தனது ஏமாற்றங்களிலிருந்து தன்னை விடுவிக்க முயன்ற ஒருவர், இணையத்தில் தனது பொருட்களை ஏலம் விட முடிவு செய்தார். அவர், “எனது உடைமைகள் அனைத்தும் விற்கப்படும் நாளில், எனது பணப்பை மற்றும் கடவுச்சீட்டுடன் எனது முன் வாசல் வழியே வெளியேற விரும்புகிறேன், வேறு எதுவும் வேண்டாம்” என்றார். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் அவர் தனது தாயைப் பார்க்கத் திட்டமிட்டார். “வாழ்க்கை என்னை அங்கிருந்து எங்கே அழைத்துச் செல்கிறது என்று பார்க்கிறேன். இது பழையதைக் களையவும் புதியதை அணிவதற்கான நேரம்!” என்றார்.

நாம் அனைவரும் வாழ்க்கையின் ஏமாற்றங்களை அறிவோம். ரோமாபுரியிலுள்ள இயேசுவின் விசுவாசிகளை ஊக்குவிக்க, அப்போஸ்தலன் பவுல், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1) என்று இயேசுவின் மரணத்தினால் விளைந்ததை நினைவுகூரச் சொன்னார். இந்த தேவசமாதனம் அனைத்து விசுவாசிகளையும் “நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (வ.5) என்பதனை அனுபவித்திடச் செய்திடும். மேலும், போராட்டங்களைக் கண்டு ஓடாமல், அதை எதிர்கொள்ள இது உதவுகிறது. “உபத்திரவங்கள்” பொறுமையையும், பரீட்சையையும், நம்பிக்கையையும் (வ. 3-4) நமக்குள் உண்டாக்கும் என்றெழுதினார். தேவனின் பிரசன்னம், அவர் நம்மை நேசிக்கிறார் மற்றும் பரிசுத்த ஆவியின் மூலம் நம்மைப் பலப்படுத்துவார் என்ற உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது (வ.5). மேலும் அவருடைய அன்பும், ஆவியானவரின் பிரசன்னமும் அவர்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்ற உறுதியை அளிக்கிறது (வ.8).

இயேசுவின் விசுவாசிகளாக, நம்முடைய ஏமாற்றங்களிலிருந்து விலகி ஓடுவதை விட, அவைகளினூடே தேவன் நம்முடன் வருகிறார் என்பதை அறிந்து, நாம் அவைகளில் மகிழ்ச்சியடைவோம்.

-மார்வின் வில்லியம்ஸ்

சமீபத்திய ஏமாற்றத்திற்கு உங்களது முதல் எதிர்வினை என்னவாயிருந்தது? ஏமாற்றங்களைச் சந்திக்கும்போதும் தேவன் மீது உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த எது உதவும்?

அன்பு தேவனே, வாழ்க்கையில் கடினமான மற்றும் ஏமாற்றமளிக்கும் நேரங்களை நான் எதிர்கொள்ளும்போது, ​​உம்மில் நம்பிக்கை வைக்க எனக்கு உதவும்.

ரோமர் 5:1-11

1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே
நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில்
சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை
விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை
அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை
பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும்
உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு
நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்,
அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த
காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக
ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக
மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த
தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே
நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு
நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய
குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால்,
ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே
இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக்
கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும்
மேன்மைபாராட்டுகிறோம்.

ரோமர் 5:5

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது