அன்புக்காக தாகம்
சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.
வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.
நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.
தகுதி உரிமையல்ல
ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.
பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).
நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.