ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், 27

தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.

அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். ~ Luke 1:26-33

நான்கு வயதே நிரம்பிய கயிட்லின் அந்த அறையில் இருந்த எதையும் பெரிதாய் கவனிக்கவில்லை. அதில் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கரிப்புகளையும் பரிசுப்பொருட்களையும் அவள் பொருட்படுத்தவில்லை. அவள் நேராக, கிறிஸ்து பிறப்பின் மாதிரியாய் செய்யப்பட்டிருந்த குடிலுக்கு சென்று, அதிலிருக்கும் வேதாகம கதாபாத்திர உருவங்களை எடுத்து விளையாட ஆரம்பித்துவிட்டாள். அதில் இடம்பெற்றிருந்த மரியாள், யோசேப்பு, மற்றும் குழந்தையை எடுத்து விளையாடிக்கொண்டே, “மரியாளே, உனக்கு தெரியுமா?” (Mary, did you know?) என்ற பிரபல ஆங்கில பாடலை, மற்றவர்கள் பாடியதைக் கேட்டு முணு முணுத்தது என் கவனத்தை ஈர்த்தது. மரியாளின் உருவத்தை கையில் எடுத்து, உன்னுடைய விலையேறப்பெற்ற குழந்தையைப் பற்றி உனக்குத் தெரியுமா? என்று கேட்டாள்.

கயிட்லின் மரியாளிடத்தில் கேட்ட அந்தக் கேள்விக்கு இன்று ஒவ்வொருவரும் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் சாத்தானையும், பாவத்தையும், மரணத்தையும் தம்முடைய சிலுவை மரணத்தின் மூலம் ஜெயித்து, சாத்தானின் தலையை நசுக்குபவராய் முன்னறிவிக்கப்பட்டவர் இயேசு என்பது நமக்குத் தெரியுமா? (வச. 15). அவர் தான் ஏசாயா 53ஆம் அதிகாரத்தில் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதையும், நூற்றாண்டுகள் கழித்து பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா தீர்க்கதரிசி முன்னறிவித்தவரும் அவரே என்பதை நாம் அறிவோமா? (5:2). இயேசு என்ற நாமத்திற்கு, இரட்சகர் என்று அர்த்தம் என்பது நமக்குத் தெரியும் (மத்தேயு 1:21). மரியாளின் இந்த குழந்தை வளர்ந்து, உலகத்தின் இரட்சகராய் சிலுவையில் மரித்தார் என்பதும் நமக்குத் தெரியும் (லூக்கா 1:31; 2:30-32).

“உன்னதமானவருடைய குமாரன்” (1:32) அவரை அறிந்துகொள்ளவும் அவருடைய நேசத்திற்கு பாத்திரவான்களாய் மாறும்படிக்கும் நம்மை அழைக்கிறார். நம்முடைய விலையேறப்பெற்ற இரட்சகரை ஒவ்வொரு நாளும் மென்மேலும் அறிந்துகொள்ள பிரயாசப்படுவோம்.

டேவிட் பிராணன்

கிறிஸ்து உங்களுக்கு யார்? அவரைக் குறித்த அறிவிலும் அன்பிலும் நீங்கள் எவ்வாறு வளர்ச்சியடைகிறீர்கள்?

பரலோகப் பிதாவே, இந்த கிறிஸ்துமஸ் நாளிலே, பலர் கிறிஸ்துவை அறிகிற அறிவிற்குள் வந்து, அவரையே தம்முடைய இரட்சகராய் ஏற்றுக்கொள்ளட்டும். அவரைக் குறித்த அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.