அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். மத்தேயு 2: 10-11
நான் வளரும்போது, மாதங்களில் டிசம்பர் மாதம் தான் எனக்கு மிக பிடித்த மாதமாக இருந்தது. டிசம்பர் மாத முதல் நாளுக்காக நான் எப்போதுமே காத்திருப்பேன். நான் பள்ளியிலிருந்து துள்ளிக்குதித்து வீடு திரும்பும் போது, என் இதயமும் என்னுடன் சேர்ந்து ஆர்வத்துடன் துள்ளும், ஏனெனில் எனக்கு நன்றாக தெரியும் எனக்காக என்ன காத்துக்கொண்டிருக்கிறது என்று – அழகிய நட்சத்திர வடிவ காகித விளக்கு. ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் தான் நாங்கள் அதை சந்தையில் வாங்கினோம். நட்சத்திரத்தை மேலே தொங்கவிட என் தந்தை என்னை அவர் தோளின்மேல் ஏற்றியபோது, என் இருதயம் ஆர்வத்தில் துள்ளியது. நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்கள் குடும்பம் மட்டுமே கிறிஸ்தவ குடும்பமாக இருந்தது, எனவே அனைத்து அண்டைவீட்டு குழந்தைகளும் அந்த நட்சத்திரத்தை நோக்கி உற்றுப்பார்க்க எங்களிடத்தில் கூடினர். அந்நட்சத்திரம் தன் எல்லா மகிமையிலும் பளபளத்தது. அது பல லட்சக்கணக்கான வண்ண வடிவங்களை தரையிலே ஒளிபரப்பியது, ஒவ்வொரு நாளின் இரவிலும் நான் அதை மகிழ்ச்சியுடன் ஒளிரச்செய்தேன்.
இந்த சந்தோஷமானது, ஞானிகள், அந்த நட்சத்திரம், மேசியாவை கிடத்தி இருந்த இடத்திற்கு மேலாக நின்றிருப்பதை கவனித்தவுடன் ஏற்பட்ட உணர்வுக்கு எந்தவகையிலும் ஒத்திருக்குமா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அவர்கள் வானத்தை பல வருடங்கள் படித்திருக்கிறார்கள், மனுக்குலத்தை ரட்சிக்க வரப்போகும் அந்த ஒருவரை பற்றிய தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்திருந்தார்கள். கடினமான பயணத்திற்கு பிறகு கிறிஸ்து என்னும் குழந்தையை பார்த்து அவர்கள் உறைந்திருந்தார்கள், கிறிஸ்துவுக்கு சில அடி தூரத்தில் இருந்தனர். அவர்கள் வீட்டினில் நுழைந்தவுடன், கிறிஸ்துவை பணிந்து தொழுதனர்.
நம்முடைய குடிலிலோ அல்லது நம் பால்கனியிலேயோ நட்சத்திரம் வெளிச்சமாக பிரகாசிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம், ஆனால் நம் வாழ்க்கையின் பிரகாசமான சாட்சி அதை விட அதிகமாக கவரக்கூடியது. இயேசு தன்னை பின்தொடர்பவர்களிடம், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14) என்று சொன்னார். நம்முடைய சுற்றத்தார் மற்றும் நம்முடைய நண்பர்கள் இந்த காலத்திலும், மற்ற நேரத்திலும் கூட நம்மை காணும்போது நம் வாழ்க்கையில் ஒளி காட்சியளிப்பதை அவர்கள் காண்கிறார்களா? தயவு, அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு போன்ற கிறிஸ்துவின் குணாதிசய பண்புகளை மறைத்திருக்க முடியாது. நம் சுற்றத்தார் இந்த காட்சியை காணும்போது அவர்கள் நம் இல்லத்தில் நுழைவார்கள், இந்த காலத்தின் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, நாம் பின்பற்றும் பண்புகளுக்குரிய தேவனை கனப்படுத்தி, அவரை தொழுக்கொள்ள வருவார்கள். நம் அனைத்து கனத்திற்கும் பாத்திரர் அவரே.
அன்புள்ள பிதாவே, என் வாழ்வின் ஒளியின் மூலமாக மற்றவர்களை உமக்கு நேராக வழிநடத்துவேனாக; இந்த காலத்திலும் மற்றும் எப்பொழுதும் என்னுடைய செயல்கள் மற்றும் வார்த்தை உம் ஒளியை வெளிப்படுத்திக் காண்பிப்பதாக. ஆமென்.
– ரெபேக்கா விஜயன்