வாசியுங்கள்: யோவான் 17:1-26

நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். (வ.16-17)

பல்வேறு சமூக ஊடக தளங்களை நம்மில் பெரும்பாலோர் நன்கு அறிந்திருக்கிறோம், ஆனால் முன்பின் அறிமுகமில்லாதவர்களும் கூட உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகளை ஒரு சமூக ஊடகத்தின் வாயிலாக முழுமையாக மதிப்பிட இந்த செயலிகள் அனுமதிக்கின்றன. இதனால் பாதிப்படைந்த ஒருவர் தன் நண்பரிடம், தன் இளைய மகள் இவர்களால் மோசமான மதிப்பீட்டைப் பெற்றதால் எவ்வாறு பாதிக்கப்பட்டாள் என்பதை பகிர்ந்துகொண்டார்.

இங்கிலாந்தில் உள்ள ராயல் சொசைட்டி ஃபார் பப்ளிக் ஹெல்த், இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் சமூக ஊடகங்களின் தாக்கத்தை ஆராய, ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த “சமூக ஊடகங்கள் மனநல பாதிப்பை அதிகப்படுத்துவது உண்மையே” என்றும் பரிந்துரைத்தது. பெரும்பாலான காரியங்களைப் போலவே, சமூக ஊடகங்களும் நன்மைக்கு ஏதுவான ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்படலாம், ஆனால் அதனால் வரும் ஆபத்துக்களிலிருந்து தப்பிக்க ஞானம் அவசியம்.

இயேசு மரிப்பதற்கு முந்தைய கடைசி மணிநேரங்களில், இந்த உலகத்தின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து தம்மைப் பின்பற்றுபவர்களின் ஜெயத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஜெபித்தார் (யோவான் 17:1-26). பிதாவாகிய தேவனைப் பற்றி அறிகிற அறிவில் நாம் வளர வேண்டும், அவரில் முழுமையாகத் திருப்தியடைய வேண்டும், மற்றும் அவரில் சந்தோஷத்தை நிறைவாய் அடையவேண்டும் என அவர் விரும்பினார் (வ.13). இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தும் தீய வல்லமைகளுக்கு நாம் சொந்தமில்லை என்றாலும், நம்மை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி இயேசு ஒருபோதும் தேவனிடம் கேட்கவில்லை. மாறாக, தீயவனிடமிருந்து நம்மைக் காக்கும்படி ஜெபித்துக் கொண்டே நம்மை உலகத்திற்குள் அனுப்புகிறார். “நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்” (வ.18-19).

நாம் தேவனோடு கொண்டுள்ள உறவின் விளைவே, நமது பொலத்தின் ஆதாரமாக உள்ளது (வ.21). உலகம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் அன்பையும் ஒற்றுமையையும் காணும்போது, அது இயேசுவின் பிரதிபலிப்பையும் அவருடைய ராஜ்யத்தின் கலாச்சாரத்தையும் காண்கிறது, மேலும் இதனால் உலகம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கவும் ஈர்க்கப்படலாம்.

இந்நாட்களில் சமூக கலாச்சார சோதனைகள் அனுதினமும் நம்மை அழுத்தி, தேவனுடைய வழிகளிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கின்றன. மாறாக, இயேசுவின் வல்லமையால், நாம் அவரில் ஐக்கியப்பட்டு அவரது பரிசுத்த வழிகளை நம் வாழ்வில் பிரதிபலிப்போமாக (வ.16-17).

—- ரூத் ஓ’ரெய்லி-ஸ்மித்

மேலும் அறிய

பிலிப்பியர் 4: 4-9 வாசியுங்கள், நம் சிந்தையை கிறிஸ்துவின் மீது வைப்பது என்றால் என்ன என்பதைத் தியானியுங்கள். மேலும் நற்கீர்த்தி மற்றும் புகழ் எதுவோ அவைகளில் கவனம் செலுத்தி, நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

அடுத்தது

உலகிற்கு உங்களை அடையாளப்படுத்த நீங்கள் யாருக்குச் செவிகொடுக்கிறீர்கள்?. மேலும் தேவனுடைய பிள்ளையாக உங்கள் அடையாளத்தை எவ்வாறு பலப்படுத்தலாம்?