கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர்.

ஆகையால் பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும்.

கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில்தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.

சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.

சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.

அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.    ~ Isaiah 25:1-9

வரவிருக்கிற விடுமுறை நாட்களைக் குறித்து ஸ்காட் சற்று கவலையுற்றிருந்தார். மீந்திருக்கிற சில பண்டங்களை சாப்பிட்டுவிட்டு, தனியே உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்து கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிக்கவேண்டும் என்று அறிந்தார். தன்னுடைய தனிமையை போக்க எண்ணிய ஸ்காட், தன்னைப் போன்றே தனிமையாய் இருப்பவர்கள் தன்னோடு விருந்தில் பங்கேற்குமாறு செய்தித்தாளில் விளம்பரப்படுத்தினார். அவருடைய அந்த அழைப்பை ஏற்று, பன்னிரண்டு பேருக்கு குறையாமல் வந்திருந்தனர். அது 1985ஆம் ஆண்டு. அந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதே போன்ற ஒரு விளம்பரத்தைப் பிரசுரித்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை விருந்துக்கு அழைத்து, அவர்களுடனான சந்திப்பை திருச்சபை வளாகத்தில் ஆயத்தப்படுத்தினார். ஆதரவற்றவர்கள், தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு போக முடியாதவர்கள் என்று எல்லோரும் விருந்துண்ணுவதற்கு ஏற்ற பெரிய மேஜையை ஒழுங்குசெய்திருந்தார்.

ஏசாயா, வழிப்போக்கர்களையும், திக்கற்றவர்களையும் ஆதரிக்கும் தெய்வீக சிந்தையை விவரிக்கிறார். அவர், “ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனு(மாயிருக்கிறார்)” (25:4). அவரிடத்தில் அன்பு, மன்னிப்பு, நம்பிக்கை ஆகியவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். ஒரு நாள் “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்” (வச. 6). தேவன் எல்லோருக்கும் அழைப்பு கொடுத்து, தன்னுடைய பெரிய விருந்தில் பங்கேற்குமாறு அனைவரையும் வரவேற்கிறார். சிநேகிதர்கள் அந்த கிருபையின் மேஜையை சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்.

இதை நமக்காக செய்வதாக வாக்குப்பண்ணிய நம்முடைய தேவனுடைய இருதயம் இதுவே. நாம் தனிமையின் பாரத்தினால் சோர்ந்துபோயிருக்கலாம். ஆனால் தேவன் நமக்கு கிறிஸ்துவின் மூலமாய் அழைப்பு விடுக்கிறார். நாம் சாதாரணமாய் வந்து அமர்ந்து அந்த பந்தியில் நமக்கான இருக்கையை கண்டறிந்து, விருந்தில் பங்கேற்கமுடியும்.

– – வின் கோலியர்

எல்லா ஜனங்களுக்கும் பொதுவாய் ஒழுங்குசெய்யப்பட்ட விருந்தில் நீங்கள் எப்போதாவது பங்கேற்றதுண்டா? ஏசாயாவில் சொல்லப்பட்டுள்ள இந்த காட்சி, தேவனை எந்த விதத்தில் சித்தரிக்கிறது?

தேவனே, நான் தனிமையாய் உணருகிறேன். தனிமையாய் இருக்கும் மற்றவர்களையும் அறிந்திருக்கிறேன். நாங்கள் உம்முடைய பந்தியில் பங்கேற்க விரும்புகிறோம். உம்முடைய விருந்தில் பங்கேற்று, சிரித்து மகிழ்ந்திருக்க விரும்புகிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி.