தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.

மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.

கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.

மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.~ நீதிமொழிகள் 11:17-25

கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் சில தினங்களே உண்டு. என்னுடைய மனைவி கேரி, சூப்பர் மார்க்கெட்டின் பணம் செலுத்தும் வரிசையில் நின்றிருந்தாள். அவளுக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த மூதாட்டி ஒருவர் அவருடைய கூடையில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பொறுமையற்றிருந்த கேரி, பின்பு கரிசனையோடு அணுக நேர்ந்தது. ஏனென்றால் அந்த மூதாட்டியிடம் பொருட்களை வாங்குவதற்கான போதிய பணம் இல்லை என்பதை நிதானித்துக் கொண்டாள்.

“அவற்றிற்கு நான் பணம் செலுத்துகிறேன்” கவுண்டரில் நின்றிருந்தவரிடம் கூறினாள். ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்த அந்த மூதாட்டி, “அதற்கான தொகை மிகவும் அதிகம்!” என்றாள். தன் மகளுக்கு தேவையான பலசரக்குகளை வாங்குவதற்கு பல மைல் தூரம் கடந்து வந்திருந்த அந்த தாயாரின் சிரமத்தைப் புரிந்துகொண்டு, கேரி தானாக முன்வந்து அந்த பணத்தை செலுத்தினாள். இருவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். இருவரும் கண்ணீர் மல்க அந்த மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்தனர்.

தேவனுடைய குமாரன் மூலமாக, தேவனுடைய இரக்கத்தையும் தயாள குணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் நம் வீடுகளில் ஏற்கெனவே வந்துவிட்டது. தாராள மனதுடையவர்களைக் குறித்து சாலொமோன் சொல்லும்போது, “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதிமொழிகள் 11:25) என்று சொல்லுகிறார். இனி வரும் நாட்களில், நம்முடைய பெரிய தேவையாகிய இரட்சகரை நமக்கு கொடுத்த தேவனுடைய பிரம்மாண்டமான பரிசை எண்ணி, அவர் மூலமாய் நம்முடைய இருதயத்தில் பாய்ந்தோடும் அன்பை மற்றவர்களோடு நாம் எவ்விதத்தில் பகிர்ந்துகொள்கிறோம் என்பதை கண்ட நாம் புத்துணர்வடைவோம்.

தயவு என்பது பரவக்கூடியது. இயேசு கிறிஸ்து நமக்கு தயவு காண்பித்ததனால், நாமும் மற்றவர்களுக்கு உதாரத்துவமாய் கொடுத்து மற்றவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தப் பிரயாசப்படுவோம்.

– ஜேம்ஸ் பேங்க்ஸ்

உங்களைச் சுற்றியிருக்கும் சந்திக்கப்படவேண்டிய அத்தியாவசியமான தேவை எது? தேவனுடைய இரக்கத்தை நடைமுறை காரியங்களில் எவ்விதம் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?

என்னுடைய தேவையை அறிந்து, உம்முடைய குமாரனை எனக்காக அனுப்பியதற்காய் உமக்கு நன்றி தகப்பனே. மற்றவர்களுக்கு தாராளமாய் உதவிசெய்வதன் மூலம் உம்முடைய அன்பை பிரதிபலிக்க எனக்கு உதவிசெய்யும்.