மறுபடியும் கட்டி எழுப்புதல்
எட்வர்ட் க்ளீ (Edward Klee) பல ஆண்டுகள் கழித்து பெர்லின் (Berlin) பட்டணத்திற்கு திரும்பி வந்த பொழுது, தான் நேசித்து நினைவுகூர்ந்த எதுவும் அங்கில்லை என கண்டான். அவனைப்போலவே அப்பட்டணமும் வியத்தகுவிதம் கணிசமாக மாறியிருந்தது. ஹெமிஸ்பியர்ஸ் (Hemispheres) பத்திரிக்கையில் அதைக்குறித்து க்ளீ “நீங்கள் மிகவும் நேசித்த பட்டணத்திற்கு திரும்பி செல்வது எதிர்பாராத விளைவை உண்டாக்கலாம், நீங்கள் ஏமாற்றமுமடையலாம்” என எழுதியிருந்தான். முந்தையகாலத்தில் நாம் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் பொழுது, அவை நமக்குள் துக்கத்தையும் ஏதோவொன்றை இழந்தது போன்ற உணர்வையும் உண்டாக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகித்த அவ்விடம் மாறியிருப்பது போலவே நாமும் மாறிவிட்டோம்.
இஸ்ரவேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட நெகேமியா, அநேக ஆண்டுகள் கழித்து, எருசலேம் பட்டணத்தின் பேரழிவையும், அங்குள்ள மக்களின் மோசமான நிலையையும் கேள்விப்பட்டான். ஆகவே, தான் எருசலேமிற்கு திரும்பிச்சென்று மதில்களை மறுபடியும் கட்டியெழுப்ப பெரிசிய ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் அனுமதி கேட்டான். ஒரு இரவு முழுவதும் அப்பட்டணத்தின் நிலைமையை பார்வையிட்டு திரும்பிய நெகேமியா (2:13-15) பின்பு அங்கு வசிப்பவர்களை நோக்கி, “எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்,” என்று கூறினான் (வச. 17).
நெகேமியா கடந்த காலத்தை நினைத்து துக்கித்து இருக்கவில்லை, மாறாக மறுபடியும் கட்டி எழுப்பவே திரும்ப வந்தான். நம்முடைய வாழ்விலும் பழுதுபட்டிருக்கும் பாகங்களை சீர்படுத்தும்பொழுது இந்த வல்லமையான பாடத்தை நாம் நினைவிற் கொள்வோமாக. கிறிஸ்துவுக்குள் உள்ள நம்முடைய விசுவாசமும், அவருடைய வல்லமையும், நாம் பின்னோக்கி பாராமல், முன்னோக்கிச் செல்லவும், மறுபடியும் கட்டி எழுப்பவும் நமக்கு உதவிடும்.
விருதாவாயிராது
“சிறந்ததே நடக்கும் என நம்பு, ஆனால் மிக மோசமான விளைவிற்கு தயாராகவுமிரு,” என எனக்கு பரிச்சயமான நிதி ஆலோசகர் ஒருவர் பணத்தை முதலீடு செய்வதிலுள்ள உண்மையான நிலையை விளக்கினார். நம் வாழ்வில் நாம் தீர்மானிக்கும் அநேக தீர்மானங்களின் விளைவுகளும் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை அப்படியல்ல. ஏனெனில் நாம் தெரிந்துகொண்ட இப்பாதையில் பயணிக்கும்பொழுது, என்ன நேர்ந்தாலும் இறுதியில் அது ஒரு வீண் பிரயாசமாய் இருக்கவில்லை என்பதை நாம் அறிந்துகொள்வோம்.
ஒழுக்கக் கேட்டிற்கு பெயர்பெற்ற கொரிந்து பட்டணத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் அங்குள்ள கிறிஸ்தவர்களோடு ஒரு வருடம் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின், கிறிஸ்துவுக்கென்று சாட்சியாக ஜீவிப்பதில் எப்பயனுமில்லை என்று தவறாக நினைத்து சோர்ந்து போய்விடாதிருக்கும்படி, கடிதத்தின் மூலம் அவர்களை உற்சாகப் படுத்தினார். மேலும் ஒரு நாள் தேவன் திரும்பவும் வந்து, மரணத்தை விழுங்கி ஜெயமெடுப்பார் என உறுதியளித்தார் (1 கொரி. 15:52-55).
இயேசுவுக்காக உண்மையாக ஜீவிப்பது கடினமானதாகவும், சோர்வளிப்பதாயும், சில சமயம் அபாயகரமானதாகவும் இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும், பிரயோஜனமற்றதோ அல்லது வீணானதோ அல்ல. நாம் தேவனோடு நடந்து, அவருடைய பிரசன்னத்திற்கும், வல்லமைக்கும் சாட்சியாய் இருக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கை விருதாவாயிராது! இது நிச்சயமே.
எதுவும் மறைவாக இல்லை
2015ஆம் ஆண்டு, ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், உலகெங்கும் 24 கோடியே 50 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத விகிதத்தில் பெருகுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போன்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முதல் வங்கிக் கொள்ளை வரை படம்பிடிக்கின்றன. பெருகி வரும் பாதுகாப்பை பாராட்டினாலும் சரி அல்லது குறைந்து வரும் அந்தரங்க எல்லையை கண்டனம் தெரிவித்தாலும் சரி, உண்மை என்னவெனில் எங்கும் கேமராக்கள் நிறைந்த சமுகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், தேவனோடு உள்ள நம்முடைய உறவிலே, கண்காணிப்பு கேமராக்களின்
கண்காணிப்பைக் காட்டிலும் அதிக அளவு வெளியரங்கமான செயல்பாட்டையும், பொறுப்பான நடத்தையையும் நாம் அனுபவிப்பதாக புதிய ஏற்பாட்டு புத்தகமாகிய எபிரெயர் நிருபம் கூறுகிறது. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபி. 4:12-13).
நம்முடைய இரட்சகராகிய இயேசு நம்முடைய பெலவீனங்களையும், சோதனைகளையும் அவர் அனுபவித்தும் பாவம் செய்யாதிருந்ததால், “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (வச. 16). நாம் அவரைக் கண்டு பயப்படாமல், அவரண்டை கிட்டிச்சேரும் பொழுது கிருபை பெறுவோம் என்ற நிச்சயம் கொள்வோமாக.
நிறைவான பரிசு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு வரும் வாரங்கள் அமெரிக்காவிலுள்ள வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாட்கள் ஆகும். ஏனெனில் தாங்கள் பெற்ற வேண்டாத பரிசுப் பொருட்களை திரும்ப கொடுத்து அதற்கு மாறாக வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ள அநேகர் வருவார்கள். ஆனாலும், நிறைவான பரிசுப் பொருளை கொடுக்கக்கூடிய சிலரை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு நபர் விரும்பும் பொருளை ஏற்ற தருணத்தில் அளிக்க அவர்களுக்கு மாத்திரம் எப்படி தெரியும்? நிறைவான சிறந்த பரிசை அளிப்பதற்கு பணம் பிரதானமானதல்ல; மாறாக தனிப்பட்ட விதத்தில் அவர்கள் மேல் அக்கறை கொண்டு, அவர்களுடைய விருப்பங்களைக் கவனித்து அறிந்து கொள்வதே முழுநிறைவான பரிசளிப்பதற்கான திறவுகோல்.
இது நம்முடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பொருந்தும். ஆனால் தேவனுக்கும் இது பொருந்துமா? அர்த்தமுள்ள அல்லது மதிப்புமிக்க பரிசை அவருக்கு நாம் கொடுக்க முடியுமா? அவரிடம் இல்லாததென்று ஏதேனும் உள்ளதா?
தேவனுடைய அளவற்ற ஞானம், அறிவு மற்றும் மகிமையை எண்ணி அவரை ஆராதிக்கும்படியாய் ரோமர் 11:33-36 வசனங்களும் அதைத் தொடர்ந்து, “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (12:1). இந்த உலகத்தினால் நாம் வனையப்படாமல், “மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்றும் கூறுகிறது (வச. 12).
இன்று தேவனுக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு எது? மனத்தாழ்மையோடும், நன்றியுள்ள இருதயத்தோடும் நம்முடைய மனம், சிந்தை, சித்தம் என்று நம்மையே முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்கலாம். நம் ஒவ்வொருவரிடமிருந்து தேவன் பெற விரும்பும் பரிசு இதுவே.
அனைவருக்கும் மகிழ்ச்சி
கிறிஸ்தவ புத்தக வெளியீட்டு மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. 280 நபர்கள் 50 நாடுகளில் இருந்து வந்திருந்தனர். கடைசி நாளில் அவர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துகொள்ள ஹோட்டலின் வெளியே திரண்டனர். இரண்டாம் தளத்தில் இருந்த பால்கனியில் இருந்து புகைப்படக்காரர் பல புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்த பின்பு “எல்லாம் முடிந்தது” என்று சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்து ஒருவர் “ஜாய் டூ த வேர்ல்டு!” (Joy to the world) என்று கத்தினார். உடனடியாக மற்றொருவர் “த லார்ட் இஸ் கம்” (The Lord is Come) என்ற பாடலின் அடுத்தவரியை மறுமொழியாக பாடினார். உடனே குழுவாய் சேர்ந்து அக்கிறிஸ்துமஸ் பாடலை அனைவரும் அழகாய் பாடினர். மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.
லூக்கா விவரிக்கும் கிறிஸ்துமஸ் செய்தியில் ஓர் தேவ தூதன் இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு இவ்வாறு அறிவிப்பதை காணலாம். “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று காத்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11).
இது சிலருக்கான மகிழ்ச்சி அல்ல, இது எல்லோரும் அனுபவிப்பதற்கே. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா. 3:16).
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றிப்போடும் இயேசுவின் நற்செய்தியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, நாம் அவர்களோடு ஒருமனப்பட்டு அவரது நீதியின் மகிமையையும் அன்பின் மகத்துவங்களையும் புகழ்ந்து பாடுகின்றோம்.
“ஆர்ப்பரிப்போம் இந்நாளில், கிறிஸ்து இன்று பிறந்தாரே!”
சிறையில் ஓர் கிறிஸ்துமஸ்
அருட்திரு. மார்டின் நீமோலர் (Rev. Martin Niemoller), ஜெர்மனியில் மிகவும் பிரசித்திப் பெற்ற போதகர். அவர் வெளிப்படையாக ஹிட்லரை எதிர்த்து பேசியதால் எட்டு வருடங்கள் நாஜி போர்க் கைதிகள் முகாமில் சிறைவாசம் அனுபவித்தார். 1944ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று நீமோலர் டாச்சோவில் (Dachau) தன்னுடன் இருந்த மற்ற சிறைக்கைதிகளை பார்த்து “என் அருமை நண்பர்களே, இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, பெத்லகேமில் குழந்தையாய்ப் பிறந்து நம்முடைய கடினமான பாரங்களை சுமக்க வந்த அந்த ஒப்பில்லாதவரைத் தேடுவோம். தேவன் தாமே நம்மையும், அவரையும் இணைக்க ஓர் பாலம் கட்டினார். பரத்திலிருந்து ஓர் விடியல் நம்மேல் உதித்தது,” என்ற விசுவாச வார்த்தைகளைக் கூறினார்.
கிறிஸ்துமஸ் நாளில் நாம் தழுவிக்கொள்ள வேண்டிய நற்செய்தி இதுவே. தேவன் கிறிஸ்துவாக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து அவருக்கும், நமக்கும் இடையேயான இடைவெளியை தகர்த்துவிட்டார். இருள் சுழ்ந்த சிறைவாழ்க்கைகுள் ஒளியாய் புகுந்துவிட்டார். நாம் சுமந்து செல்லும் துன்பம், துயரம், குற்ற உணர்வு, தனிமை ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.
இருண்ட சிறைச்சாலையில் தங்கியிருந்த நீமோலர், “அன்று ஆடு மேய்ப்பவர்கள் மேல் பிரகாசமான ஒளி உதித்தது. அது போல இன்று நம் இருளிலும் ஜீவ ஒளியின் கதிர்கள் நம்மேல் உதிக்கும்” என்ற நற்செய்தியை பகரிந்து கொண்ட அவரது வார்த்தைகள் ஏசாயா தீர்க்கதரிசனமாய் உரைத்த வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகின்றது. “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா. 9:2).
நாம் இன்றைக்கு எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் தம்முடைய மகிழ்ச்சியோடும், ஒளியோடும் இயேசு நம்முடைய இருளான வாழ்க்கைக்குள் பரவேசித்துள்ளார்.
நல்ல செய்தி!
இணையதளம், தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற சாதனங்கள் மூலம் உலகச் செய்திகள் நம்மை தாக்குகின்றன. பெரும்பாலான செய்தி குற்றம், தீவிரவாதம், போர் மற்றும் பொருளாதார பிரச்சனைகளையே விவரிப்பதாக இருக்கிறது. ஆனாலும், ஒரு மருத்துவ சாதனை அல்லது போரினால் ஏற்பட்ட வடுகள் நிறைந்த இடங்களில் சமாதானத்திற்கேதுவான நடவடிக்கைகள் போன்ற நல்ல செய்திகளும், துயரமும், விரக்தியுமான, இருளான நேரங்களில் படையெடுத்து வருகின்றன.
பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சோர்வுற்றிருந்த ஜனங்களுக்கு பெரிதான நம்பிக்கையை கொண்டு வந்த இரண்டு மனிதர்களைப் பற்றி வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
இரக்கமற்ற ஒரு வல்லமையான தேசத்தை பார்த்து வருகிற தேவனுடைய நியாயத்தீர்ப்பை விவரிக்கும் பொழுது, “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது” (வச. 1:15) என்று நாகூம் கூறினார். அச்செய்தி கொடுமையினால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு நம்பிக்கை அளித்தது.
“சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா. 52:7) என்று ஏசாயா புத்தகத்திலும் அதற்கொத்த வார்த்தைகளை காணலாம்.
முதல் கிறிஸ்துமஸ் அன்று தேவதூதர் மேய்ப்பர்களைப் பார்த்து, “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11). அவரே உங்கள் மேசியா! என்று கூறிய பொழுது, நாகூம் மற்றும் ஏசாயாவின் நம்பிக்கையளிக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள் இறுதியாக நிறைவேறிற்று. நம் வாழ்வில் இதுவரையில் கூறப்பட்ட செய்திகளிலே அதிமுக்கியமான தலைப்புச்செய்தி-இரட்சகராகிய கிறிஸ்து பிறந்துள்ளார் என்பதே!
ஊக்குவிக்கும் ஈவு
“டிசம்பர் மாதத்தை கடந்து விட்டால்,” என்கிற மெர்லி ஆகர்ட் (Merle Haggard) உடைய பழைய பாடல், வேலை இழந்த ஒரு மனிதன் தன்னுடைய மகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பரிசுப்பொருட்கள் எதுவும் வாங்கி கொடுக்க முடியாத நிலையை விவரிக்கிறது. வருடத்தின் சந்தோஷமான மாதமாக இருக்க வேண்டிய டிசம்பர் மாதம், அவருக்கு மகிழ்ச்சியற்ற இருளான மாதமாக இருக்கிறது.
சோர்வு என்பது டிசம்பர் மாதத்திற்கே உரியது இல்லை. ஆனால், அம்மாதத்திலே அது பெரியதாக மாறிவிடலாம். ஏனெனில் நம்முடைய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் பொழுது, துயரமும் மிக ஆழமாக இருக்கிறது. அப்பொழுது, கிடைக்கும் சிறிதளவு ஊக்கமும் நாம் வெகு தூரத்தை கடந்துச் செல்ல உதவும்.
இயேசுவைப் பின்பற்றிய முன்னோடிகளில் ஒருவன் சீப்புருதீவு ஊரானாகிய, யோசே. அப்போஸ்தலர்கள் இவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். அதாவது “ஆறுதலின் மகன்” என்று அர்த்தம். அவனைத்தான் நாம் அப்போஸ்தலர் 4:36-37 வசனங்களில், தன் நிலத்தை விற்று, மற்ற விசுவாசிகளின் தேவைக்காக நன்கொடை கொடுக்கக் கண்டோம்.
இதற்கு பின்பு, சவுலை குறிப்பிடும் பொழுது, சீஷர்கள் அவனைக் குறித்து பயந்தார்கள் என வாசிக்கலாம் (அப். 9:26). “அப்பொழுது பர்னபா..., அப்போஸ்தலரிடத்தில் சவுலை அழைத்துக் கொண்டுபோய்” (வச. 27) எனக் காண்கிறோம். பவுல் என பின்பு அழைக்கப்பெற்ற சவுல், முன்பு விசுவாசிகளைக் கொலை செய்யும்படி சுற்றித்திரிந்தவன். ஆனால் பர்னபா கிறிஸ்துவினால் மறுரூபமாக்கப்பட்ட சவுலுக்காகப் பரிந்து பேசினான்.
நம்மை சுற்றி அநேகர் ஆறுதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். நேரத்திற்கேற்ற ஒரு வார்த்தை, அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது ஒரு ஜெபம் கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும்.
பர்னபாவுடைய பெருந்தன்மையும், ஆதரவும், ஒரு ஆறுதலின் மகளாக அல்லது மகனாக இருப்பது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையிலே மற்றவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு இதுவே.
400 மைல்களுக்கு அப்பால் கண்ட காட்சி
“முதல் முறை நான் விண்வெளிக்கு சென்ற பொழுது, பூமியை குறித்ததான என்னுடைய கண்ணோட்டம் வியத்தகு வண்ணம் மாறியது,” என்று விண்வெளி வீரர் சார்லஸ் ஃபிராங்க் போல்டன் ஜூனியர் (Charles Frank Bolden Jr.) கூறினார். பூமியிலிருந்து நானூறு மைல்களுக்கு அப்பால், எல்லாம் அமைதியாகவும், அழகாகவும் அவருக்கு காட்சியளித்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளை கடந்து சென்றபொழுது, அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சச்சரவுகளை நினைவு கூர்ந்த பொழுது, “நிஜம் அவரை உலுக்கியது.” அத்தருணத்தைக் குறித்து தயாரிப்பாளர் ஜாரெட் லேடோ (Jared Leto) பேட்டிகண்ட பொழுது, அத்தருணத்திலே, பூமி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற உணர்வும், அதை செவ்வைப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியத்தையும் உணர்ந்ததாக தெரிவித்தார்.
இயேசு பெத்லகேமிலே பிறந்த பொழுது, இந்த பூமி தேவன் விரும்பிய வண்ணம் இருக்கவில்லை. ஒழுக்கமின்றி, ஆவிக்குரிய இருளில் இருந்த நம் அனைவருக்கும், இயேசு, ஜீவனையும், வெளிச்சத்தையும் கொண்டு வந்தார் (யோவா. 1:4). இந்த உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை என்றாலும், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (வச. 12).
குடும்பங்களில் பிரிவினைகள் ஏற்படும் பொழுது, பிள்ளைகள் பட்டினியாய் இருக்கும் பொழுது, உலகத்தில் யுத்தங்கள் ஏற்படும் பொழுது, மொத்தத்தில் நம்முடைய வாழ்வு இருக்க வேண்டிய வண்ணம் இல்லாத பொழுது, நமக்கு மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, ஒரு புதிய வழியில் பயணிக்க முடியும் என்று தேவன் நமக்கு வாக்களிக்கிறார்.
உலக இரட்சகராகிய இயேசு, தம்மை ஏற்றுக்கொண்டு, பின்பற்றுகிற அனைவருக்கும் தன் ஜீவனையும், வெளிச்சத்தையும் ஈவாகக் கொடுக்கிறார் என்பதை இந்த கிறிஸ்துமஸ் காலம் நமக்கு நினைவூட்டுகிறது.