பிள்ளையின் விசுவாசம்
நாங்கள் தத்தெடுத்துக்கொண்ட எங்களது பாட்டி பக்கவாதநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய மூளை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மருத்துவர்களால் கணிக்கமுடியவில்லை. அதை தெரிந்துகொள்வதற்கு அவர்கள் சரீரப்பிரகாரமாக இன்னும் தேர்ச்சியடையவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். படுக்கையிலிருந்த அவர் ஒரு சில வார்த்தைகளையே பேசினார். அவற்றிலும் சிலவற்றையே புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பன்னிரெண்டு வருடங்களாக என் மகளை பராமரித்து பாதுகாத்த எண்பத்தாறு வயது மூதாட்டி என்னைப் பார்த்ததும், தன்னுடைய வாயைத் திறந்து “கெய்லா எப்படி இருக்கிறாள்?” என்று என் மகளைக் குறித்து விசாரித்தார். அவர் மிகவும் ஆழமாகவும் முழுமையாகவும் நேசித்த என்னுடைய மகளைக் குறித்த கேள்வியே அந்த கடினமான சூழ்நிலையில் அவர் என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி.
இயேசு குழந்தைகளை அதிகமாய் நேசித்தார். அவருடைய சீஷர்கள் தடைசெய்தபோதும் இயேசு குழந்தைகளை தன்னிடமாய் வரவழைத்துக்கொண்டார். அங்கிருந்த சில பெற்றோர்கள் இயேசுவிடத்திற்கு தங்களுடைய பிள்ளைகளை கொண்டுவர விரும்பினர். இயேசு தன்னுடைய கரங்களை அந்த பிள்ளைகளின் மீது வைத்து அவர்களை ஆசீர்வதித்தார் (லூக்கா 18:15). ஆனால் அவர் சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறதை அங்கிருந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சீஷர்கள் இயேசுவை தொந்தரவுசெய்யவேண்டாம் என்று பெற்றோர்களை அதட்டுகின்றனர். ஆனால் இயேசு குறுக்கிட்டு, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” (வச. 16) என்றார். அவர் சிறுபிள்ளைகளை முன்னிலைப்படுத்துவதின் மூலம் தேவனுடைய இராஜ்யத்தை எந்த அளவிற்கு எளிமையுடனும், நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு மாதிரிப்படுத்திக் காண்பித்தார்.
சிறுபிள்ளைகளுக்கு ஒளிவுமறைவு கிடையாது. எதைப் பார்க்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள விரும்புவர். இந்த குழந்தைகளின் விசுவாசத்தை நாம் பெற்றுக்கொள்ள நம்முடைய பரமபிதா உதவுகிற தருவாயில், ஒரு சிறுபிள்ளையைப் போல நம்பிக்கையோடு அவரை சார்ந்திருக்க நாம் பிரயாசப்படுவோம்.
தாழ்மையைத் தரித்தல்
"ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி "அண்டர்கவர் பாஸ்" என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஒரு புதிய பணியாளரைப் போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார். மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.
நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஒரு "தாழ்மையான நிலையை" (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதனாகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி, கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தம் ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஒரு மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நம் இரட்சகரைப் போலவே "அதே மனப்பான்மையுடன்" இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (2.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.
மெய்யான மார்க்கம்
எனது இரண்டாம் ஆண்டு கல்லூரியின் கோடை விடுமுறைக்கு பிறகு, என்னுடைய ஒரு வகுப்புத் தோழர் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். நான் அவரை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன், அவர் நன்றாக இருந்தார். நானும் என்னுடைய வகுப்பு தோழர்களும், வாழ்நாள் முழுவதும் நாம் சகோதர சகோதரிகளாய் இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.
எனது வகுப்புத் தோழனின் மரணம் பற்றி எனக்கு அதிகம் ஞாபகம் இருப்பது என்னவென்றால், அப்போஸ்தலர் யாக்கோபு, “சுத்தமான பக்தி” (யாக்கோபு 1:27) என்று அழைப்பதற்கு ஏற்ற ஒரு வாழ்க்கையை என் நண்பர்கள் தெரிந்தெடுத்தார்கள். இறந்துபோன அந்த தோழனின் சகோதரிக்கு நாங்கள் சகோதரர்களாய் இருப்போம் என்று தீர்மானித்தோம். அவளுடைய சகோதரன் மரித்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் நாங்கள் சகோதரனுடைய ஸ்தானத்தில் அவளுடைய திருமணம் மற்றும் வளைகாப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்றோம். அவளுக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போது அழைப்பு விடுப்பதற்காக எங்களில் ஒருவர் அவளுக்கு ஒரு செல்போனையும் பரிசளித்தார்.
யாக்கோபின் கூற்றுப்படி, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதே சுத்தமான பக்தியாகும் (வச. 27). என்னுடைய சிநேகதனின் சகோதரி யாருமில்லாத திக்கற்றவள் இல்லையெனினும், அவளுடைய சகோதரன் இனி இல்லை. அவளுடைய புதிய சகோதரர்கள் அந்த இடத்தை நிரப்பினர்.
இயேசுவில் சுத்தமான மற்றும் மெய்யான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்கள், தேவையிலுள்ளவர்களை பராமரித்து (2:14-17), “(திருவசனத்தின்படி) செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்ற ஆலோசனைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு உதவும்போது,உலகின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்போது, அவர்மீது நமக்குள்ள நம்பிக்கையானது தேவையில் உள்ளவர்களை பராமரிக்க நம்மைத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே தேவன் அங்கீகரிக்கும் சுத்தமான பக்தி.
தேவன் பெயர்களை அறிந்திருக்கிறார்
நான் திருச்சபையின் வாலிபர் குழு தலைவியாய் பொறுப்பேற்று, பல வாலிபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது தன் தாயின் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு இளம் வாலிப பெண்ணிடம் பேசினேன். அதிக வெட்கப்படும் அந்த பெண்ணைப் பார்த்து, ஒரு புன்னகையோடு அவளுடைய பெயரை நான் சொல்லி அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன். அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, அழகான கண்கள் விரிய என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்னுடைய பெயர் ஞாபகம் இருக்கிறதா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். வயதில் மூத்தவர்களாய் நிறைந்திருந்த அந்த திருச்சபையில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அழைத்ததால், அவளுடன் நம்பிக்கையான ஒரு உறவை ஏற்படுத்த என்னால் முடிந்தது. அவளை ஒரு பொருட்டாக எண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கை அவளுடைய சுயமதிப்பை கூடச் செய்தது.
ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் அதேபோன்ற ஒரு செய்தியை இஸ்ரவேலர்களுக்கு சொல்லும்படிக்கு தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை பயன்படுத்துகிறார். தேவன் இஸ்ரவேலர்களை காண்கிறார் மற்றும் அவர்களை மதிப்பிடுகிறார் என்பதே அச்செய்தி. சிறையிருப்பிலும் வனாந்திரத்திலும் தேவன் அவர்களைக் கண்டு அவர்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார் (வச. 1). அவர்கள் வேறுயாரோ அல்ல; அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கைவிடப்பட்டவர்களாய் தெரிந்தாலும், அவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர்களைக் குறித்த அவருடைய அன்பு மாறாதது (வச. 4). தேவன் அவர்களை பேர்ச் சொல்லி அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதின் மூலம் அவர்களுடைய அந்த இக்கட்டான தருணத்தில் தேவன் அவர்களுக்கு செய்யப்போகிற நன்மைகளை அறிவிக்கிறார். அவர்கள் பாடுகளின் பாதையில் பயணிக்கும்போது தேவன் அவர்களோடே இருப்பார் (வச. 2). தேவன் அவர்களின் பெயர்களை அறிந்திருப்பதால் அவர்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை.
நாம் நம்முடைய வாழ்க்கையின் ஆழமான ஆழிகளைக் கடக்கும்போது தேவன் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கான நற்செய்தி.
அமைதிக்கான அழுத்தம்
வாழ்க்கையின் மிகப்பெரிய அழுத்தங்களில் ஒன்று வீட்டை மாற்றுவது. நான் எனது முந்தைய வீட்டில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வசித்த பிறகு, எங்கள் தற்போதைய வீட்டிற்குச் சென்றோம். நான் திருமணத்திற்கு முன் எட்டு வருடங்கள் அந்த முதல் வீட்டில் தனியாக வாழ்ந்தேன். பின்னர் என் கணவர் தனது எல்லா பொருட்களுடன் இனைந்தார். பின்னர், ஒரு குழந்தையைப் பெற்றோம், இன்னும் அதிகமான பொருட்கள் சேர்ந்தது.
நாங்கள் புதிய வீட்டிற்கு போன நாளிலும் கூட அமைதியில்லை. வீட்டை மாற்றும் பணியாளர்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னும்கூட, நான் இன்னும் புத்தகத்தை எழுதி முடித்துமே கொண்டிருந்தேன். புதிய வீட்டில் பல படிக்கட்டுகள் இருந்தன, எனவே திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு நேரம் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் அன்றைய நிகழ்வுகளால் நான் மன அழுத்தத்தை உணரவில்லை. பின்னர் அது என்னைப் பாதித்தது, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கப் பல மணிநேரம் செலவழித்தேன். வேதம் மற்றும் வசனங்களின் கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம். தேவனின் கிருபையால், நான் தக்க நேரத்தில் முடிக்க வேதத்தைப் பார்த்து, ஜெபித்து, எழுதினேன். எனவே, வேதத்திலும் ஜெபத்திலும் நான் மூழ்கியதே காரணம் என்று நான் நம்புகிறேன்.
பவுல் எழுதினார், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று. நாம் ஜெபித்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கையில்” (வ. 4). பிரச்சினை மீதிருக்கும் நம் கவனத்தை நம் அருள் நாதரிடம் திருப்புகிறோம். மனவழுத்தத்தைச் சமாளிக்க உதவும்படி நாம் தேவனிடம் கேட்கலாம், ஆனால் நாம் அவருடன் இணைகிறோம், இது " எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம்" (வ. 7) அளிக்கும்.
கதவு சட்டகத்தில் ஆறுதல்
2016 ஆம் ஆண்டு தெற்கு லூசியானாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, எனது சமூக ஊடகத்தை அலசுகையில், ஒரு நண்பரின் இடுகையைக் கண்டேன். அவளுடைய வீடு அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு, என் தோழியின் அம்மா அவளை மனமடிவுண்டாக்கும் சுத்தமாக்கும் வேலையின் மத்தியிலும் தேவனைத் தேடும்படி ஊக்குவித்தார். எனது தோழி பின்னர் வீட்டின் கதவு சட்டகங்களில் வெளிப்பட்ட வேதவசனங்களின் படங்களை வெளியிட்டார். அவ்வசனம் வீடு கட்டப்பட்ட நேரத்தில் எழுதப்பட்டது. மரப்பலகைகளில் வசனங்களை வாசிப்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது.
வேதவசனங்களை கதவு சட்டகங்களில் எழுதும் பாரம்பரியம் இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த கட்டளையிலிருந்து உருவாயிருக்கலாம். தேவன், தான் யார் என்பதை நினைவில் கொள்வதற்காக கதவு சட்டகங்களில் தம் கட்டளைகளை இடும்படி இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்களின் இதயங்களில் கட்டளைகளை எழுதுவதன் மூலம் (உபாகமம் 6:6), அவர்களின் குழந்தைகளுக்குக் கற்பித்தல் மூலம் (வ.7), குறியீடுகள் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி தேவன் கட்டளையிடுவதை நினைவுபடுத்துதல் (வ.8), மற்றும் கதவு சட்டகங்களில் மற்றும் நுழைவு வழிகளில் வார்த்தைகளை வைப்பது (வ.9) ஆகியவற்றின் மூலம் இஸ்ரவேலர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து நினைப்பூட்டிக்கொண்டார்கள். அவர் சொன்னதையோ அல்லது அவருடன் செய்த உடன்படிக்கையையோ ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
தேவனுடைய வார்த்தைகளை நம் வீடுகளில் வைப்பதும், அவற்றின் அர்த்தத்தை நம் இதயங்களில் விதைப்பதும், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய உண்மைத்தன்மையை நம்பியிருக்கும்படியான அடித்தளத்தை உருவாக்க உதவும். சோகமான அல்லது இதயத்தை நொறுக்கும் இழப்பின் மத்தியிலும் கூட நமக்கு ஆறுதலளிக்க அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
கொடுப்பதில் உள்ள சந்தோஷம்
ஐந்து மணி நேர விமான பயணத்தில், ஒரு பெண் தீவிரமாக கம்பளி சட்டையைப் பின்னிக்கொண்டிருந்தாள். அவள் தனது ஊசியை உள்ளேயும் வெளியேயும் நகர்த்தும்போது, அவள் அசைவுகளில் சொக்கிப்போன ஐந்து மாதக் குழந்தையைக் கவனித்தாள். அப்போது அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது: அவள் பின்னிக்கொண்டிருந்த கம்பளி சட்டையை முடிப்பதற்குப் பதிலாக; அவள் தனது சிறிய ரசிகனுக்காக ஒரு தொப்பியை பிண்ண எண்ணினாள். விமானம் தரையிறங்கும் நேரத்தில் அவள் தொப்பியை முடிக்க வேண்டும், அதற்கு ஒரு மணிநேரமே இருந்தது ! அந்த பெண், குழந்தையின் தாயாருக்குச் சிறிய தொப்பியைப் பரிசாக அளித்த போது, மற்ற பயணிகள் புன்னகையுடன் கைதட்டி மகிழ்ந்தனர், அதை முழு குடும்பமும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.
ஆச்சரியமான பரிசுகள் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை நமக்குத் தேவையான அல்லது வெறுமனே விரும்பும் பரிசுகளாக இருந்தாலும், அவற்றின் மூலம் கொடுப்பவர் கிறிஸ்துவின் இரக்கத்தையும் நமக்குக் காட்டலாம். ஆதி சபையில், தபீத்தாள் ஆடைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், "நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்" செய்வதற்கும் பேர்போனவள் (அப்போஸ்தலர் 9:36). அவள் இறந்தபோது, அவளால் பயனடைந்தவர்கள் “[அவள்] செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும்" (வ.39) காண்பித்தனர். அவளுடைய கருணையையும் மற்றும் அவள் தங்கள் வாழ்க்கையைத் தொட்ட விதத்தையும் அவர்கள் சாட்சியமளித்தனர்.
நிகழ்வுகளின் வியத்தகு திருப்பத்தில், பேதுரு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலம், தபீத்தாளை மீண்டும் உயிர்ப்பித்தார் (வ.40). அவருடைய செயல்கள் அவளை நேசித்தவர்களை மகிழ்ச்சியில் நிரப்பியது; மேலும் பலர் கிறிஸ்துவில் விசுவாசிக்க வழிவகுத்தது (வ.42).
நம்முடைய தயவான செயல்களே நாம் செய்யும் மிகவும் மறக்கமுடியாத சில சாட்சியங்களாக இருக்கலாம். தேவன் வழங்குவதற்கேற்ப, இன்று சில ஆச்சரியமான பரிசுகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.
தேவசித்தம் அறிந்திட ஜெபம்
இயேசுவின் இளம் விசுவாசியாக, நான் எனது புதிய அனுதின தியானங்கள் உள்ளடங்கிய வேதாகமத்தை எடுத்து ஒரு பிரசித்தமான வசனத்தைப் படித்தேன்: "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" (மத்தேயு 7:7). விளக்கவுரையில், நமது சித்தம் அவருடைய சித்தத்துடன் இசைவாக இருக்க வேண்டும் என்பதைத் தான் உண்மையில் தேவனிடம் கேட்கவேண்டும் என்று இருந்தது. அவருடைய சித்தம் நிறைவேற நாடுவதின் மூலம், நாம் கேட்டதைப் பெறுவோம் என்று உறுதிக்கொள்ளலாம். இது எனக்கு ஒரு புதிய கருத்தாக இருந்தது, தேவசித்தம் என் வாழ்வில் செய்யப்படும்படி நான் ஜெபித்தேன்.
பின்னர் அதே நாளில், ஆச்சரியப்படும்படி நான் ஏற்கனவே என் மனதில் நிராகரித்த ஒரு வேலை வாய்ப்பைப் குறித்து மீண்டும் ஆர்வமடைந்தேன். மேலும் எனது ஜெபமும் எனக்கு நினைவூட்டப்பட்டது. ஒருவேளை, நான் விரும்பாதது என் வாழ்க்கைக்கான தேவசித்ததின் ஒரு பகுதியாக இருக்கலாம். நான் தொடர்ந்து ஜெபித்து, இறுதியில் அந்த வேலையை ஏற்றுக்கொண்டேன்.
இதைக்காட்டிலும் ஆழமான மற்றும் நித்திய முக்கியத்துவம் வாய்ந்த வேளையில், இயேசு இதை நமக்கு முன்மாதிரியாக்கினார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு வழிவகுத்த காட்டிக்கொடுப்பு மற்றும் கைதுக்கு முன், அவர் ஜெபித்தார்: "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42). அவர் உடல் மற்றும் உணர்வு ரீதியான வேதனையை எதிர்கொண்டபோது, கிறிஸ்துவின் ஜெபம் கடுந்துயராலும் தாங்கொணா வேதனையாலும் நிரம்பியிருந்தது (வ. 44). ஆயினும்கூட, தேவசித்தம் நிறைவேற அவரால் இன்னும் "ஊக்கமாக" ஜெபிக்க முடிந்தது.
என் வாழ்க்கையில் தேவசித்தமே எனது குறிக்கோளான ஜெபமாக மாறியுள்ளது. இதன் பொருள், எனக்கு வேண்டும் அல்லது தேவை என்று எனக்குத் தெரியாத காரியங்களுக்குக் கூட நான் தகுதியானவனாக இருக்கலாம். நான் முதலில் விரும்பாத வேலையே, கிறிஸ்தவ பதிப்பு வெளியீட்டில் எனது பயணத்தின் தொடக்கமாக மாறியது. திரும்பிப் பார்க்கும்போது, தேவசித்தம் நிறைவேறியதாகவே நான் நம்புகிறேன்.
தேவன் உன்னைக் காண்கிறார்
ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி, கைகளை அசைத்த தன் மகனிடம், என் தோழி "கீழே இறங்கு" என்று சற்றே அதட்டினாள். "போதகர் என்னைப் பார்க்க வேண்டும். நான் நிற்காவிட்டால், அவர் என்னைப் பார்க்க மாட்டார்" என்று அவன் வெகுளியாகப் பதிலளித்தான்.
ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி நிற்பதை பெரும்பாலான தேவாலயங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றாலும், என் தோழியின் மகனுடைய கருத்து ஏற்புடையதே. நின்று, கைகளை அசைப்பது நிச்சயமாகப் போதகரின் பார்வையையும், கவனத்தையும் ஈர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
நாம் தேவனின் கவனத்தைப் பெற முயலுகையில், அவரால் கவனிக்கப்படுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேவன் நம் ஒவ்வொருவரையும் எப்போதும் பார்க்கிறார். ஆகார், தன் வாழ்வில் மிகத் தாழ்ந்த, தனிமையான, மிகவும் விரக்தியான நேரத்தில் இருக்கையில், அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தியவரும் அவரே. அவள் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு, ஒரு குமாரனைப் பெறும்படியாக ஆபிராமுக்கு அவனுடைய மனைவி சாராயால் கொடுக்கப்பட்டிருந்தாள் (ஆதியாகமம் 16:3). அவள் கருவுற்றபோது, ஆகாரை தன் மனைவி தவறாக நடத்த ஆபிராம் அனுமதித்தார்: “அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்” (வ.6).
ஓடிப்போன அடிமை தன்னை ஒண்டியாகவும், கர்ப்பமாகவும், பரிதவிக்கத்தக்கவளாகவும் கண்டாள். ஆயினும், வனாந்தரத்தில் அவளது விரக்தியின் மத்தியில், தேவன் மனமுருகி அவளிடம் பேச ஒரு தூதனை அனுப்பினார். தேவதூதன் அவளிடம், “கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்(ட்டார்)டபடியினால்” (வ.11) என்றார். அவள், "நீர் என்னைக் காண்கிற தேவன்" (வ.13) என்று பதிலளித்தாள்.
வனாந்தரத்தின் மத்தியில், இது மிகப்பெரும் புரிதலாகும். தேவன் ஆகாரைக் கண்டு இரக்கம் கொண்டார். நிலைமை எவ்வளவு கடினமான இருந்தாலும், அவர் உங்களைப் பார்க்கிறார்.