நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.  ~ 2 கொரிந்தியர் 1 :3-4

கொரோனாவால் இறந்தவர்களுடைய மரண அறிவிப்புகளும் நினைவுகூரும் ஆரதனைகளும் முகநூல் (பேஸ்புக் பேஞ்) பக்கத்தில் வரிசையாக இருந்ததை நான் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு  தூரத்து உறவினர், ஒரு நண்பரின் தாய் மற்றும் ஆலயத்தில் அறிமுகமானவர் கொரோனாவால் பலியாகினர்.  அவர்களுடைய புகைப்படங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழப்பமான செய்திகளுடன் கலந்திருந்தன .  உத்திர  பிரதேசத்தின் வீதிகளில் வரிசையாகக் கிடக்கும் பிணங்கள், குஜராத்தின் மருத்துவமனைகளில்  ஆக்சிஜன் பற்றாக்குறையினால் அலறும் நோயளிகள் மற்றும் தினசரி அதிகரித்துக் கொண்டு போகும் மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றால் பிரமித்துபோய் உட்கார்ந்திருக்கும் போது ஒரு மோசமான செய்தி என்னை வந்து சேர்ந்தது.  எங்களைப் பிரிந்து வாழ்ந்துக்  கொண்டிருந்த எனது தந்தை மறைந்துவிட்டார்  என்று கேள்விப்பட்டேன்.  அவர் எப்படி இறந்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை.  எனது சிறுவயதிலேயே அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.  ஆனாலும் இந்த இழப்பு என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.  மரணமும் அதற்கான பயமும் எல்லா இடத்தையும் சூழ்ந்து திடீரென கொரோனா எல்லோரையும் தனிப்பட்ட விதத்தில் பாதித்தது.

இழப்பின் வேதனையை இயேசு அறிந்திருக்கிறார்.  லாசருவும் அவனுடைய சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் இயேசுவுக்கு அறிமுகமானவர்கள் மட்டுமல்லாது அதற்கும் அப்பாற்பட்ட நல்ல நட்புறவைக் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். (யோவான் 11:11)  பெத்தானியாவில் உள்ள அவர்களுடைய வீடு இயேசு இளைப்பாறும் இடமாக இருந்தது.  “ஆண்டவரே நீர் சிநேகிக்கிறவன் வியாதியாய் இருக்கிறான்” (யோவான் 11:3)  என்னும் செய்தி அவர் லாசருவின் மேல் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது.  மரியாளும் மார்த்தாளும் தங்களுடைய வாசலில் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் காத்துக்கொண்டிருந்தார்களா என்று யோசிக்கிறேன்.  அவர் வருவதற்கு சில நாட்கள் எடுக்கும் ஆனால் அவர் நிச்சயமாக வருவார்! அவருக்கு இந்நோயை குணப்படுத்துவது ஒரு சிறிய  விஷயம்.  குருடர்களையும் முடவர்களையும் அவர் தொட்டு குணப்படுத்தவில்லையா?  ஆனால் மணிநேரங்கள்  நாட்களாக நீடித்தன, அவர் இன்னும் வரவில்லை.

பிரச்சனைகளின் ஆரம்பத்தில் நாமும் இயேசு இடைப்படுவார் என்று காத்திருப்போம்.  நாட்கள் கடந்து  செல்ல நமது ஆவல் பதட்டமாகவும், பதட்டம் ஏமாற்றமாகவும் மாறுகிறது.  சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறும்போது “அவர் எங்கே?” என்று சிந்திக்கிறோம்.  இயேசு உண்மையாகவே நம்மில் கரிசனையாக இருக்கிறாரா என்று மனதில் விவாதிக்கிறோம்.  இதுவே இன்று உங்களுடைய இக்கட்டான நிலையானால் அவர் நிச்சையமாக வருவார் என்ற உறுதி உங்களுக்கு இருக்கட்டும்!

அவர் உங்கள் வெறுமையைப்பற்றி கரிசனை உள்ளவராக இருக்கிறார்.  

லாசரு இறந்து நான்கு நாட்களாகிவிட்டன.  மரியாளும் மார்த்தாளும் வெறுமையான இதயங்களோடு ஒரு காலியான வீட்டில் உட்கார்ந்திருந்தார்கள்.  திடீரென வெளியே “இயேசு வந்துவிட்டார்!” என்ற பரபரப்பான சத்தம் கேட்டது.  வராமலிருப்பதை விட சற்று தாமதமாக வருவது மேலானது (பெட்டெர் லேட் தான் நெவெர் ) என்ற ஆங்கில பழமொழியை கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இதற்கு எதிர்மாறான மனநிலையை தான் கொண்டிருந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.  இதனை மார்த்தாள் “ஆண்டவரே நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” என்று வெளிப்படுத்தினாள்.  இயேசு அவளை கண்டியாமல் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று மீண்டும் உறுதியளித்தார்.  அவர் அவள் தன்னை விசுவாசிக்கும்படி அவளுடைய இதயம் நம்பிக்கையால் நிரம்பத்தக்க வார்த்தைகளால் அவளை ஊக்குவித்தார்.  நீங்கள் அன்புகூறும் ஒருவரை இழந்திருக்காவிட்டாலும்  இந்த சர்வதேச தொற்றினால் ஏதோ ஒரு விதத்தில்  பாதிக்கப்பட்டு இழப்பையும் வெறுமையையும் சந்தித்திருக்கலாம்.  மார்த்தாளுக்கு தமது உயிர்ப்பிக்கும் பிரசன்னத்தை காண்பித்த அதே தேவன் நம்மோடும்  இருக்கிறார்.  அவர் நம்மேல் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.

அவர் உங்கள் உணர்வுகளைப்பற்றி அக்கரையுள்ளவர்.

லாசருவின் கல்லறையருகே வேதாகமத்தின் மிகச் சிறிய வசனம் எழுதப்பட்டது,  “இயேசு கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:35)  இன்னும் சில நிமிடங்களில் லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பப்போகிறார் என்பதை இயேசு  அறிந்திருந்தும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துயரத்தை உணரத் தவரவில்லை.  மனிதத் துன்பத்தின் வேதனை அவருடைய ஆத்துமாவை ஊடுறுவி அவர் கண்ணீர் விட்டார்.  மனிதனின் வீழ்ச்சிக்காக கண்ணீர் விட்டார், இழப்பின் வேதனைக்காக கண்ணீர்  விட்டார், மரணத்தின் கொடூரத்திற்காக கண்ணீர் விட்டார் மற்றும் அவர் மனிதகுலத்தின் மீத்துக்கொண்ட  அக்கரையினால்  கண்ணீர் விட்டார். நமது உணர்வுகளைக் குறித்து நாம் போலியாக இல்லாமல் நாம் உணர்வுகளில் பங்கேற்க அவர் விரும்புகிறார்.

அவர் உங்கள் நித்தியத்தைக்குறித்து அக்கரையுள்ளவர். 

இயேசு இந்த அற்புதத்தை செய்வதற்கான நோக்கம் யோவான் 11:4-ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  “இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது.” இயேசு முன்கூட்டியே லாசருவை குணப்படுத்தி ஒரு சிறிய அற்புதத்தை செய்திருக்கலாம்.  ஆனால் அவனை உயிர்ப்பித்து (ஒரு மகா பெரிய செயல்) வாழ்வை துவக்குபவர் என்பதை அவர் நிரூபித்தார்.  அப்போஸ்தலன் பவுல் தனது வாழ்க்கையின் கடைசி காலங்களில் இதைப்பற்றி  “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.” என்று கூறினார்  (பிலிப்பியர் 1:20). பவுல் விசுவாசித்த இந்த உலகவாழ்விற்கு அப்பாற்பட்ட உயர் நோக்கமான நித்தியவாழ்க்கை நமது நம்பிக்யையுமாகும்.  ஒரு வேளை  உங்கள் இழப்பு உங்களை தேவனுடைய வழிகளைக் குறித்து குழப்பமடையவும் கலக்கமடையவும் செய்திருக்கலாம்.  நீங்கள் தேடும் பதில் நித்தியத்திற்கு முன்பு வெளிப்படுத்தப்படாமல் இருக்கலாம் ஆனால்  நித்தியத்திற்கு அப்பால் இன்னுமொரு பக்கம் இருக்கிறது என்பதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தலாம்.

இந்த தொற்று நோயின் தாக்குதலால் நாம் கலங்கடிக்கப்பட்டிருக்கும் போதும் பல்வேறு வகையான இழப்புகளை சந்திக்கும் போதும் தேவனுடைய மாறாத தன்மையில் நமது விசுவாசத்தை வைப்போம்.  இளைப்பாறுதலின் தேவன் நம்மோடிருக்கிறார் என்னும் அறிவை உறுதியுடன் பற்றிக்கொண்டு அவர் நம்மேல் அக்கரையுள்ளவர் என்பதை அறிந்துகொள்வோம்.  

நமது வெறுமையைப்பற்றி அவர் அக்கறைப்படுவதால்  நம்  வெறுமையை அவர் பிரசன்னத்தினால் நிரப்புகிறார், நம் உணர்வுகளைப்பற்றி  அவர் அக்கறைப்படுவதால் நமது வலிகளை உணர்கிறார்,  எல்லாவற்றிற்கும் மேலாக நமது ஆத்துமாவை நித்திய வாழ்விற்கு பக்குவமாக தயார்படுத்துகிறார்.  இப்பொழுது ஆறுதல்படுத்தப்பட்ட நாம் கஷ்டத்திலிருக்கும் மற்றவர்களை ஆறுதல்படுத்த தேவனுடைய கைகளாகவும் அவருடைய குரலாகவும் அவருடைய இருதயமாகவும் செயல்படுவோம்.     

– ரெபேக்கா விஜயன்