வேலைக்காக ஏங்கின ஒருவன், ஆறு மாதங்கள் கரையிலிருந்து பல மைல் தொலைவிலிருந்த சிறிய மீன்பிடி குடிசையில், மீன்களைக் கவர விளக்குகளை ஏற்றும் வேளைக்கு ஒப்புக்கொண்டான். வாரத்திற்கு ஒருமுறை பொருட்கள் விநியோகிக்கப்படும் நேரத்தில் மட்டுமே மனிதர்களைச் சந்தித்தான். ஒரு பேரழிவில், அந்த குடிசையின் நங்கூரச் சங்கிலிப் பிணைப்பு உடைந்து நூற்றுக்கணக்கான மைல்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டான். பத்து கப்பல்கள் உதவாமல் கடந்து சென்றதையும், அவனது சமையல் எரிவாயு தீர்ந்து போனதையும் கண்டு அவன் மேலும் நம்பிக்கையிழந்தான். இறுதியாக, 49 நாட்களுக்குப் பிறகு, அந்த மனிதனை ஒரு கப்பல் பணியாளர்கள் கண்டுபிடித்துக் காப்பாற்றினர்!
நாம் ஒருபோதும் கடலில் சிக்கித் தவிக்கும் சூழலில் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் நம்மில் பெரும்பாலோர் உதவி மற்றும் நம்பிக்கைக்காக அலைந்து, தொலைந்து, அவநம்பிக்கையுடன் உணர்ந்திருக்கிறோம். ஒருவேளை இன்றைய வேதாகம வாசிப்பில் சகேயுவைப் போல, நாமும் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், இயேசுவே நமக்குத் தேவையானவர் என்பதை எப்படியாவது அறிவோம் (லூக்கா 19:3-4). நம்முடைய கலகம் மற்றும் பிரச்சனைகளின் மத்தியில் தேவன் எவ்வாறு நம்மிடம் வருகிறார் என்பதை வேதம் திரும்பத் திரும்ப விவரிக்கிறது. ஏதேனில், ஆதாமும் ஏவாளும் தங்களை மறைத்துக் கொண்டும், குழப்பமடைந்தும் இருக்கையில் தேவன் அணுகி வருகிறார் (ஆதியாகமம் 3:8-9). மேலும் இஸ்ரவேல் மீண்டும் மீண்டும் அவரை விட்டு ஓடுகிறது (சங்கீதம் 78:40), ஆனாலும் தேவன் அவர்களை தன்னிடமாய் இழுத்துக்கொள்கிறார். இறுதியாக, தேவனின் மீட்புக்கான இறுதி ஆதாரமான இயேசு, சீரான வாழ்க்கை உடையவர்களுக்காக அல்ல, மாறாக அதை சிதைத்து கொண்டவர்களுக்காக வருகிறார். இயேசு “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” (லூக்கா 19:10).
வாழ்க்கையின் கடல் அலைகளுக்கு மத்தியில் நாம் சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், தேவன் அவற்றில் நம்முடன் இருப்பதாக வாக்களிக்கிறார். பாவம் மற்றும் மரணத்திலிருந்து (வ. 9; எபேசியர் 2:4-8) நம்முடைய உறுதியான இறுதி மீட்பை இயேசு அளித்திருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளுகையில் நம்பிக்கை பிறக்கிறது.
– வின் கோலியர்
எதிலே உங்களுக்குத் தேவனின் மீட்பு தேவை? நீங்கள் எங்கே தொலைந்துவிட்டீர்கள்? தேவனின் மீட்புக்கும் உதவிக்கும் உங்களை அர்ப்பணிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
அன்பு தகப்பனே, எனக்கு நானே உதவ முடியாமல் ஆழமான சிக்கலில் உள்ளேன். யாராகிலும் எனக்கு உதவ முடியும் என்றும் தோன்றவில்லை. ஆனால் நீர் இழந்துபோனதைத் தேட வந்தேன் என்கிறீர். நான் இங்கு இருக்கிறேன். தயவு செய்து வாரும்.
1 அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின்
வழியாக நடந்துபோகையில்,
2 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த
சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க
வகைதேடினான். அவன் குள்ளனானபடியால்,
ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப்
பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து,
அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா,
இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே
அவரை அழைத்துக்கொண்டு போனான்.
7 அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான
மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார்
என்று முறுமுறுத்தார்கள்.
8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே,
என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்,
நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய்
வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச்
செலுத்துகிறேன் என்றான்.
9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த
வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும்
ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே
மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்
|
|