வாசியுங்கள்: யோபு 4:12-15

திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது (வச.14).

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், நாஜி படுகொலையில் இருந்து 669 குழந்தைகளை மீட்ட ஓர் மனிதர் – செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து தப்பிச் செல்லும் ரயிலில் இரண்டு யூதச் சிறுவர்களுக்கு உதவினார். போர் முடிந்த பின்பு, வதை முகாமில் இறப்பதற்கு முன்னர் பெற்றோர் எழுதிய இறுதிக் கடிதத்தை அச்சிறுவர்கள் பெற்றனர்.

இங்கே சில வரிகள்: நேரம் வந்துவிட்டது. . . நீங்கள் நல்ல மனிதர்களாக இருக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். . . . உனது ஏழைப் பெற்றோரின் இதயங்களில் ஒரு பகுதியை எடுத்துச் சென்றீர்கள். . . . எங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரின் கடினமான விதியைப் பற்றி [நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்]. நாங்களும் தப்பிக்கமாட்டோம், கடவுள் சித்தமானால் உங்களை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் தைரியமாக தெரியாத இடத்திற்குச் செல்கிறோம். எங்களை மறந்துவிடாதீர்கள், நல்லவர்களாக இருங்கள்.

அந்த வரிகளை எழுதும்போது பெற்றோர்கள் அனுபவித்த வேதனையையும், அவற்றைப் படிக்கும்போது சிறுவர்கள் படும் வேதனையையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இந்த துயரத்தைத் தணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

இருப்பினும், இந்த வகையான வேதனையை வேதாகமம் புறக்கணிக்கவில்லை என்பதை நான் அறிவேன். மிகவும் வேதனையான ஓர் கதையில், யோபு தனது குழந்தைகளையும், செல்வத்தையும், கடவுளுக்குப் பயந்த மனிதனாக இருந்த நற்பெயரையும் எவ்வாறு இழந்தார் என்பதை வேதம் விவரிக்கிறது (யோபு 1:14-19, 22:4-5). அவருடைய அழிவு மிகப் பெரியதாக இருந்தது, அவருடைய நண்பர்கள் அவரைச் சந்திக்க வந்தபோது, அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை (2:12).

யோபு மிகுந்த குழப்பத்தையும் துக்கத்தையும் சகித்தபோதிலும், யோபு தன் சிருஷ்டிகரிடமிருந்து பின்திரும்ப மறுத்துவிட்டார். அவர் தனது “ஜனனத்தை சபித்த போதிலும்”, “தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்” (2:9) என்று அவரது மனைவி அவரைத் தூண்டியபோதும் அவர் கடவுளை நிராகரிக்கவில்லை. ஆசீர்வாதங்களைப் போலவே கடவுள் நெருக்கங்களிலும் இருப்பதாக யோபு விசுவாசித்தார் (1:21).

யோபுவைப் போலவே, நம்மில் பலர் பயங்கரமான துயரங்களைச் சந்திப்போம், ஆனால் அங்கேயும் கடவுள் நம்முடன் இருப்பார். நாம் கஷ்டங்களையும் விரக்தியையும் சந்திக்க நேரிடலாம், மேலும் நம்மிடம் பதில்கள் அல்லது ஆறுதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தெரியாத இருளிலும் கடவுள் நம்முடன் இருக்கிறார் (ரோமர் 8:38-39).

-வின் கோலியர்

மேலும்

லூக்கா 24:1-12ஐப் படித்து, இந்தக் கதை நம் இருண்ட அனுபவங்களை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கவனியுங்கள்.

அடுத்தது

தெரியாத இருட்டாக இருக்கலாம் என்று நீங்கள் அஞ்சும் வகையில் உங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது? கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவதன் அர்த்தம் என்ன?