Bill Crowder | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

இயேசுவோடு வீட்டில்

“வீட்டைப் போன்ற இடமில்லை” என்றுக் கூறியபடியே டோரதி தனது ரூபி செருப்புகளின் குதிகால்களை உதைக்கிறாள். “தி விஸார்ட் ஆஃப் ஓஸ்” என்ற திரைப்படத்தில் டோரதி மற்றும் டோட்டோவை ஓஸிலிருந்து கன்சாஸில் உள்ள அவர்களது வீட்டிற்கு மாயமான முறையில் கொண்டுசெல்வதற்கு இவை தேவைப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, நம் அனைவருக்கும் போதுமான ரூபி செருப்புகள் இல்லை. டோரதியின் வீட்டிற்கான ஏக்கத்தை பலர் பகிர்ந்துகொண்டாலும், டோரதியைப்போல் நம்முடைய வீட்டை அடைவதற்கு நாம் அதிக சிரமப்படவேண்டியிருக்காது. 

நிலையில்லாத இந்த உலகத்தில் நாம் நமக்கு சொந்த இடத்தை அடைவோமா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே வாழ்கிறோம். இந்த உணர்வு சி. எஸ். லூயிஸால் வெளிப்படுத்தப்பட்ட ஓர் ஆழமான யதார்த்தத்தையும் பிரதிபலிக்கக்கூடும்: “இந்த உலகத்தின் எந்த அனுபவமும் எனது ஏக்கத்தை நிறைவுசெய்யவில்லை என்றால், நான் வேறு உலகத்திற்காக படைக்கப்பட்டவன்” என்று அவர் சொல்லுகிறார். 

சிலுவை பாடுகளுக்கு முந்தின இரவில், இயேசு அந்த வீட்டைப் பற்றி தம் சீஷர்களுக்கு உறுதியளித்தார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (யோவான் 14:2). அது நம்மை வரவேற்று அன்பை பகிர்கின்ற நித்திய வீடு. 

நாம் இப்போதே அந்த வீட்டில் வாழக்கூடும். நாமே தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். கிறிஸ்துவில் உள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் மத்தியில் வாழ்கிறோம். நம் இதயங்கள் ஏங்கும் வீட்டிற்கு இயேசு நம்மை அழைத்துச்செல்லும் நாள்வரை, நாம் அவருடைய சமாதானத்திலும் மகிழ்ச்சியிலும் ஜீவிக்கலாம். நாம் எப்போதும் அவருடனேயே வீட்டில் தங்கியிருக்கிறோம். 

 

உங்கள் விசுவாசத்தை பகிருங்கள்

1701 ஆம் ஆண்டில், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்ப நற்செய்தி பிரச்சார சங்கத்தை  நிறுவியது. அவர்கள் தேர்ந்தெடுத்த இலட்சிய வாா்த்தைகளாக ட்ரான்சியன்ஸ் அடியுவா நோஸ், லத்தீன் மொழியில் "வந்து எங்களுக்கு உதவுங்கள்!" இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை மிகவும் அவசியமான ஒரு உலகத்திற்கு எடுத்துச் செல்வதால், முதல் நூற்றாண்டிலிருந்து நற்செய்தி ஸ்தானாதிபதிகளின் அழைப்பு இதுவே.

"வந்து எங்களுக்கு உதவுங்கள்" என்ற சொற்றொடர், அப்போஸ்தலர் 16 இல் விவரிக்கப்பட்டுள்ள "மக்கெதோனியா அழைப்பிலிருந்து" வருகிறது. பவுலும் அவரது குழுவும் ஆசியா மைனரின் மேற்குக் கடற்கரையில் உள்ள துரோவாவுக்கு வந்தார்கள்(இன்றைய துருக்கி, வ.8). அங்கே, பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. (வ.9) அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, பவுலும் அவர் குழுவினரும் உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனார்கள் (வ. 10) அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.

எல்லோரும் கடல்களைக் கடக்க அழைக்கப்படுவதில்லை, ஆனால் நமது ஜெபங்கள் மற்றும் நிதிகளால் அதை செய்பவர்களை நாம் ஆதரிக்கலாம். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் நமது அறையிலோ, தெருவிலோ அல்லது சமூகத்திலோ யாரிடமாவது சொல்ல முடியும். நமது நல்ல தேவன் நாம் கடந்துபோய், எல்லாவற்றிலும் மேலான  உதவியாகிய இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் மன்னிப்பின் வாய்ப்பை மக்களுக்கு வழங்கசெய்ய ஜெபிப்போம்.

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், "இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை" என்று எழுதப்பட்டுள்ளது. 

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: "கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?" (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக "ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?" எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், "நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்"(வ. 5). பிரசங்கி 3:11, "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" என்று நமக்கு நினைவூட்டுகிறது. 'நேர்த்தியாக" என்ற சொல்லுக்கு "பொருத்தமானது" அல்லது "மகிழ்ச்சியின் காரணம்" என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.

தேவனை பின்பற்ற கற்றுக்கொள்ளுதல்

“ஒரு சராசரி நபர் வாழ்நாளில் 7,73,618 முடிவுகளை எடுப்பார் என்றும் அதில் 143,262 முடிவுகளுக்காக அவர் வருத்தப்படுகிறார்” என்று ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறுகிறது. இந்த எண் இலக்க கணக்கு எந்த அளவிற்கு சரி என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற முடிவுகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது உண்மையே. அவை எத்தனை என்று அறியும்போது நாம் ஒருவேளை ஆச்சரியப்படக்கூடும். அதிலும் குறிப்பாய், நமது தேர்வுகள் அனைத்தும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதும்போது, சில மற்றவர்களை விட மிக முக்கியமானவைகளாய் தெரியும்போது ஆச்சரியமடையலாம்.

நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பிறகு, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் புதிய தேசத்தின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்கள் தேசத்திற்குள் பிரவேசித்த பின்னர், அவர்களின் தலைவனான யோசுவா அவர்களுக்கு ஒரு சவாலான தேர்வை அறிவிக்கிறார்: “கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்” சேவியுங்கள் என்கிறார். “உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை” (யோசுவா 24:14) அகற்றிவிடவும் எச்சரிக்கிறார். மேலும் யோசுவா, “கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்... நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று கூறுகிறார். 

ஒவ்வொரு புதிய நாளையும் நாம் தொடங்கும் போது, பல தீர்மானங்களை நாம் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தேவனை முன்நிறுத்தி நாம் எடுக்கும் தீர்மானங்களில் தேவன் மகிமைப்படுவார். அவருடைய ஆவியானவரின் வல்லமையினாலே, அவரை அனுதினமும் பின்பற்றும் தீர்மானத்தை நாம் எடுக்க பிரயாசப்படுவோம்.

கிறிஸ்து பிறப்பின் வாக்குத்தத்தம்

நவம்பர் 1962இல், இயற்பியலாளர் ஜான் மௌச்லி, “சராசரியான பையன் அல்லது பெண் கணினியில் தேர்ச்சிபெற முடியாது என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறுகிறார்.  மௌச்லியின் கணிப்பு அந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றியது. ஆனால் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் துல்லியமானது. இன்று, கணினி அல்லது கையடக்க சாதனத்தைப் பயன்படுத்துவது ஒரு குழந்தை கற்றுக் கொள்ளும் ஆரம்ப திறன்களில் ஒன்றாகும்.

மௌச்லியின் கணிப்பு உண்மையாகிவிட்டாலும், கிறிஸ்துவின் வருகையைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்ட மிக முக்கியமான கணிப்புகள் உள்ளன. உதாரணமாக, மீகா 5:2இல், “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்று அறிவிக்கிறது. தாவீதின் வம்சாவளியில் வரும்படிக்கு இயேசுவை பெத்லகேமுக்கு தேவன் அனுப்பினார் (லூக்கா 2:4-7 பார்க்கவும்).

இயேசுவின் முதல் வருகையை துல்லியமாக முன்னறிவித்த அதே வேதாகமம், அவருடைய இரண்டாம் வருகையையும் உறுதியளிக்கிறது (அப் 1:11). இயேசு தம்முடைய சீஷர்களிடம், அவர்களுக்காக தான் திரும்பி வருவதாக வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:1-4).

இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள அனைத்து காரியங்களையும் ஆராயும் இந்த கிறிஸ்மஸ் நன்னாளிலே, அவரை நாம் முகமுகமாய் தரிசிக்கப்போகும் அவருடைய வருகை தியானித்து, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம்.

அனைத்து துதிகளுக்கும் பாத்திரர்

ஃபெரான்டே மற்றும் டீச்சர் குழுவினர், சிறந்த பியானோ டூயட் குழுவாக பலர் கருதுகின்றனர். அவர்களின் கூட்டு முயற்சி அழகான இசையை வருவித்தது. எனவே அவர்களின் பாணி, நான்கு கைகள் ஆனால் ஒரே சிந்தை என்று புகழப்பட்டது. அவர்களின் இசையைக் கேட்கிறவர்கள், அவர்கள் எந்த அளவிற்கு கடினமாகப் பிரயாசப்பட்டிருக்கக்கூடும் என்பதை அறியக்கூடும். 

ஆனால் அதுமட்டுமில்லை. அவர்கள் அதை நேசித்து செய்கிறார்கள். அவர்கள் 1989இல் ஓய்வு பெற்ற பிறகும், ஃபெரான்டே மற்றும் டீச்சர் எப்போதாவது ஒரு உள்ளூர் பியானோ ஸ்டோரில் அவ்வப்போது எதிர்பாராத இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள். அவர்கள் இசையை முழுவதுமாய் விரும்பினார்கள். 

தாவீதும் இசையமைப்பதை விரும்பினார். ஆனால் அவர் தனது பாடலுக்கு ஒரு உயர்ந்த நோக்கத்தைக் கொடுக்க தேவனோடு இணைந்து செயல்பட்டார். அவரது சங்கீதங்கள் அவரது போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையையும், கர்த்தரைச் சார்ந்து வாழ வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும்கூட, அவரது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் குறைபாடுகளுக்கு மத்தியில், அவர் ஏறெடுத்த துதிகள் இருள் சூழ்ந்த நேரத்திலும் அவருடைய மகத்துவத்தைப் பிரதிபலித்து ஆவிக்குரிய சுருதியை நேர்த்தியாக்கியது. தாவீதின் துதிகளுக்கு பின்பாக இருக்கும் அவருடைய மனதை சங்கீதம் 18:1 பிரதிபிலிக்கிறது: என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

மேலும் தாவீது, “துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்” (வச. 3) என்றும் “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்(டேன்)” (வச. 4) என்று தேவனிடத்தில் திரும்புகிறார். நம்முடைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாமும் அவ்வாறே நம் தேவனைத் துதிக்கவும் மகிமைப்படுத்தவும் நம் இருதயங்களை உயர்த்துவோம். அவரே சகல துதிகளுக்கும் பாத்திரர்!

புறப்பட ஆயத்தம்

கொரோனா பெருந்தொற்றின் நாட்களில், தங்கள் நேசத்திற்குரியவர்களை அநேகர் இழந்து வாடினர். நவம்பர் 27, 2020 அன்று, பீ கிரவுடர் என்னும் என்னுடைய 95வயது நிரம்பிய தாயார், கொரோனாவினால் அல்லாமல் இயற்கையாய் மரணமடைந்தபோது நாங்களும் அந்த வரிசையில் சேர நேரிட்டது. மற்ற பல குடும்பங்களைப் போல, தாயின் இழப்பிற்காய் துக்கங்கொண்டாடவோ, அவர்களுடைய வாழ்க்கையை நினைவுகூரவோ அல்லது ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவோ கூட எங்களால் முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுடைய அன்பான செல்வாக்கைக் கொண்டாட நாங்கள் வேறு வழிகளைப் பயன்படுத்தினோம். தேவன் அவர்களை நித்திய வீட்டிற்கு அழைத்தால், அவர்கள் செல்லத் தயாராகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று அவர்கள் வற்புறுத்தியதில் இருந்து எங்களுக்கு மிகுந்த ஆறுதல் கிடைத்தது. அவர்களுடைய அந்த நம்பிக்கை அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கும் மரணத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதற்கும் சான்றாக அமைந்தது.

பவுல் மரணத்தை எதிர்கொள்ளும்போது, “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்… ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:21,23-24) என்று சொல்லுகிறார். பவுல் பூமியில் தரித்திருந்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய எண்ணினாலும் தேவன் அவரை தன்னுடைய நித்திய வீட்டில் சேர்த்துக்கொண்டார். 

இந்த நம்பிக்கையானது, இம்மைக்குரிய வாழ்க்கையிலிருந்து மறுமையில் நாம் அடியெடுத்து வைக்கும் நம்முடைய வாழ்க்கையை வித்தியாசமாய் அணுகுகிறது. நம்முடைய இந்த நம்பிக்கையானது மற்றவர்களுடைய இழப்பில் அவர்களுக்கு ஆறுதலளிக்கக்கூடிய வகையில் அமைகிறது. நாம் நேசிப்பவர்களின் இழப்பைக் குறித்து நாம் துக்கங்கொண்டாடினாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் “நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போல” (1 தெசலோனிக்கேயர் 4:13) துக்கிக்க தேவையில்லை. மெய்யான விசுவாசமானது அவரை அறிந்தவர்களின் சொத்து.

பயத்திற்கான காரணம்

நான் சிறுவனாய் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் அதிகப்படியாய் நடந்தேறிக்கொண்டிருக்கும். எங்களை துன்புறுத்தும் மூத்த மாணவர்களிடம் நாங்கள் எங்கள் பயத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவர்கள் “நீ பயப்படுகிறாயா? என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லையா? உன்னைக் காப்பாற்ற இங்கு யாருமில்லை!” என்று அச்சுறுத்துவது இன்னும் பயத்தை அதிகரிக்கும். 

பெரும்பாலான நேரங்களில் ஒரு நன்மையான விளைவுக்காகவே நான் பயப்பட்டேன். ஏற்கனவே இதுபோல அடிவாங்கிய அனுபவம் எனக்கு இருந்ததால், மறுபடியும் அந்த அனுபவம் வேண்டாம் என்று எண்ணினேன். நான் பயத்தால் பீடிக்கப்படும்போது, என்ன செய்யவேண்டும்? யாரை நம்பவேண்டும்? நீங்கள் எட்டு வயது சிறுவனாயிருக்கும்போது, உங்களைக் காட்டிலும் வயதில் மூத்த, பெரிய மற்றும் வலிமையான ஒருவன் உங்களை துன்புறுத்தும்போது நீங்கள் பயத்தால் ஆட்கொள்ளப்படுவது என்பது இயல்பு. 

தாவீது போராட்டத்தை சந்தித்தபோது, அவன் அதை பயத்தோடு அணுகாமல், தைரித்துடன் அணுகினான். அந்த போராட்டங்களை அவன் தனித்து சந்திக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவன் எழுதும்போது, “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” (சங்கீதம் 118:6) என்று எழுதுகிறான். ஒரு சிறுவனாய் தாவீதின் இந்த மனவுறுதியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் வளர்ந்து இயேசுவோடு நடக்கும் அனுபவத்தில் தேறிய பின்பு, அவர் எல்லா பயங்களைக் காட்டிலும் பெரியவர் என்பதை புரிந்துகொண்டேன். 

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நிஜமே. ஆகிலும் நாம் பயப்படத் தேவையில்லை. இந்த உலகத்தை படைத்த சிருஷ்டிகர் நம்மோடிருக்கிறார். அவர் நமக்கு போதுமானவர்.

நான் யார்?

ராபர்ட் டோட் லிங்கன் தனது தந்தையும் அமெரிக்க ஜனாதிபதியுமான ஆபிரகாம் லிங்கனின் நிழலிலேயே வளர்ந்தார். ஆனால் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ராபர்ட் அவருடைய தந்தையை வைத்தே அடையாளப்படுத்தப்பட்டார். லிங்கனின் நெருங்கிய நண்பரான நிக்கோலஸ் முர்ரே பட்லர், ராபர்ட் சொல்லும்போது, “மக்கள் என்னை ஒரு போர் செயலாளராக பார்க்கவில்லை, ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகிறார்கள். யாரும் என்னை இங்கிலாந்துக்கு அமைச்சராக பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்கிறார்கள். புல்மேன் நிறுவனத்தின் தலைவராக யாரும் என்னை பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகின்றனர்” என்று சொன்னதாக அறிவித்தார்.

பிரபலமானவர்களின் பிள்ளைகள் மட்டும் இந்த ஏமாற்றத்தை வாழ்க்கையில் அனுபவிப்பதில்லை. நம்மை யாரும் சரியாய் எடைபோடுவதில்லை என்கிற உணர்வு நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆயினும், தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதைக் காட்டிலும் மேலான மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.

அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய பாவங்களில் நாம் யார் என்பதையும், கிறிஸ்துவுக்குள் நாம் யாராக மாறுகிறோம் என்பதையும் அறிந்திருந்தார். “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6) என்று பவுல் எழுதுகிறார். நாம் பெலவீனர்களாய் இருந்தபோதிலும் தேவன் நம்மை நேசிக்கிறார். பவுல், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வச.8) என்று எழுதுகிறார். தேவன் தன்னுடைய குமாரனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்ததின் மூலம் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.

நாம் யார்? நாம் தேவனுக்கு பிரியமான பிள்ளைகள். அதைக்காட்டிலும் ஒருவன் என்னத்தை எதிர்பார்க்கக்கூடும்?