நம்பிக்கையுடன் தாழ்மைபடுதல்
ஆலய ஆராதனையின் முடிவில் போதகரின் அழைப்பின் பேரில், லாட்ரீஸ் முன்னோக்கிச் சென்றாள். சபைக்கு வாழ்த்துச் சொல்ல அவள் அழைக்கப்பட்டபோது, அவள் பேசிய கனமான மற்றும் அற்புதமான வார்த்தைகளுக்கு யாரும் தயாராக இல்லை. டிசம்பர் 2021ல் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் தன்னுடைய ஏழு குடும்ப உறுப்பினர்களை இழந்த பின்பு அங்கிருந்து இடம்பெயர்ந்தவள் இவள். “தேவன் என்னுடன் இருப்பதால் என்னால் இன்னும் சிரிக்க முடிகிறது,” என்று அவள் கூறினாள். போராட்டங்களால் நசுக்கப்பட்டாலும், அவளது சாட்சி, சவால்களோடு போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு வல்லமையுள்ள ஊக்கமாய் அமைந்தது.
சங்கீதம் 22ல் (இயேசுவின் பாடுகளைச் சுட்டிக்காட்டும்) தாவீதின் வார்த்தைகள், தேவனால்; கைவிடப்பட்டதாக உணர்ந்து (வச. 1), மற்றவர்களால் இகழ்ந்து கேலி செய்யப்பட்ட (வச. 6–8), மற்றும் வேட்டையாடுபவர்களால் சூழப்பட்ட (வச. 12–13), பாதிக்கப்பட்ட மனிதனின் வார்த்தைகள். அவர் பலவீனமாகவும் ஒன்றுமில்லாமலும் உணர்ந்தார் (வச. 14-18). ஆனால் அவர் தன் நம்பிக்கையை கைவிடவில்லை. “ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்” (வச. 19) என்று தன் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார். நீங்கள் தற்போது சந்திக்கும் சவாலானது தாவீது அல்லது லாட்ரீஸ் போன்றவர்களுடைய சவால்களைப் போன்றல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவைகள் மெய்யானவைகள். மேலும் 24-ஆம் வசனத்தின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை: “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.” தேவனுடைய உதவியை நாம் பெறும்போது, அவருடைய மகத்துவத்தை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு நாம் அறிவிக்க பிரயாசப்படுவோம் (வச. 22).
என்னை சுத்திகரியும்
"என்னை சுத்தம் செய்!" என்ற வார்த்தைகள் எனது வாகனத்தில் எழுதப்படவில்லை என்றாலும், என் வாகனம் அதை வெளிப்படுத்தியது. எனவே, நான் கார் கழுவுவதற்குச் சென்றேன். சமீபத்திய பனிப்பொழிவின் காரணத்தினால், உப்பு நீர் நிறைந்த சாலைகளில் இருந்த மோசமான அசுத்தங்களிலிருந்து நிவாரணம் பெற விரும்பும் பிற ஓட்டுநர்களும் வந்து தங்கள் வாகனங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்பே நீளமான வரிசையில் வாகனங்கள் சுத்தப்படுத்தப்படுவதற்காக இருந்தன. சேவையோ மெதுவாக இருந்தது. ஆனால் அக்காத்திருப்பு நல்லது. நான் ஒரு சுத்தமான வாகனத்துடன் புறப்பட முடிந்தது. சேவை தாமதத்தின் காரணமாக, கார் சுத்தம் செய்ததற்கான பணமும் இலவசமாக்கப்பட்டது!
வேறொருவரின் செலவில் சுத்தம் செய்யப்பட்டது. இதுதான் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி. தேவன், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம் பாவங்களுக்கு மன்னிப்பை வாங்கித்தந்தார். வாழ்க்கையின் "அழுக்கு மற்றும் கறைகள்" நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது "குளிப்பதன்" அவசியத்தை நம்மில் யார் உணராமல் இருக்கிறோம்? எப்பொழுது நம் சுயநல எண்ணங்கள், செயல்கள் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள் தேவனுடனான நம் அமைதியைப் பறித்திருக்கிறது? தாவீது சங்கீதம் 51ல், சோதனை தன்னை மேற்கொண்டபோது, தான் அழுததைக் குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய ஆலோசகர் தேவனுக்கு விரோதமான அவன் பாவத்தை அவனுக்கு உணர்த்திய போது (2 சாமுவேல் 12 பார்க்கவும்), அவன் தேவனிடம் "என்னை சுத்திகரியும்" என ஜெபிக்கிறான்: ”நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்."(வ.7). உங்களிடம் பாவம் மற்றும் குற்ற உணர்வு இருக்கிறதா? இயேசுவிடம் உங்கள் வழியை செவ்வைப்படுத்தி, இவ்வசனத்தை நினைவில் வையுங்கள்: "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர்
உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". (| யோவான் 1:9)
குறுச்செய்திகள், பிரச்சனைகள் மற்றும் ஜெயம்
ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்... அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சனைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பதாய் வித்தியாசமான குறுச்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஒரு ஐக்கியம்... ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஒரு வல்லமையான இரவாய் அமைந்தது.”
தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.
இயேசுவுக்காய் நிற்கும் துணிச்சல்
கி.பி. 155 இல், ஆதித்திருச்சபையின் தந்தையான பாலிகார்ப், கிறிஸ்துவை விசுவாசித்ததினால் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதாக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பாலிகார்ப் அவர்களிடம், “எண்பத்தாறு ஆண்டுகளாக நான் அவருடைய ஊழியக்காரனாக இருந்தேன்; அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. என்னைக் காப்பாற்றிய என்னுடைய ராஜாவை இப்போது நான் எப்படி நிந்திக்க முடியும்?” என்று பதிலளித்தாராம். நம் ராஜாவாகிய இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் கடுமையான சோதனையை எதிர்கொள்ளும்போது, பாலிகார்ப்பின் இந்த பதில் நமக்கு உத்வேகமாக இருக்கும்.
இயேசுவின் மரணத்திற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பாக, பேதுரு துணிச்சலாக, “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” (யோவான் 13:37) என்று சொல்லுகிறான். பேதுரு தன்னை அறிந்ததைக் காட்டிலும், பேதுருவை நன்கு அறிந்த இயேசு அவனைப் பார்த்து, “சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வச. 38) என்றார். ஆனாலும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பாக, இயேசுவை மறுதலித்த அதே பேதுரு அவரை மகிமைப்படுத்தும் விதமாக, தன்னுடைய ஜீவனையே கொடுக்கிறான் (21:16-19).
நீங்கள் பாலிகார்ப்பா? அல்லது பேதுருவா? சிலவேளைகளில் நம்மில் பெரும்பாலானோர் பேதுருவைப் போல துணிச்சல் இல்லாமல், கிறிஸ்துவின் விசுவாசியாய் செயல்படாமல் கோழையாக இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் வகுப்பறையில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், எங்கிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை. அதுபோன்ற தோல்விகள் நமக்கு நேரிடும்போது, நமக்காக மரித்து இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிற இயேசுவிடம் ஜெபத்தில் அணுகுவோம். அவர் நமக்கு உண்மையுள்ளவராய் வெளிப்பட்டு, கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருக்காக துணிச்சலாய் நிற்க கிருபை செய்வாராக.
சோர்வின் கூடாரங்கள்
“இந்த கூடாரம் சோர்ந்துபோயிருக்கிறது.” இந்த வார்த்தைகளை கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் போதகராய் ஊழியம் செய்துகொண்டிருக்கிற பால் என்ற என்னுடைய சிநேகிதர் சொன்னார். 2015ஆம் ஆண்டிலிருந்து அவருடைய திருச்சபை விசுவாசிகள் ஒரு கூடாரம் போன்ற அமைப்பிலிருந்தே ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள். தற்போது பால், “எங்களுடைய கூடாரம் கிழிந்துவிட்டது, மழைபெய்யும்போது அது ஒழுகுகிறது” என்று சொன்னார்.
பெலவீனமான அந்த கூடாரத்தைக் குறித்து என்னுடைய சிநேகிதர் சொன்ன அந்த வார்த்தைகள் மனுஷ வாழ்க்கையின் பெலவீனமான பக்கத்தைக் குறித்து பவுல் அப்போஸ்தலர் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்திற்று. “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும்... இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:16; 5:4).
இவ்வுலக வாழ்வின் பெலவீனமான பக்கத்தை நம்முடைய இளம்பிராயத்திலேயே ஓரளவிற்கு நாம் புரிந்துகொள்ள நேர்ந்தாலும், நாம் முதிர்வயதை சந்திக்கும்போதே அதைக் குறித்த விழிப்புணர்வை பெறுகிறோம். காலம் நம்மை விட்டு வேகமாய் கடந்துசெல்லுகிறது. நம்முடைய இளமைப்பருவத்தில் நாம் முதுமையைக் குறித்து சிந்திக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது (பிரசங்கி 12:1-7). நம்முடைய சரீரமாகிய கூடாரம் சோர்ந்துபோய்விடுகிறது.
கூடாரம் சோர்ந்துபோகலாம் ஆனால் நம்பிக்கை சோர்ந்துபோகக் கூடாது. நமக்கு வயதாகும்போது நம்பிக்கையும் இருதயமும் பெலவீனமடையவேண்டிய அவசியமில்லை. “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார் (2 கொரிந்தியர் 4:16). நம்முடைய சரீரத்தை உண்டாக்கிய ஆண்டவர், அவருடைய ஆவியின் மூலம் அதற்குள் வாசமாயிருக்கிறார். இந்த சரீரம் நம்மோடு வெகுகாலம் ஒத்துழைக்காது. “தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று” அறிந்து செயல்படுவோம் (5:1).
இயேசுவிடம் ஓடுதல்
பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.
கிறிஸ்துவில் பராமரித்தல்
என் நண்பனின் தாயார் திருமதி சார்லின், தொண்ணூற்றுநான்கு வயது, ஐந்தடிக்கு கீழ் உயரம், ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர். ஆயினும்கூட, இவையெல்லாம் தனது மகனைப் பராமரிக்க தன்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து அவளைத் தடுக்கவில்லை, அவனது உடல்நல குறைபாட்டால் தன்னை தானே அவன் பராமரித்துக்கொள்ள முடியாது. அவர்களது இரண்டு மாடி வீட்டிற்குச் சென்றால், அவள் வசிக்கும் இரண்டாவது மாடியில் அடிக்கடி அவளைக் காணலாம். மெதுவாக, பதினாறு படிக்கட்டுகளிலிருந்து முதல் மாடிக்கு இறங்கி, தான் நேசிக்கும் மகனைப் பராமரிப்பதில் உதவுவதுபோலவே தன் விருந்தாளிகளையும் உபசரிக்கிறாள்.
தனது நலனை விட தன் மகனின் நலனையே முதன்மைப்படுத்துவதால், திருமதி. சார்லினின் தன்னலமற்ற உறுதியானது, என்னைக் குற்ற உணர்வுள்ளவனாக்கியும், அறைகூவல் விடுத்தும் மற்றும் ஊக்கப்படுத்துகிறது. பிலிப்பியர் 2-ல் பவுல் ஊக்குவிப்பதை, அவள் முன்மாதிரியாகக் காட்டுகிறாள்: "மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக" (வ.3-4).
உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற தேவைகள் உள்ளவர்களைக் கவனிப்பதற்கு அதிக கிரயம் செலுத்தவேண்டியிருக்கலாம். அவர்கள் வாழ்க்கையின் தேவைகளுக்காக அனைத்தையும் செலுத்தவேண்டி இருக்கலாம். மேலும் நம்மையே மையப்படுத்தியிருக்கும் நோக்கத்தை நாமே வலிய அகற்றாவிடில், நமக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட பற்றாக்குறை உண்டாகலாம். ஆனால் இயேசுவின் விசுவாசிகள், தாழ்மையுடன் பராமரிக்கவே அழைக்கப்படுகிறார்கள் (பார்க்க. வ. 1-4). நம்மையே நாம் அர்ப்பணிக்கும்போது , இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (வ.5) என்று அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.
இயேசுவின் கதை
கேட் ஹான்கியை அதிகமானோர் அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர் ஒரு வியத்தகு பெண்மணி. ஆசிரியர், சுவிசேஷகர், பள்ளி ஒருங்கிணைப்பாளர், அருட்பணியாளர் மற்றும் கவிஞராக அவர் 1800களில், இங்கிலாந்தில் உண்மையாக இயேசுவுக்கு ஊழியம் செய்தார். 1867 ஆம் ஆண்டில், கேட் கடும் நோயால் வாதிக்கப்பட்டார். அவர் தேறுகையில், “தி ஸ்டோரி வாண்டட்" மற்றும் “தி ஸ்டோரி டோல்ட்" என இரு பகுதிகளாக ஒரு நீண்ட கவிதையை எழுதினார். அது, இயேசுவுடனும் அவரது வாழ்க்கை சம்பவங்களுடனும் அவளுக்கிருந்த உறவை நெருக்கமான முறையில் வெளிக்காட்டுகிறது.
எல்லா வசனங்களும் இயேசுவையே சுட்டிக்காட்டி, அவருடைய கதையையே சொல்கின்றன. யோவான் தனது நிருபத்தை ஆரம்பிக்கையில், தாங்கள் எவ்வாறு தனிப்பட்ட முறையில் இயேசுவை அனுபவித்தார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்: “எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற.. உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1 யோவான் 1:1). அவருடனான எங்கள் அனுபவத்தின் காரணமாகவே நாங்கள் இயேசுவின் கதையைச் சொல்கிறோம் என்று அப்போஸ்தலன் எழுதுகிறார்: “அந்த ஜீவன் வெளிப்பட்டது.. அந்த ஜீவனை நாங்கள் கண்டு..உங்களுக்கு அறிவிக்கிறோம்” (வ.2). பின்னர், யோவான் நம்மைக் கவரும் ஒரு கருத்தைக் கூறுகிறார்: "தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிற(து)தினாலும்" (2:14). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவின் கதை நம்முடைய கதை. அவருடனான நமது சொந்த அனுபவத்தின் வெளிச்சத்தில் கிறிஸ்துவின் கதையைச் சொல்ல நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.
இதைத்தான் கேட் ஹான்கி தனது கவிதையில் செய்தார். இறுதியில், அவரது கவிதையின் இரண்டு பகுதிகளும் இந்த பிரியமான பாடல்களாக மாறியது: "ஐ லவ் டூ டெல் மை ஸ்டோரி" மற்றும் "டெல் மீ தி ஓல்ட், ஓல்ட் ஸ்டோரி". ஒருவேளை, கேட் போல நாமும் நம்முடைய சொந்த வார்த்தைகளில், தனித்துவமான வழிமுறையில் இயேசு நம்மை நேசித்து, நம்மிடம் வந்து, நம்மை மீட்ட கதையைப் பிறருடன் பகிரலாம்.
தேவனுடன் ஒரு காணொளி அழைப்பு
2022 ஆம் ஆண்டு என் மனைவிக்கும் எனக்கும் மிகவும் விசேஷித்த ஆண்டு. அந்த ஆண்டுதான் எங்கள் பேத்தி சோபியா ஆஷ்லி பிறந்தாள். எங்கள் எட்டு பேரக்குழந்தைகளில் அவள்தான் ஒரே பேத்தி. சோபியாவின் தாத்தா பாட்டி புன்னகையை நிறுத்தவில்லை! எங்கள் மகன் காணொளி அழைப்பின் மூலம் அழைக்கும் போது, குதூகலம் இன்னும் அதிகமாகிறது. நானும் என் மனைவியும் வெவ்வேறு அறைகளில் இருக்கலாம், ஆனால் அவளது சந்தோஷமான கூச்சல், சோபியா அவளைப் பார்க்கிறாள் என்பதை வெளிப்படுத்தும். தொலைவிலிருக்கும் நமது பிரியமானவர்களைப் பார்ப்பதற்கு ஒரு அழைப்பு அல்லது ஒரு சொடுக்கு மட்டுமே போதும்.
நாம் தொலைப்பேசியில் பேசும் நபரைப் பார்க்கும் திறன் ஒப்பீட்டளவில் புதியது, ஆனால் தேவனுடனான காணொளி அழைப்பு அதாவது அவரது பிரசன்னத்தில் மனமார்ந்த விழிப்புணர்வுடன் ஜெபித்தல் என்பது பழையது. 27ஆம் சங்கீதத்தில் தாவீதின் ஜெபத்தில், நெருக்கமான மனிதர்களின் திறனுக்கு அப்பாற்பட்ட ஒத்தாசை தேவைப்படுகிற எதிர்ப்பலையின் மத்தியில் (வ. 10-12) எழுப்பப்பட்ட குரல் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியது: “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே (வ.8).
"அவருடைய முகத்தைத் தேட" (வ. 8) கடினமான நேரங்கள் நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால், "உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (16:11) என்று போற்றப்படுகின்ற ஒருவருடன் முகமுகமாக துன்பத்தில்தான் ஐக்கியம் கொள்ளவேண்டும் என்றில்லை. நீங்கள் கூர்ந்து கவனித்தால், எந்த நேரத்திலும், "என் முகத்தைத் தேடுங்கள்" என்று அவர் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.