அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.

அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய்,

ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,

எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:

நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.

அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான். ~ மத்தேயு 2:13-21

இர்விங் பெர்லின் என்பவருக்கு கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி அல்ல, துக்கம். “ஒயிட் கிறிஸ்துமஸ்” என்ற பாடலை இயற்றிய இவர், 1928ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தன்னுடைய பிள்ளையை பறிகொடுத்தார். அவருடைய ஏக்கம் நிறைந்த இந்தப் பாடல், கடந்த கால விடுமுறை நாட்களின் மகிழ்ச்சியை திரும்பத் தேடும் பாடலாய் இயற்றப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது வீடு திரும்பமுடியாத இராணுவத்தினரிடையே இப்பாடல் மிகவும் பிரபலமடைந்திருந்தது.

சொப்பனங்களும் வியாகூலங்களும் கிறிஸ்துமஸ் கதையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. தேவ தூதன் சொப்பனத்தில் தோன்றி, யோசேப்புக்கு இயேசுவின் ஆச்சரியமான பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கிறான் (மத்தேயு 1:20). மற்றொரு சொப்பனத்தில் ஞான சாஸ்திரிகளுக்கு தேவ தூதன் சொப்பனத்தில் வெளிப்பட்டு, ஏரோதைக் குறித்து எச்சரிக்கிறான் (2:12). குழந்தை இயேசுவோடு எகிப்திற்கு ஓடிப்போகும்படி தேவ தூதன் மீண்டும் யோசேப்புக்கு சொப்பனத்தில் வெளிப்பட்டு எச்சரிப்பு செய்கிறான் (வச. 13).

கிறிஸ்துமஸின் சொப்பனங்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் சோகம் என்பது அழையாத விருந்தாளியாய் நம்மை விடாமல் தொற்றிக்கொள்கிறது. ராகேல் அழுகிறாள் (வச. 17). முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்ட வேளையில், மதியீனமான இந்த ராஜா சிறு பிள்ளைகளை கொலை செய்கிறான் (வச. 16). இஸ்ரவேலின் தாயாய் கருதப்பட்ட ராகேல், மத்தேயு சுவிசேஷத்தில், தேசத்தின் துயரத்தை பிரதிபலிக்கிறாள்.

இந்தக் கதையில், இந்தக் காட்சி இல்லாமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும் என்று நாம் விரும்புகிறோம். இது போன்ற பிரம்மாண்டமான கதைகளில் ஏன் இப்பேர்ப்பட்ட சோக சம்பங்கள் இடம்பெறுகிறது?

அவை எல்லாவற்றிற்கும் நிறைவான பதில், இயேசுவே. பெத்லகேமின் அந்த துயர சம்பவத்திலிருந்து தப்பித்த அந்தக் குழந்தை, தம் மரணம் வரையிலான அத்தனை இக்கட்டுகளிலிருந்தும் தப்பித்து, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாய் கடைசியாய் நமக்காக மரணத்திலிருந்தும் தப்பித்து, ஜெயமெடுத்தார். மற்றொரு கிறிஸ்துமஸ் பாடல் இப்படியாய் சொல்லுகிறது: “அந்த இரவில் தாமே, நம் வாழ்நாளின் அனைத்து பயங்களும் அகற்றப்பட்டு, நம்பிக்கை வேரூன்றியது.”

டிம் கஸ்டாப்சன்

எந்தக் கிறிஸ்துமஸ் பாடல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? ஏன்? இந்தக் கிறிஸ்துமஸில் உங்களுடைய துக்கத்தை அறிந்து, அதே வேளையில் கிறிஸ்துமஸை எவ்வாறு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்போகிறீர்கள்?

பரலோகப் பிதாவே, என்னுடைய கிறிஸ்துமஸ் எப்போதும் சோகத்தினால் நிறைந்திருக்கிறது. இதுவரை நான் பார்த்திராத வகையில் இந்தக் கிறிஸ்துமஸை எனக்கு மகிழ்ச்சியாய் மாற்றித் தாரும்.