கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.

கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.

அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.

பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.

கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.

அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். ~ சங்கீதம்8

“ஜாய் டூ த வேல்ர்ட்…” (Joy to the world) என்ற ஆங்கில பாடலின் நடு வரியை பாடிய மெய்ஃபேங் அப்படியே தன் பாடலை நிறுத்தினாள். அவளுடைய சிந்தையில் அவளுடைய அம்மாவின் நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அவளுடைய அம்மாவும் அவளுடன் சேர்ந்து இந்த பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் தற்போது உயிரோடு இல்லை. ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். மெய்ஃபேங்கைப் பொருத்தவரையில், கிறிஸ்துமஸ் என்பது எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை. கவலையோடும் வேதனையோடும் இருக்கும்போது கிறிஸ்துமஸை கொண்டாடுவது கடினம்.

மெய்ஃபேங்கைப் போல நீங்களும் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் கவலையோடும் வேதனையோடும் இருக்கலாம். உங்களுடைய இருதயம் வேதனையினால் நிறைந்திருக்கும்போது, நீங்கள் மகிழ்ச்சியின் பாடலைப் பாடுவது எப்படி? அந்த ஆங்கில பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் என்பவர் அப்பாடலை கிறிஸ்துமஸ் பாடலாக எழுதவில்லை; மாறாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நம்பிக்கையை பிரதிபலிக்கும்பொருட்டு அப்பாடலை இயற்றினார். தேவனுடைய கிருபையையும் உண்மையையும் பிரதிபலிக்கும் சங்கீதம் 98ஐ அடிப்படையாய் கொண்டு இப்பாடல் இயற்றப்பட்டது (வச. 3). அவர் நம்மை இரட்சிப்பதற்காகவும் (வச. 1), இரட்சிப்பை பிரஸ்தாபமாக்கி, நீதியை வெளிப்படுத்துவதற்காகவும் வந்தார் (வச. 2). அவர் பூமியை நியாயந்தீர்க்க நீதியோடும் நிதானத்தோடும் மீண்டும் வரப்போகிறார் (வச. 9). இதுவே மகிழ்ச்சியின் பாடலை நாம் பாடுவதற்கான முகாந்திரம்.

இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களில் ஒருவேளை நீங்கள் கவலையுற்றிருந்தால், கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் நிலைவரப்படுங்கள். அவர் இப்போதைக்கு மட்டும் நம்பிக்கையை கொடுக்கிறவராயிராமல், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும் நமக்கு உறுதியளிக்கிறார். இயேசு மீண்டும் வரும்போது நம்முடைய கண்ணீரையும் கவலையையும் பூரணமாய் மாற்றுவார் (வெளி. 21:4).

போ ஃபாங் சியா

இயேசு முதல் வருகையின் போது சாதித்த எந்த காரியத்திற்காய் நீங்கள் தற்போது மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும்? அவருடைய இரண்டாம் வருகையில் எந்த மகிழ்ச்சியான நம்பிக்கையை நீங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கலாம் ?

பரலோகப் பிதாவே, நீர் ஆச்சரியமான நன்மைகளை எனக்கு செய்தபடியால், நான் உமக்கு மகிழ்ச்சியின் பாடலைப் பாடுகிறேன்!