்துவின் வேலையில் அனைத்து விசுவாசிகளுக்கும் பங்குண்டென்று பவுல் அவர்களுக்கு நினைவூட்டினார் (1 கொரிந்தியர் 12:7-20). அற்புத சுகமளிப்பதோ, பிறருக்கு உதவுவதோ, ஒவ்வொரு வரமும் முக்கியமானது (வ.27-31). உண்மையில், குறைவான முக்கியத்துவம் என்று நாம் எண்ணும் பணியே அதிக மரியாதைக்குரியது (வ. 22-24). நீங்கள் ஒரு "கீழ்த்தளத்தில்" உள்ள நபரா? உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.உங்கள் பணி தேவனால் அனைவருக்கும் இன்றியமையாதது மதிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நம்பிக்கை ஜூன் 1965 இல், ஆறு டோங்கன் இன இளைஞர்கள் சாகசத்தைத் தேடி தங்கள் தீவிலிருந்து படகில் சென்றனர். ஆனால் முதல் இரவில் ஒரு புயல் அவர்களின் பாய் மரம் மற்றும் சுக்கானை உடைத்தபோது, அவர்கள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத 'அட்டா’ தீவை அடைவதற்கு முன்பு உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் அலைந்து திரிந்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பதினைந்து மாதங்கள் ஆனது.
சிறுவர்கள் இணைந்து அட்டா தீவில் உயிர் பிழைக்க, சிறிய உணவுத் தோட்டம் அமைப்பது, மழைநீரைச் சேமிக்க மரத்தடிகளில் குழிபறிப்பது, தற்காலிக உடற்பயிற்சி கூடம் கட்டுவது போன்றவற்றில் இணைந்து பணியாற்றினார்கள். ஒரு சிறுவன் பாறையிலிருந்து விழுந்ததில் கால் முறிந்தபோது, மற்றவர்கள் குச்சிகள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி அதை குணப்படுத்த உதவினர். வாக்குவாதங்கள் கட்டாய சமரசத்துடன் ஒப்புரவாக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு நாளும் பாடல் மற்றும் ஜெபத்துடன் துவங்கியது. அவர்கள் மரித்துவிட்டதாக எண்ணி இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாக வெளிவந்ததை எண்ணி அவர்களது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர்.
முதல் நூற்றாண்டில் இயேசுவின் விசுவாசியாக இருப்பது ஒரு தனிமைப்படுத்தப்படும் அனுபவமாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டு, அடிக்கடி குடும்பத்தில் இருந்து விலகியிருப்பதால், நீங்கள் அலைந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு ஒழுக்கத்துடனும், ஜெபத்துடனும் இருக்க வேண்டும் (1 பேதுரு 4:7), ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் (வ. 8), வேலையைச் செய்ய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் (வவ.10-11) எனக் குறிப்பிடுகிறார். காலப்போக்கில், தேவன் அவர்களை அவர்களின் சோதனையின் மூலம் "சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்" (5:10) சோதனைக் காலங்களில், "விசுவாசம் மற்றும் நம்பிக்கை" நமக்கு தேவை. நாம் ஜெபித்து ஒற்றுமையுடன் வேலை செய்யும் போது, தேவன் நம்மையும் நிலைநிறுத்துவார்.
கோ-கார்ட் வாகனத்தை சரிசெய்தல்
எனது சிறுவயதில் நான் தங்கியிருந்த வீட்டின் கேரேஜ் பல நினைவுகளை எனக்கு வைத்திருக்கிறது. சனிக்கிழமைகளில் காலை நேரத்தில், என்னுடைய தந்தை காரில் எங்களை கேரேஜிக்கு அழைத்துச் செல்வார். அங்கே உடைந்துபோன கோ-கார்ட் எனப்படும் ஒரு சிறிய ரக பந்தய கார் தென்பட்டது. அதை பழுதுபார்த்து புதுப்பிக்க எண்ணினோம். அதற்கு புதிய சக்கரங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி என்று அதை புதுப்பித்து, நான் அதை பந்தய சாலையில் ஓட்ட முயற்சிக்கும்போது எனது தகப்பனார் வேறு ஏதாகிலும் வாகனம் அப்பக்கம் வருகிறதா என்று பார்த்துக்கொள்வார். இந்த சிறிய ரக வாகனத்தை ஓட்டுவதைக்காட்டிலும் பெரிய காரியங்களை அந்த கேரேஜில் நான் அனுபவித்தேன். ஆம்! ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு தேவனை ருசித்துப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தேவனுடைய மெய்யான சுபாவத்துடன் மனிதன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான் (ஆதியாகமம் 1:27-28). அவர் “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய” தகப்பனாய் வீற்றிருக்கிறார் (எபேசியர் 3:14-15). பிள்ளைகளுக்கு ஜீவனைக் கொடுத்து இந்த உலகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் பெற்றோர்கள், அவர்களை வளர்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சுபாவத்தினால் அல்லாமல், பிதாவாகிய தேவனுடைய தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அனைத்து பெற்றோர்களும் பின்பற்றுவதற்கு உகந்த மாதிரியாய் தேவன் திகழ்கிறார்.
என்னுடைய தகப்பன் எல்லாவிதத்திலும் நேர்த்தியானவர் இல்லை. ஒவ்வொரு தகப்பன் தாயைப் போல அவரும் சிலவேளைகளில் பரலோகத்தை பிரதிபலிக்க தவறலாம். ஆனால் அந்த கேரேஜில் இருந்த அந்த கோ-கார்ட் பந்தய காரை சரிசெய்வதில் அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் பார்த்தபோது, தேவனுடைய குணாதிசயங்களை என்னால் நினைவுகூர முடிந்தது.
காலங்கள்
நான் சமீபத்தில் ஒரு பயனுள்ள வார்த்தையைக் கண்டறிந்தேன்: “குளிர்காலம்.” இயற்கை உலகின் பெரும்பகுதியை இந்த குளிர்காலம் அமைதிப்படுத்துவது போல, வாழ்க்கையின் “குளிர்” பருவங்களில் ஓய்வெடுக்கவும், குணமடையவும் வேண்டியதன் அவசியத்தை விவரிக்க, எழுத்தாளர் கேத்தரின் மே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையை நான் இழந்த பிறகு இந்த ஒப்புமை எனக்கு உதவியாயிருந்தது. இது எனது ஆற்றலை பல மாதங்கள் புதுப்பித்தது. இந்த குளிரானது வலுக்கட்டாயமாய் என் வேகத்தைக் குறைத்ததால் கோபமடைந்த நான், எனது குளிர்காலத்தை எதிர்த்துப் போராடினேன். கோடைக்கால வாழ்க்கை திரும்ப வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருந்தது.
பிரசங்கி, “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லுகிறார் (3:1-4). நடவும் நட்டதை பிடுங்கவும், அழவும் நகைக்கவும், புலம்பவும் நடனம் பண்ணவும் ஒவ்வொரு காலமுண்டு. இந்த வேதவாக்கியத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் குளிர்காலத்தில் தான் அதின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவர்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்றாலும், ஒவ்வொரு பருவமும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும், அதன் வேலை முடிந்ததும் கடந்து போகும். அது என்னவென்று நம்மால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவன் அவைகள் மூலமாக நம்மில் கிரியை செய்கிறார் (வச. 11). என் துக்கநாட்கள் இன்னும் முடியவில்லை. அது முடியும்போது நான் நடனம்பண்ணும் காலம் வரும். தாவரங்களும் விலங்குகளும் குளிர்காலத்தை எதிர்த்துப் போராடாதது போல, நானும் அதை எதிர்த்துபோராட வேண்டியதில்லை. அது அதனுடைய வேலையை செய்வதற்கு அதை முழுமையாய் அனுமதிக்கவேண்டும்.
ஒரு சிநேகிதன், “கர்த்தாவே, உம்முடைய நற்கிரியைகளை இந்த காலத்தில் ஷெரிடனுக்குள் செய்வீர்களா?” என்று சொல்லி எனக்காக ஜெபித்தான். அது என்னுடைய ஜெபத்தைக் காட்டிலும் சிறந்த ஜெபம். தேவனுடைய கரத்தில் காலங்கள் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் அவருடைய புதுப்பிக்கும் கிரியைகளை காண நம்மை அர்ப்பணிப்போம்.
சத்தியம் தேடுவோர்
ஒரு பெண் ஒருமுறை என்னிடம் ஒரு கருத்து வேறுபாடு தன் தேவாலயத்தை இரண்டாய் கிழித்தது என்று சொன்னாள். “எதில் கருத்து வேறுபாடு?” என்று நான் கேட்டேன். “பூமி தட்டையாக இருக்கிறதா?” என்னும் விவாதத்தினால் என்று பதிலளித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு உணவகத்தின் பின் அறையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறி ஒரு மனிதன் தன் கையில் ஆயுதம் எந்தி உள்ளே வந்தார் என்னும் செய்தியைப் படித்தேன். ஆனால் அந்த உணவகத்திற்கு பின்பு எந்த அறையும் இல்லை. ஆகையால் அந்த மனிதனை கைது செய்தனர். இந்த இரண்டு சம்பவத்திலும், மக்கள் இணையதளத்தில் இடம்பெறக்கூடிய சர்ச்சைக்குரிய காரியங்களைப் பார்த்துவிட்டு இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கிறிஸ்தவர்கள் மெய்யான குடிமக்கள்களாய் வாழ்வதற்காய் அழைக்கப்படுகின்றனர் (ரோமர் 13:1-7). நல்ல குடிமகன்கள் தவறான செய்திகளைப் பரப்புவதில்லை. லூக்காவின் நாட்களில் இயேசுவைக் குறித்து பல கதைகள் உலாவந்தன. அவற்றுள் சிலவைகள் உண்மையற்றவைகள் (லூக்கா 1:1). தான் கேட்ட அனைத்து செய்திகளையும் அப்படியே தொடர்புகொள்ளாமல், லூக்கா அவற்றை தீர்க்கமாய் ஆராய்ச்சி செய்து, சாட்சியங்களோடு பேசி (வச. 2), “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து” (வச. 3), அவருடைய சுவிசேஷத்தில் அவற்றை பெயர்கள், மேற்கோள்கள், சரித்திரதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதிவுசெய்துள்ளார்.
நாமும் அப்படியே செய்யமுடியும். தவறான செய்திகள் திருச்சபைகளை பிளவுபடுத்தி ஆத்துமாக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதினால் உண்மைகளைச் சரிபார்ப்பது அவர்களை நேசிப்பதற்கான ஒரு அடையாளமாகும் (10:27). ஒரு பரபரப்பான சம்வத்தை நாம் கேள்விப்படும்போது, அது உண்மையா என்று அறிந்து சரிபார்த்து, நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது. அவ்வாறு செய்து நல்ல தரமான செய்திகளை நாம் பரப்புவது என்பது சுவிசேஷத்திற்கான நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவ்வாறு செய்வதின் மூலம் “சத்தியத்தினால் நிரைந்தவரை” (யோவான் 1:14) நான் சேவிக்கமுடியும்.
வாடகைக்கு நண்பர்
உலகத்தில் வாழும் பலருக்கு, வாழ்க்கை என்பது தனிமையான ஒன்றாய் மாறிவிடுகிறது. 1990லிருந்து நண்பர்கள் இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் பேர் தனிமையில் வாழுகிறார்கள். ஆனால் ஜப்பான் தேசத்தில், சில வயதானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லுகின்றனர். அங்கு அவர்களுக்கு சிநேகிதர்கள் உருவாகின்றனர்.
இந்த தனிமை தொற்றுநோய்க்கு தொழில்முனைவோர் ஒரு “தீர்வை” கொண்டுவந்துள்ளனர். அது தான் வாடகைக்கு நண்பர். சில மணி நேரங்களுக்கு அவர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டால் அவர்கள் உங்களை ஒரு ஓட்டலிலோ அல்லது விருந்துக்கோ சந்தித்து பேசி பழகுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிநேகிதியிடம், உங்களின் வாடிக்கையாளர் யார் என்று கேட்டபோது, “நண்பர்களை உருவாக்கக்கூட நேரமில்லாமல், நீண்டநேரம் வேலை செய்யும் 30லிருந்து 40 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுடையவர்கள்” என்று பதிலளித்தாள்.
பிரசங்கி 4ஆம் அதிகாரம், பிள்ளையும் சகோதரனுமில்லாமல் ஒண்டியாயிருக்கும் ஒரு நபரைக் குறித்து விவரிக்கிறது. அவனுடைய பிரயாசத்திற்கு முடிவில்லை, ஆனாலும் அவனுடைய ஐசுவரியத்தில் அவன் திருப்தியடைகிறதில்லை (வச. 8). “யாருக்காகப் பிரயாசப்படுகிறேன்?” என்று சரியான கேள்வி எழுப்பப்படுகிறது. நல்ல சிநேகிதர்களை அவன் தனக்கென தெரிந்துகொண்டால், அவனுடைய பணிசுமை இலகுவாகவும், இக்கட்டில் அவனுக்கு துணையாகவும் இருக்கும் (வச. 9-12). இறுதியாக, சிநேகிதரில்லாத வெற்றியும் மாயையே (வச. 8) என்று முடிக்கிறார்.
முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (வச. 12) என்று பிரசங்கி சொல்லுகிறான். ஆனால் அதை அவ்வளவு சீக்கிரத்தில் நெய்யவும் முடியாது. உண்மையான நண்பர்களை வாடகைக்கு எடுக்க முடியாது என்பதால், அவர்களை உருவாக்குவதற்கு தேவையான நேரத்தை முதலீடு செய்வோம். தேவனை நமது மூன்றாவது இழையாகக் கொண்டு, நம்மை இறுக்கமாக பிணைப்போம்
திருப்தியை பற்றிக்கொள்ளுதல்
ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).
இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.