தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.

தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மேவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி,

அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டுபோய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.

பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான். ~ 1 சாமுவேல் 22:1-5

ஒரு குழந்தையாய் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களை அனுசரிப்பது என்பது எனக்கு மிகவும் பிரியமான ஒன்று. காலையில் பரிசுப்பொருட்கள் எங்கள் வீட்டில் குவிந்திருக்கும்; இரவில் விருந்து ஏற்பாடுகள் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும்; திருச்சபையில் மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெறும். எங்கள் வீட்டில் இரவு விருந்துக்கு யார் வரப்போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு நான் ஆவலோடு காத்திருப்பேன். என்னுடைய பெற்றோர்கள், பொதுவாக தனிமையில் இருப்பவர்கள், மற்றும் விருந்துண்ண வாய்ப்பில்லாதவர்களை எங்கள் வீட்டின் விருந்துக்கு அழைப்பதுண்டு. திருச்சபையில் இருப்பவர்கள், உடன் வேலை செய்பவர்கள், பள்ளி நண்பர்கள் என்று ஒரு கப்பலில் பலதரப்பட்ட மக்கள் இருப்பதுபோல் எங்கள் வீடு பலதரப்பட்ட மக்களால் நிறைந்திருக்கும்.

சவுலிடத்திலிருந்து தப்பியோடும் தாவீதிற்கு நல்ல நண்பர்கள் கூட்டம் அவசியப்பட்டது (1 சாமுவேல் 22:1-2). அவனுடைய இக்கட்டில் அவனை ஆதரிப்பதற்கு சரியான குழு அவனுக்கு தேவைப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, “ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள்” (வச. 2) என்று பலர் அவனோடு சேர்ந்துகொண்டனர். அந்த பலரகப்பட்ட மக்கள் குழுவினரின் கேப்டனாக தாவீது மாறுகிறான். அவர்கள் தாவீதை நம்புகின்றனர்.

தாவீதைக் காட்டிலும் மேன்மையான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்களை தம்மிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார். சுவிசேஷமெங்கிலும் வியாதியஸ்தர்கள், முடவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், பாவிகள் அனைவரும் இயேசுவில் மீட்பைக் கண்டனர். திருச்சபை என்பது அதுல்லாம் கெபியைப் போன்றது (வச. 1). அது தாவீது தேடிய சரியான கூட்டம் அல்ல, ஆனால் தாவீதைப் போன்ற ஒரு கேப்டனை எதிர்பார்த்த ஒரு கூட்டம்.

கிளென் பாக்கியம்

இயேசு உங்களிடத்தில் ஒப்புவித்த மக்கள் கூட்டத்தினர் யாவர்? உங்களின் எந்த இக்கட்டான தருணத்தில் அவர்களின் உதவி உங்களுக்கு சமாதானத்தை வருவித்தது?

அன்பான இயேசுவே, உம்முடைய குடும்பத்தில் என்னை வரவேற்றதற்காய் உமக்கு நன்றி. என்னைச் சுற்றியிருக்கிற மக்களை எதிர்பாராத பரிசாக எண்ணுவதற்கு எனக்கு உதவிசெய்யும்.