புதிய நம்பிக்கையின் தேர்வு

“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் …. நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு.” ~ உபாகமம் 30:19

 

ஊரடங்கு முதலில் அறிவிக்கப்பட்டபோது எல்லாமே புதிதாக தோன்றியது. திடீரென வாழ்க்கை ஸ்தம்பித்ததினால் வழக்கமான செயல் முறைகள் பாதிக்கப்பட்டன. ஆயினும் இரண்டு மாதங்களும் நான்கு ஊரடங்கு நீடிப்புகளும் கடந்த பின் இப்பொழுது ஒரு புதிய இயல்பு நிலையை தழுவி உள்ளோம். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த காலகட்டத்தில் தேவனுடைய வேதத்திலிருந்து நம்பிக்கை பெற முயற்சித்தோம். வேதத்தில் காணப்படும் தேவன் நமக்கு அடைக்கலம், கோட்டை, ஆறுதல், நம்மை பராமரிக்கிறவர் போன்ற வாக்குத்தத்தங்களால் நம்மை உற்சாகப் படுத்திக்கொண்டோம். நல்ல வேலையிலும் அல்லது போதுமான பணம் வங்கி கண்ணக்கில் இருபவர்களுக்கு தேவனை நம்பி பயணிப்பது எளிதாக இருக்கும். ஆனால் ஒரு வேளை உணவுக்காக தத்தளிப்பவர்களுக்கோ தேவனை சார்ந்து பயணிக்க எல்லாவிதமான ஊக்கமும் தேவைப்படுகிறது. 

 

தேவனுடைய பலத்த கரத்தினால் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவர்களும் ஒரு புதிய பயணத்தில், அறியாத பாதையில் தடுமாறினார்கள். ஆய்வாளர்களாக அவர்களுக்கு முன் அனுபவம் இல்லை, யுத்தத்திற்கு பயிற்சி பெறவில்லை, அடிமைகளாக அடக்கப்பட்ட ஆண்டுகள், இஸ்ரவேலர்களுக்கு ஒரு நிச்சயமற்ற தன்மை, பயம், சந்தேகம் மற்றும் சச்சரவு போன்ற உணர்வுகளை அவர்களுக்குள் பதித்தன, வனாந்திர வாழ்க்கையின் கடினங்கள் அவர்களை மூழ்கடித்தன. அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்ற கேள்வி அவர்களின் நம்பிக்கைக்கு ஒரு சவாலாக இருந்தது. எகிப்தின் வாதைகளில் இருந்து அவர்கள் மயிரிழையில் தப்பிய விதம் கூட தேவன் மேல் நம்பிக்கை வைப்பதை எளிதாக்கவில்லை. அவர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுக்குள் பேசிக்கொண்டபோது சந்தேகம், விரக்தி, பயம் நிறைந்த வார்த்தைகளைத்தான் பகிர்ந்து கொண்டார்கள், இதனால் மனச்சோர்வும் அடைந்தார்கள்: அவர்களை வழி நடத்திய மோசேயை நம்பலாமா? 400 வருடங்களுக்கு பிறகு அவர்களுடைய பிதாக்களின் தேவன் அவர்களை நிச்சயமாகத்தான் மீட்க வந்தாரா? எதிர்காலத்திற்கு ஒரு திட்டம் இருக்கிறதா? இந்த பாலைவனத்தில் போகும் வழி யாருக்காவது தெரியுமா?

 

அவர்களுடைய உடனடி கவலைகள் புதிய சுதந்திரத்தை அனுபவிப்பதை தடுத்தன. எகிப்தில் அவர்கள் கொடூரமாக நடத்தப்பட்டனர்; அவர்களுடைய குழந்தைகள் நைல் நதியில் கொல்லப்பட்டனர்; ஊதியம் இல்லாமல் அடிமைகளாக வேலை செய்தனர். ஆனால் இப்பொழுதோ இந்த புதிய பயணத்தை பற்றிய கலக்கங்கள் தங்கள் குடும்பங்களோடு ஆறுதலாக நேரத்தை அனுபவிப்பதை தடுத்தது. தங்கள் தலைவருக்கு எதிராகவும் ஆண்டவருக்கு எதிராகவும் முறுமுறுத்தார்கள். தங்களுடைய அடிமைத்தனத்தில் அவர்கள் தேவனை நோக்கி தாம் ஆபிரகாமுக்கு செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கதறினதுண்டு. தேவன் தங்களை பாலும் தேனும் ஓடும் நாட்டிற்கு அழைத்துச் செல்வார் என்று நம்பியிருந்தார்கள். ஆனால் இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தை நோக்கி செல்லும் வழியில் கவலை அவர்களை ஆட்கொண்டன . நாம் எங்கே வாழ்வோம்? தேசத்தை நம்மால் கைப்பற்ற முடியுமா? தேவனிடத்தில் தங்களுடைய எதிர்காலத்தை ஒப்பு விப்பதைவட எகிப்து நாட்டின் கொடூரங்கள் இலகுவாக தோன்றியது. அவர்கள் அனைவரும் எகிப்தில் சிந்திய கண்ணீரை மிக விரைவில் மறந்தார்கள். இக்கரைக்கு அக்கறை பசுமையாக தோன்றியது.

 

நம்முடைய தற்போதைய அனுபவத்திற்கும் இஸ்ரவேலருடைய வனாந்தர அனுபவத்திற்கும் வித்தியாசம் அவ்வளவு இல்லை. இந்த ஊரடங்கு நாட்கள் நமக்கும் பாலைவனம் மாதிரிதான். இந்த காலத்தில் விதிமுறைகளும் காட்சிகளும் வித்தியாசமாக இருக்கலாம். ஆனாலும் ஒருவிதத்தில் அவைகள் இஸ்ரவேலருடைய வனாந்தர அனுபவத்திற்கும் ஒப்பாகவேஇருக்கிறது. நாமும் கூட நம்முடைய இருதயங்களில் முணுமுணுத்து இருக்கிறோம். ஏன், சில சமயங்களில் வெளியரங்கமாய் கூட நம்முடைய நிச்சயமற்ற தன்மைகளை பற்றியும், எதிர்காலத்தைக் குறித்த பயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறோம். வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்யும் சிலாக்கியம் திடீரென்று ஒரு சுமையாக தெரிகிறது சிலமாதங்களுக்கு முன்பாக வேலைக்குப் போவதுதான் அப்படி இருந்தது. ஆனால் ஆண்டவருடைய வாக்குகளுக்காக அவருக்கு நன்றி. இஸ்ரவேலரை கானானுக்கு வழி நடத்தினவர் இந்தப் பயணத்தில் நம்மோடு வருவேன் என்று மொழிந்திருக்கிறார். அவரே நம்மை தாங்குகிறவர். நம்முடைய வாழக்கை பாதையிலும் நம்முடன் பயணிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆகவே நாம் இஸ்ரவேலரை போல இராமல் தேவன் மேல் நம்பிக்கை கொள்ளுவோம்.

 

முணுமுணுத்து புகார் செய்வதைவிட அவரைத் துதிக்க தேர்ந்தெடுபோம்,

காரியங்கள் தெளிவற்று தோன்றினாலும் அவருக்கு நன்றி கூற தேர்ந்தெடுபோம்,

நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு நம்பிக்கையளிக்க தேர்ந்தெடுபோம்,

நேரம் இங்கே இருக்கும்போது அவருடைய சமூகத்தில்
இருக்க காத்திருப்போம்.

 

தேவைப்படும் யாருக்காவது நாம் இன்று ஊக்கம் தரும் உதவி கோலாக காணப்படுவோம். அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் பரப்புவோம். 

– ஜாண் துரைசாமி